நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#77
அவ்வளவுதான். வேறு வினையே வேண்டாம். மகேந்திரன் பயந்துவிட்டான்.

“அதெல்லாம் வேண்டாம். அம்மாவும் அப்பாவும் தூங்கறாங்கதானே? அதனால்தான் அமைதியா வரச்சொன்னேன்.”
“நாங்களும் தூங்கிட்டா உனக்கும் தூக்கம் வரும். அப்புறம் நீ வண்டியை எங்காவது விட்டுட்டா. நான் என்ன செய்யறது? இன்னும் எத்தனை வருடம் நான் வாழ வேண்டியிருக்கு? உன்னோட கவனமின்மையால் நான் அவதிப்படனுமா?”

அவன் பேசப்பேச மகேந்திரன் தலையில் அடித்துக்கொண்டான்.

“உச். நீ ஏன் இப்படி பேசறே யுகா. மாமாவும் அத்தையும் தூங்கறாங்கன்னுதானே உன் அண்ணா அப்படி சொன்னார்.”

கிசுகிசுப்பான குரலில் கிருஷ்ணவேணி கூறினாள்.

அதன் பிறகு இருவரும் சத்தம் வராமலே பேசிக்கொண்டு வர அதுவே மகேந்திரனுக்கு இடைஞ்சலாக இருந்தது.

“உங்க அண்ணா பாவம் யுகா. அவரே நீண்ட நேரம் வண்டியை ஓட்டிக்கிட்டு வர்றார்.”

அவனுக்கும் ஓய்வு முக்கியம் என்று அவனுக்கும் புரிந்தது. நாளைக்கு உடல்நிலையைக் காரணம் காட்டி அவன் விடுப்பு எடுத்துவிடுவான். ஆனால் மகேந்திரன் அப்படியில்லை.

இப்போது கொஞ்சம் நேரம் தூங்கினால்தான் ஓய்வு கிடைத்த மாதிரியிருக்கும்.

“அண்ணா.”

அவன் அழைப்புக்கு “என்ன?” என்று கேட்டான்.

“கொஞ்சம் வண்டியை நிறுத்தேன்.”

அவனும் வண்டியை நிறுத்தினான்.
யுகேந்திரன் காரை விட்டு இறங்க என்னவோ கஏதோவென்று அவனும் இறங்கி தம்பியிருந்த பக்கம் வந்தான்.
அவனோ அண்ணனின் பக்கம் வந்தவன் ஓட்டுநர் இருக்கையில் ஏறி அமர்ந்தான்.

“என்னடா பண்றே?”

“அண்ணா. நீ கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கோ. நான் ஓட்டறேன்.”

“வேண்டாம்.” அவன் மறுத்தான்.

“நான் கொஞ்சம் சுமாராவே ஓட்டுவேன். நீ பயப்பட வேண்டாம்.”

“மெதுவா ஓட்டனும்.”

“கிருஷ். நீயும் முன்னாடி வர்றியா?”

“சாருக்கா இருக்காங்களே?”

“அவளை இப்போ எழுப்பறது நடக்காத காரியம். நீ பின்னாடியே உட்காரு.”

மகேந்திரன் பின்னிருக்கையில் ஏறி அமர்ந்துகொள்ள யுகேந்திரன் வண்டியை ஓட்ட ஆரம்பித்தான்.

தனக்குப் பிடித்த மெல்லிசையை சத்தம் குறைத்து ஓடவிட்டான். அது தூங்குபவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் மற்றவர்களுக்கு பிடித்தமானதாக இருந்தது.

அவனை இத்தனை நெருக்கத்தில் அவள் பார்த்ததில்லை. அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது. நன்றாக ஓரத்தில் ஒண்டிக்கொண்டாள்.

அவனுக்கு அவளது செயலைப் பார்த்து ஒரு மாதிரியாக இருந்தது. அவன் என்னமோ அவளை ஏதோ செய்யப் போற மாதிரியே அவள் நடந்துகொண்டது கோபத்தை உண்டாக்கியது.

“பார்த்து. மெதுவா. ரொம்ப ஓரத்திற்குப் போறேன்னு காரை உடைச்சிக்கிட்டு வெளியே விழுந்துடுவே போல இருக்கு.”

அவன்தான் தன்னிடம் பேசினானா? அவனது குரலில் தெறித்த கோபம் கண்டு அவள் திகைத்தாள்.

“இல்லை. உங்களுக்கு இடம் வேணும்னுதான்.”

முணுமுணுப்பாய் பதில் சொன்னாள்.

“நான் அந்த அளவுக்கு பெரிய உருவமாகவா இருக்கிறேன். இப்ப இருக்கிற இடம் போதும். நீ சரியா உட்காரு.”

அதட்டலாகச் சொன்னான்.

“ம். சரி.”

அதையும் முணுமுணுப்புடனே சொன்னவள் மீண்டும் அவன் திட்டி விடுவானே என்று நன்றாக நகர்ந்து உட்கார்ந்தாள்.

‘இந்த யுகா பேசாமல் இங்கேயே உட்கார்ந்திருக்கலாம்.’

மனதிற்குள் யுகேந்திரனை திட்டினாள்.

அவளுக்கு அப்படியே பொம்மை மாதிரி அமர்ந்திருப்பது மிகவும் கடினமாக இருந்தது.

தூக்கம் வந்தது.

அவன் பக்கம் காலை நீட்டினால் அது மரியாதைக் குறைவாக இருக்கும் என்று ஓரத்தில் காலை நீட்டிவிட்டு இருக்கையின் பின்பக்கம் தலைசாய்த்துக் கொண்டாள்.  

பின்பு நல்ல உறக்கம் அவளைத் தழுவியது. தன்னையறியாமல் மகேந்திரன் பக்கம் சாய்ந்தாள்.



தன் மீது சாய்ந்தவளின் முகத்தைக் கடந்துபோன விளக்கு வெளிச்சத்தில் பார்த்தான்.
அவள் குழந்தையாய் தெரிந்தாள்.
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 09-04-2019, 12:33 PM



Users browsing this thread: 22 Guest(s)