Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
உறுதுணைக் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தவர்
சினிமா யதார்த்தத்தின் பதிவாக இருக்க வேண்டும் என்று விரும்பியவர் மகேந்திரன். அதனால் தான் நாயகன், நாயகி என்று இருவரைச் சுற்றி மட்டும் எந்தக் கதையையும் அவர் உருவாக்கவில்லை. 'முள்ளும் மலரும்' படத்தில் சரத்பாபு, ஷோபா, படாபட் ஜெயலட்சுமி, வெண்ணிற ஆடை மூர்த்தி, சாமிக்கண்ணு உள்ளிட்ட எல்லோருமே ஜொலித்தார்கள். 'உதிரிப்பூக்கள்' சாருஹாசன் அதில் ஒற்றைப் பருக்கை. ''இந்த ஊரை விட்டு ஏன்பா போறீங்க'' என்று அஸ்வினி கேட்கும்போது, ''என்னை யாரும் இங்க இருக்கச் சொல்லலையேம்மா'' என்று வருத்த வார்த்தைகளில் கலங்க வைப்பார். உறுதுணைக் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் படைப்புகளில் மகேந்திரன் தன்னிகரற்று விளங்கினார்.
[Image: mahendran]
டூயட்களை வெறுத்தவர்
ஐ லவ் யூ சொல்வதுதான் தமிழ் சினிமாவின் ஆகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. டூயட் பாடல்கள் இல்லாமல் காதலைச் சொல்ல முடியாதா என்று ஒரு மூத்த படைப்பாளியாக விமர்சனம் செய்தவர் இயக்குநர் மகேந்திரன். அதே சமயத்தில் 'கை கொடுக்கும் கை' படத்தில் தாழம்பூவே டூயட் பாடலை வைத்ததற்காக வருத்தம் தெரிவித்தார். ஆனால், இசையை மையப்படுத்திய 'ஜானி' படத்தின் மூலம் மறக்க முடியாத மனதை வருடும் பாடல்களைக் கொடுத்தார். ராஜாவும் இசையில் தனி ராஜாங்கம் நடத்தி இருந்தார். 'உதிரிப்பூக்கள்' படத்தின் அழகிய கண்ணே பாடல் இப்போதுவரை மென்சோகத்தின் உச்சமாக உள்ளது.
பாலு மகேந்திரா- மகேந்திரனின் ஒத்த அலைவரிசை
'முள்ளும் மலரும்' படத்தின் ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா.  கன்னடத்தில் 'கோகிலா' படத்தை இயக்கிய பாலு 'முள்ளும் மலரும்' படத்துக்குப் பிறகுதான் தமிழ்ப் படங்களை இயக்கினார். பாலுவுக்கும் டூயட் பாடல்கள் பிடிக்காது. பொது இடத்தில் காதலிப்பது போன்ற காட்சிகளை வைக்கமாட்டார். 'வீடு' படத்தில் பானுசந்தர் - அர்ச்சனாவுக்கு இடையேயான காட்சிகளில் யதார்த்தக் காதலைப் பதிவு செய்திருப்பார். மான்டேஜ் பாடல்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். 'அழியாத கோலங்கள்' படத்தில் ஷோபாவின் கதாபாத்திரம் தனித்துவமானது. வகுப்பறைக்குள் புதிதாக வந்த ஷோபா, ''என் பேரு இந்து. உங்க பேரைச் சொல்லுங்கம்மா'' என்று வெட்கமும், தயக்கமும், படபடப்புமாகக் கேட்பார். அந்த சாயலை நீங்கள் 'முள்ளும் மலரும்' வள்ளியிடம் பார்க்கலாம்.  'உதிரிப்பூக்கள்' படத்தில் மிகையில்லாத, அசலான குழந்தைத்தன்மையோடு இருக்கும் குழந்தைகளைப் பார்க்க முடியும். அதன் நீட்சியாக 'நீங்கள் கேட்டவை' படத்தில் பூர்ணிமாவின் குழந்தைகளைப் பார்க்கலாம். மகேந்திரனின் திரை மொழியும், பாத்திரப் படைப்பும் பாலு மகேந்திராவையும் ஈர்த்திருக்கிறது அதனால் தான் இருவரும் ஒத்த அலைவரிசையில் இயங்கினர் என்பதை மறுக்க முடியாது.
நடிப்பின் மூலம் மறுவருகை
12 படங்களில் தன் தடத்தைப் பதித்த மகேந்திரன் 'காமராஜ்' படத்தில் அவரது தொண்டராக சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதற்குப் பிறகு அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த 'தெறி' படத்தில் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து 'நிமிர்', 'மிஸ்டர் சந்திரமௌலி', 'பேட்ட' ஆகிய படங்களில் நடித்தார். கரு.பழனியப்பன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் 'புகழேந்தி எனும் நான்' படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் மகேந்திரன் நடித்துள்ளார். இப்படம் மட்டும் இன்னும் வெளியாகவில்லை.
[Image: mahendran1]
 
திடீரென்று ஏன் மகேந்திரன் சார் நடிகர் ஆனார் என்ற கேள்வி 'தெறி' படம் ரிலீஸான போது எழுந்தது. அப்போது இயக்குநரும் நடிகருமான என் நண்பர் ஓர் அழகான பதிலைச் சொன்னார். ''சினிமா என்பது எல்லா கலைகளையும், கலைஞர்களையும், படைப்பாளிகளையும் விழுங்கக்கூடிய ஆக்டோபஸ்.  மகத்தான ஆளுமைகளை, மூத்த படைப்பாளிகளை இன்றைய தலைமுறை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. அந்த வகையில் மகேந்திரன் சாரின் மறுவருகை நடிப்பால் நிகழ்ந்தது இளம் தலைமுறைக்கான தெரிவிப்புப் படலமாக இருக்கட்டும்'' என்றார். அது 100% ஏற்புடையது. 
ஆவணப்படமும் ஆவணக் காப்பகமும்
சினிமாவுக்கென்று ஆவணக் காப்பகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று பாலு மகேந்திரா கடைசி வரை வலியுறுத்திக் கொண்டே இருந்தார். . ஆனால், இன்னும் அந்தக் கோரிக்கை நிறைவேறவில்லை. தமிழ் சினிமா உள்ளவரை மகேந்திரன் சார் நினைவுகூரப்படுவார், அவரது படங்களின் மூலம் மகேந்திரன் சார் வாழ்ந்து கொண்டிருப்பார் என்று சொல்லிவிடலாம்தான். ஆனால், அது மட்டுமே அவருக்கான இறுதி மரியாதையாக இருக்காது. இயக்குநர் மகேந்திரன் குறித்து ஒரு ஆவணப் படத்தை தமிழ் சினிமா முன்னெடுப்பதும், ஆவணக் காப்பகத்தை நிறுவுவதுமே அவர் நமக்கு விட்டு வைத்திருக்கும் கடமைகள். படைப்பாளியை இழந்த நாம் படைப்புகளை இழக்காமல் இருக்க அதற்கான முயற்சிகளை எடுப்பது அவசர அவசியம்.
தொடர்புக்கு: [email protected]
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 04-04-2019, 10:01 AM



Users browsing this thread: 13 Guest(s)