நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#60
அவர்கள் சாருலதாவைக் கண்டுகொள்ளாமல் தங்களுக்குள் பேசிக்கொள்ள ஆரம்பிக்க அவள் எரிச்சல் தாளாமல் உள்ளே வந்தாள்.

என்னதான் மகேந்திரன் காலையில் கிருஷ்ணவேணி உடல்நிலை சரியில்லாமல் போயிருந்ததை கண்டுகொள்ளாமல் அலுவலகத்திற்குக் கிளம்பினாலும் அங்கே அவனால் வேலையில் சரிவர ஈடுபடமுடியவில்லை. இதோ இப்போது கிளம்பியே வந்துவிட்டான்.
அதைக் கண்ணார கண்டவளுக்கு கிருஷ்ணவேணி மீது கோபம் கோபமாய் வந்தது.

அவள் எப்படியோ அந்த வீட்டில் உள்ளவர்களை எல்லாம் மயக்கி வைத்திருக்கிறாள்.

யாரோ எப்படியோ போகிறார்கள். ஆனால் மகேந்திரன்?

அவனுக்காக தான் தீட்டியிருக்கிற திட்டம்?

எத்தனை வருடக் கனவு?

இவர்கள்தான் தன்னைப் பெண் கேட்க மாட்டேன் என்று அடம் பண்ணிய மாதிரி இருக்கிறார்கள்?

தனது பெற்றோராவது மாப்பிள்ளை கேட்டு வரலாம் என்றால் அக்கா சாருமதி தடையாக இருக்கிறாள்.

முதலில் அவளை வீட்டை விட்டு ஒழித்துக்கட்ட வேண்டும்.

அவளும் மகேந்திரனைப் பார்க்கும் பார்வை சரியில்லை.

சாருமதி அவளது அப்பத்தாவிடம் வளர்ந்ததாலோ என்னவோ அவளது வீட்டினருக்கு உள்ள கெட்ட குணம் எதுவும் அவளிடம் இல்லை. அதுவே அவளது தாய்க்கு பெரும் குறையாக இருந்தது.

“அந்தக் கிழவியிடம் தெரியாத்தனமா விட்டுட்டேன். அது அவளைக் கெடுத்து வச்சிருக்கு.”

என்ற வசைபாடல் அவளது இறந்துபோன மாமியாருக்கு கிடைக்கும்.
அதை எல்லாம் கேட்டுக்கொண்டிருக்கும் சாருமதிக்குக் கோபம் வரும். ஆனால் வெளிக்காட்ட முடியாது.

அவளுக்குத் துணை என்று அந்த வீட்டில் யாருமில்லை.

ல்லூரியில் உள்ள நூலகத்திற்குப் போய்விட்டு வந்துகொண்டிருந்தாள் கிருஷ்ணவேணி.

யுகேந்திரன் ஏதோ பாட்டு போட்டி இருக்கிறது என்று வேறு கல்லூரிக்குச் சென்றிருந்தான்.

அவளுக்குத் தனிமை போரடித்தது. அதனால் நூலகத்திற்கு வந்து படித்துவிட்டு இப்போது கிளம்புகிறாள்.

இன்று காலையில் அவள் அவனுடன்தான் வந்தாள்.

அவளது ஸ்கூட்டி காலையில் திடீரென்று மக்கர் செய்தது. அதனால் அவன்தான் அழைத்து வந்திருந்தான்.

இப்போது யுகேந்திரன் இல்லாததால் பேருந்து ஏறிச்செல்வதா? இல்லை ஆட்டோ பிடித்துச் செல்வதா? என்று யோசித்தவாறே நடக்க ஆரம்பித்தாள்.

“கிருஷ்ணா.”

அவளை அழைத்தவாறே முரளி ஓடிவந்தான்.

அவனும் அவளது வகுப்பில்தான் படிக்கிறான்.

நிறைய நேரம் அவளிடம் பேச முயற்சிப்பான். யுகேந்திரனைக் கண்டதும் பேசாமல் போய்விடுவான்.

இப்போது அவள் தனியாக இருக்கவே இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்று வந்துவிட்டான்.

“சொல்லு முரளி. என்ன வேணும்?”

“நீ ஏன் கல்லூரி விடுதியில் தங்காமல் யுகேந்திரனோட வீட்டில் போய் தங்கியிருக்கே?”

அது எதற்கு உனக்கு என்பதுபோல் அவனைப் பார்த்தவள் பதில் சொல்லாமல் கிளம்பினாள்.

அவன் யார் தன்னைக் கேள்வி கேட்க?

என்று அவளுக்கு கோபமாய் வந்தது.

எதிரே நின்று கையை நீட்டி அவளது வழியை மறித்தான்.

“நான் உன்கிட்டதான் கேட்கிறேன். பதில் சொல்லாமப் போனா என்ன அர்த்தம்?”

“பதில் சொல்லப் பிடிக்கலைன்னு அர்த்தம்?”

“அவன்கிட்ட இருக்கிற பணம்தானே உன்னை அவன்கிட்ட இழுத்துட்டு போயிருக்கு?”

“நீ எப்படி வேணா எண்ணிக்கோ? எனக்கு அதைப் பத்தி கவலையில்லை. நான் எங்கே? எப்படி? இருக்கிறேன்னு உனக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை.”

“இல்லை. எனக்கு அந்த அவசியம் இருக்கு. நான் உன்னைக் காதலிக்கிறேன்.”



அவன் சொன்னதும் அவள் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள்.
“கிருஷ்ணா. நல்லா யோசிச்சு முடிவெடு. அவன்கிட்ட பணத்தைத் தவிர என்ன இருக்கு? அழகும் இல்லை. படிப்பும் இல்லை. இது ரெண்டுமே என்கிட்ட இருக்கு. பார்த்தா உனக்கே தெரியும். என்ன என்கிட்ட பணம்தான் இல்லை. அதுக்குன்னு நான் ரொம்ப ஏழைன்னு நினைச்சிடாதே. ஓரளவு நடுத்தர குடும்பம்தான். எனக்கிருக்கிற அறிவுக்கு நான் படித்து முடித்த உடனே வேலை கிடைச்சிடும். நான் உன்னை வசதியா வச்சுப் பார்த்துப்பேன். நீயும் வேலைக்குப் போனா இன்னும் வசதியா இருக்கலாம். தயவு செய்து நீ அவனோட பழக்கத்தை விட்டுரு. பணக்கார பசங்களை நம்பவே முடியாது. அவன் உன்னை ஏமாத்திடுவான்.”
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 29-03-2019, 10:19 AM



Users browsing this thread: 23 Guest(s)