நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#58
தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 10 - ராசு

[Image: nivv.jpg]

யுகேந்திரன் பயந்து போய் கதவை பலமாய்த் தட்டினான்.


கிருஷ்ணவேணியால் எழுந்து கதவைத் திறக்க முடியவில்லை. தள்ளாடியவாறே எழுந்து கதவைத் திறந்தாள்.

அவளைக் கண்டதும் யுகேந்திரன் துடித்துப்போனான்.

“என்னாச்சு கிருஷ்?”

அவளால் பதில் சொல்ல முடியவில்லை.

அப்படியே வயிற்றைப் பிடித்துக்கொண்டு சுருண்டு விழுந்தாள். அதன் பிறகு தரையில் உருள ஆரம்பித்தாள்.

அவளைத் தூக்கச் சென்றவனை அவள் தன் அருகிலேயே விடவில்லை.

“அம்மாஆஆஆஆ,,,”

அங்கிருந்தவாறே யுகேந்திரன் தன் தாயைக் கத்தி அழைத்தான்.

வனிதாமணியும் பதறியவாறே மாடி ஏறி வந்தார்.

அவளைக் கண்ட உடனே என்ன பிரச்சினை என்று அவருக்குப் புரிந்துவிட்டது.

அவரும் அனுபவித்து வந்தவர்தானே?

மாதாந்திர தொந்தரவு அவளைப் போட்டு வாட்டி வதைத்துக்கொண்டிருந்தது.

குனிந்து அவளைத் தூக்கி கைத்தாங்கலாய் படுக்கைக்கு அழைத்துச்சென்றார்.

“யுகா. நீ கல்லூரிக்குக் கிளம்பு. அவளால் இன்னிக்கு வரமுடியாது.”

“நானும் போகலைம்மா. அவளை இந்த மாதிரி விட்டுவிட்டு என்னால் போக முடியாது.”

“நீ கூட இருந்து என்ன செய்யப்போறே. கொஞ்ச நேரத்தில் அவள் சரியாகிவிடுவாள். நான் பார்த்துக்கொள்கிறேன்.”

அவன் அவளைப் பார்த்தான். அவள் புழுவாய் சுருண்டு கொண்டிருந்தாள்.

“அம்மா. நான் பார்த்துக்கிறேன்னு சொல்றீங்க. அவ துடிக்கிறதை என்னால் பார்க்க முடியலை, ஏதாவது செய்யுங்கம்மா. ஏதாவது செய்யுங்க.”

“என்னடா பண்ண முடியும்?”

“டாக்டரைக் கூப்பிடலாம்ல.”

“இதுக்கெல்லாம் கூப்பிட முடியாது. ஒவ்வொரு மாசமும் மாத்திரை மருந்தை எடுத்துக்க முடியாது. இதெல்லாம் தாங்கிக்க வேண்டிய கட்டாயம் பெண்களுக்கு இயற்கையாவே உண்டாகிவிட்டது. கிராமத்தில் எனக்கு எங்கம்மா கருப்புக்கலரோ, சோடாவோ வாங்கித்தருவாங்க. கொஞ்ச நேரம் அவ தூங்கினான்னா எல்லாம் சரியாப் போயிடும்.”

அவர் என்னவோ எளிதாகச் சொல்லிவிட்டார்.

ஆனால் புழுவைப் போலத் துடித்துக்கொண்டிருந்த கிருஷ்ணவேணியால் தூங்க முடியும் என்று அவனுக்குத் தோன்றவில்லை.

“கருப்புக்கலர்னா என்னம்மா?”

“அதெல்லாம் வேண்டாம். நான் அவளுக்குக் கசாயம் வைத்துக்கொடுத்துக்கொள்கிறேன். நீ கிளம்பு.”

அவனை விரட்டிவிட்டார்.

அவனுக்கு மனம் கேளவில்லை,

தனது வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

அப்போது சாருலதா அங்கே வந்துகொண்டிருந்தாள்.

அங்கே வந்த உடன் என்ன பிரச்சினை என்று தெரிந்துகொண்டாள்.

அவளுக்கு ஒன்றென்றால் அந்த வீட்டில் உள்ளவர்கள் எப்படி துடித்துப்போயிருக்கிறார்கள்.

ஆமாம் அந்த மகேந்திரன் என்ன செய்கிறான் என்று நோட்டம் விட்டாள். அவனிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை.

அவன் அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் திரும்பி யுகேந்திரன் கிளம்பி வந்தான்.

அவன் தான் வாங்கி வந்தவற்றை தாயிடம் நீட்டினான்.

அதை வாங்கிப் பார்த்த வனிதாமணி நெகிழ்ந்துபோனார். தன் மகனைப் பற்றி பெருமிதம் கொண்டார்.

அதில் பவண்டோ குளிர்பானமும் சோடாவும் இருந்தது.

“அம்மா. வெறும் சோடான்னா குடிக்க முடியுதோ என்னவோ? அதோட கொஞ்சம் எலுமிச்சைப் பழத்தை பிழிஞ்சு கொடுங்க.”

“அவளுக்கு இப்பதான் நான் சோம்பை வெறும் சட்டியில் போட்டு கருக்கி கசாயம் வைத்துக்கொடுத்தேன். அவ கொஞ்சம் தூங்கட்டும். அப்புறமா அவளுக்கு என்ன வேணுமோ நான் பார்த்துக்கொடுக்கிறேன். நீ இப்ப கிளம்பு.”

அப்போதும் மனம் கேளாமல் உள்ளே வந்தவன் சிடி பிளேயரில் ஏதோ ஒரு மெல்லிசையை ஒலிக்கவிட்டு சென்றான்.

அவன் வாங்கி வந்தவற்றை அவளது அறைக்குள்ளே எடுத்துச் சென்ற தனது மகனின் செயலை நினைத்துச் சிரித்தவாறே அவளிடம் சொன்னார்.



அவளது கண்களில் கண்ணீர்.
“என்னம்மா? வலி இன்னும் குறையலையா?”
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 29-03-2019, 10:06 AM



Users browsing this thread: 7 Guest(s)