நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#53
அவள் மேலும் அங்கேயே நின்றிருக்காமல் கீழே இறங்கினாள். தண்ணீரை எடுப்பதற்காக சமையல் அறைக்குச் சென்றவள் அங்கே ஏற்கனவே விளக்கு போடப்பட்டிருந்ததைப் பார்த்து அத்தை அமர்த்த மறந்துவிட்டாரா என்ற யோசனையுடன் உள்ளே நுழைந்தாள்.

அதன் பிறகு அவள் தன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்.
“ஏய் கிருஷ்! எதற்கு இப்படி சிரிக்கிறே?”
கேட்ட யுகேந்திரனைப் பார்த்த அவளுக்கு மீண்டும் சிரிப்பு பொங்கி வந்தது.

வனிதாமணி எதற்காக வரவேற்புக்குப் போகும் அவசரத்திலும் சப்பாத்தியும் குருமாவும் செய்துவிட்டு வந்தார் என்று இப்போது புரிந்தது.

வாயில் சப்பாத்தி குருமா வழியதான் அவன் அவளிடம் கேள்வி கேட்டதே.

“டேய் அங்கே பங்சன்ல ஒழுங்கா சாப்பிட வேண்டியதுதானே?”

என்று குறைபட்டுக்கொண்டாள்.

“ஏன் சாப்பிடாம என்ன? சாப்பாடு என்ன ருசி? என்ன ருசி? சைடு டிஷ் எல்லாம் சூப்பர். அதுவும் ஊத்தப்பத்துக்கு பருப்பு போட்டு ஒன்னு வச்சிருந்தான் பாரு. அதை அடிச்சிக்கவே  முடியாது. அப்புறம் பரோட்டாவுக்கு கொண்டைக்கடலை போட்டு குருமா இருந்துச்சில்ல. அது செம டேஸ்ட். இரண்டு இட்லிக்கு மூன்று வகையான சட்னி. பத்தாததற்கு இனிப்பு வகைகள் வேறு.”

“இரண்டு இட்லி சாப்பிட்டதுதான் பத்தலையா? இன்னும் கேட்டு வாங்கி சாப்பிட வேண்டியதுதானே?”

“நான் கேட்காம இருப்பேனா? நான் கூப்பிட்ட போது சாப்பாடு வைக்கிறவர் இன்னும் வேணுமான்னு என் பக்கத்தில் இருக்கிறவங்களை எல்லாம் கேட்டாரு. ஆனால் என்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்கலை.”

“நீ பிரஷ்டீஜ் பார்த்துக்கிட்டு இருந்துட்டியா?”

“என்னைப் பார்த்தா ஒல்லியா இருக்கேனா? அதனால் நான் அதிகமா சாப்பிட மாட்டேன்னு அவரே முடிவு பண்ணிட்டாரு போல. அதுக்கு நான் என்ன பண்றது? அப்படியும் வெட்கத்தை விட்டு கூப்பிடத்தான் நினைத்தேன். அதற்குள் எனக்குப் பக்கத்தில் சாப்பிட அமர்ந்திருந்தவர்கள் சதி பண்ணிட்டாங்க. சாப்பாட்டோட இலையை மூடி வச்சிட்டு கிளம்பிட்டாங்க. ஆமா! அவங்க எல்லாம் எதற்கு சாப்பிடுவதற்கு பந்திக்கு வர்றாங்க? டீசன்டா சாப்பிடறேன் பேர்வழின்னு பாதி சாப்பாட்டை வீணடிக்கிறாங்க.”

“சரி சரி. வருத்தப்படாதே. இனி நீ போற எல்லா விழாக்களிலும் நாமே சாப்பாட்டை எடுத்துச் சாப்பிடற மாதிரி ஏற்பாடு செய்துக்கலாம்.”
என்று அவள் கூற “உனக்கு என்னோட நிலைமை கிண்டலா போச்சு,” என்று சொல்லிக்கொண்டே சாப்பிடுவதைத் தொடர்ந்தான்.

அவளுக்குத் தலையைப் பிடித்தவாறே மாடியில் இருந்து இறங்கிய மகேந்திரனின் தோற்றம் கண்முன் வந்தது.


அவன் முன்பே விழாவில் இருந்து கிளம்பிவிட்டானே. சாப்பிட்டிருப்பானா என்ற சந்தேகம் எழுந்தது.

“ஆமா. உங்க அண்ணன் சாப்பிட்டிருப்பாரா?”

“அவன் என்னை மாதிரி இல்லை. அடிக்கடி சாப்பிட மாட்டான்.”

“இல்லை. இன்னிக்கு விழாவிலிருந்து சாப்பிடுவதற்கு முன்பே கிளம்பிவிட்டாரே. அதான் சாப்பிட்டாரா என்று கேட்டேன்.”

“அவன் என்ன சின்னப் பிள்ளையா? அதெல்லாம் சாப்பிட்டிருப்பான். முக்கியமான வேலைன்னு போனான்ல. அங்கேயே வேலை முடிஞ்சதும் அப்படியே ஹோட்டலில் சாப்பிட்டு வந்திருப்பான்.”

அவளுக்கு என்னவோ அவன் சாப்பிட்டிருப்பான் என்று தோன்றவில்லை. ஆனால் அவனை சாப்பிட வரச்சொல்லி கூப்பிடும் தைரியமும் அவளுக்கில்லை. இப்போது ஏதோ கொஞ்சம் ஒழுங்காக போய்க்கொண்டிருக்கிறது. இப்போது போய் தேவையில்லாமல் கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்று தோன்றியது.

இருந்தும் மனம் கேட்காமல் பாலை எடுத்துக் காய்ச்சினாள்.

அவனுக்கு குடிப்பதற்கு டீ போட்டு கொண்டு போகச் சொன்னால் யுகேந்திரன் கொண்டு போய் தருவான்.

வீட்டில் சாப்பாடு இருப்பது தெரிந்திருந்தாலும் மகேந்திரன் எடுத்துச் சாப்பிட்டிருக்க மாட்டான். எப்போதுமே வனிதாமணி எடுத்துவைத்துதான் அவன் சாப்பிட்டிருக்கிறான். அவனாக சமையல் அறைக்கு வந்தது இல்லை.

அப்போது சமையல் அறையின் வாசலில் அரவம் கேட்க இருவரும் திரும்பிப்பார்த்தனர்.

“என்னண்ணா?”

“தண்ணீர் இல்லை. எடுக்க வந்தேன்.”

தண்ணீர் ஜக்கைக் காட்டினான்.



தண்ணீர் எடுத்துக்கொண்டு திரும்பியவனை அழைத்தாள் கிருஷ்ணவேணி. அழைத்த பிறகு எந்த தைரியத்தில் அழைத்தோம் என்று பயத்துடனே பார்த்தாள்.
அவன் திரும்பி அவளைப் பார்த்தான்.
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 26-03-2019, 10:46 AM



Users browsing this thread: 3 Guest(s)