அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
பாகம் - 69 

ஒன்றரை வருடம் கழித்து,

டெல்லியில் ஒரு புகழ் பெற்ற நட்சத்திர விடுதியின், சூட்டு அறையில் அமர்ந்திருந்தான், மணி. கண்ணாடியில் தெரிந்த, அவன் கண்களின் பிரதிபலிப்பில் பார்வையைத் பதித்திருந்தான். அந்தக் கண்கள் சோர்வுற்று இருந்தது, அதே நேரத்தில், ஒன்றரை வருடமாக, கட்டுக்குள் வைத்திருந்த மிருகம், உன்னை வென்றே தீர்வேன் என்றது. இன்னும் அது, தன் தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை. அறையின் கதவு தட்டப்படும் ஓசை, அவனை, அந்த மிருகத்திடம் இருந்தும், சோர்விடம் இருந்தும், மீட்டெடுத்தது.

"சார்!! இன்னும் அரை மணி நேரத்துல ஸ்டார்ட் ஆயிடும்!!" அறையின் கதவை திறந்ததும், அவனது உதவியாளர் சொல்ல, தலையசைத்த மணி, வரவேற்பறையில் இருந்த சோபாவில் வந்து அமர்ந்தான்.

"இந்திய வர்த்தகத்தின் இளம் நட்சத்திரங்கள்!!" என்ற தலைப்பில் இந்தியாவின் பிரபலமான ஊடகம் நடத்திய கலந்தாய்வில் கலந்து கொள்ளவே, டெல்லி வந்திருந்தான். அதுவரை ஊடகங்களில் முகம் காட்டாதவன், சில அரசியல், தொழில் நிர்பந்தங்களை சமாளிப்பதற்காக தான், அந்த நிகழ்சிச்சியில் கலந்து கொள்ள ஒப்புக் கொண்டான். அவனோடு சேர்த்து, இன்னும் மூன்று இளம் தொழிலதிபர்கள் விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். அந்த மூவரின் சம்பந்தமான குறிப்புகளை, மீண்டும் ஒருமுறை வாசித்துக் கொண்டிருந்தான். அந்த நிகழ்வை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர், போட்டு வாங்குவதில் வல்லவர். அந்த தொகுப்பாளரை பற்றிய குறிப்புகளை, அவன் வாசித்துக் கொண்டிருக்க

"சார்!! அவருக்கு உங்கள ஒரு கெஸ்ட்டா இந்த புரோகிராம்ல கூப்பிட்டது பிடிக்கலையாம். கண்டிப்பா, எதாவது குதர்க்கமா கேட்பார்!!" கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு, அவனை ஆயத்தப்படுத்தி கொள்ள உதவும் குழுவில் இருந்த ஒருவர் சொன்னார். நிமிர்ந்து அவரை பார்த்தவன்,

"அவருக்கு நம்மள புடிக்கலனா!!, அதுக்கு, நாம எதுவும் பண்ண முடியாது!!" சிரித்தான்.

இதுவே ஒன்றரை வருடங்களுக்கு முன்னால், இப்படி ஒரு சூழ்நிலை அமைந்திருந்தால், அந்த தொகுப்பாளரை, நிகழ்ச்சி முடியும்முன் மண்டியிட வைக்க வேண்டும், என்பதுதான் அவனது ஒரே சிந்தனையாக இருந்திருக்கும். தொழிலில், அவனை நிலைநாட்டிக் கொள்ள அவனுக்கு பெரிதும் உதவியது, இப்படி எதிரே நிற்பவர்களை மண்டியிட வைக்கும், பவர் கேம்தான். அதை, இன்னும் அவன், முழுதாக உதறித் தள்ளி விட்டாலும், அதை யாரிடம்? எப்போது? எதற்காக? உபயோகப்படுத்த வேண்டும் என்ற பக்குவத்தை, கடந்த ஒன்றரை வருட வாழ்க்கை, அவனுக்குக் கற்றுக் கொடுத்திருந்தது. அவனைப் பக்குவப்படுத்திய சில நிகழ்வுகள்

*************

மணியின், பெரிய ஆச்சி இறந்த, ஒரு மாதம் கழித்து,

சாப்பிட்டும், சாப்பிடாமலும் எழுந்து சென்றாள், சுமா. எழுந்து சென்ற, தாயைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவளது முகத்தில் ஒரு தவிப்பு, வேதனை.

"கொஞ்சம் வெளிய போலாமா?" சுமாவின் பின்னாலேயே எழுந்து, கை கழுவச் சென்றவன், சுமாவைப் பார்த்து கேட்க, அவனது அருக்காமைக்காக, கனிவான பார்வைக்காக, ஒரு சொல்லுக்காக, இரண்டு வருடமாக எங்கித் தவித்தவள் அல்லாவா, சரி என்று அவசர அவசரமாக தலையாட்டினாள்.

உடை மாற்றவில்லை, அலங்காரத்தை சரி பார்க்கவில்லை, மகன் அழைத்ததும், அவன் பின்னால், சென்றாள். அரைமணி நேரத்தில், அவர்கள் பயணித்த கார், கோவையின் அப்போலோ மருத்துவமனையில் நின்று கொண்டிருந்தது.

"இறங்குங்க!!" என்ற மகனை, நம்ப முடியாமல் பார்த்தாள், சுமா.

தன் அம்மாவை காரிலிருந்து அழைத்துக்கொண்டு, அந்த மருத்துவமனைக்குள் நுழைந்தான். சிறிது நேரத்தில் ஒரு அறையின் முன்னால் நின்றவன், தனது தாயைப் பார்த்து திரும்பி, உள்ளே போகும்படி கண் காட்டினான். அவள் தயங்கி நிற்க, கதவைத் திறந்த மணி, தன் தாயின் கைபற்றி உள்ளே அழைத்து சென்றான். தாயின், இறப்பிற்கு பிறகு சிவகுருவின் உடல்நிலை, மேலும் மோசமடைந்து. அன்று காலைதான் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டிருந்தார். மணியின் தாத்தாவும், ஆச்சியும் செய்தி கேள்விப்பட்டு காலையிலேயே மருத்துவமனைக்கு வந்திருந்தார்கள். அறைக்கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு, திரும்பிப் பார்த்த சிவகுருவை, ஒரு நொடி பார்த்தவன், பின் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டான். பெரியவர்கள் இருவரும் சென்று இருக்க, சுமா மட்டும் அரை மனதுடன் தவிர்த்திருந்தால். தன் கணவன் மீதான கோபம் குறைந்திருந்தாலும், சிவகுருவால் ஏற்பட்ட காயத்தின் வலி, அவளுக்கு தயக்கத்தை கொடுத்தது. தன் அன்னையின் தவிப்பும், வேதனையும், ஏனோ மணிக்கு, மதுவை நினைவுபடுத்தியது. தனது உறுதியை கொஞ்சம் தளர்த்தினான், தன் அம்மாவிற்காக. தனக்காக, தன் தாய், தன்னை தண்டித்துக் கொள்வது குற்றஉணர்ச்சியைக் கொடுத்தது, மணிக்கு. அந்த குற்ற உணர்ச்சியில், பாசம் எங்கேனும் ஒளிந்திருந்ததா என்பதை அவன் மட்டுமே அறிவான்.

***********

ஒருவாரம் கழித்து

குழப்பமான மன நிலையில் வீட்டிற்குள் நுழைந்தவன், ஹாலிலேயே அமர்ந்து விட்டான். கடந்த ஒரு வாரமாக, மருத்துவமனையில் இருந்த சிவகுருவை கவனித்துக் கொள்வதில் மூவரும் பிசியாக இருந்தனர். அவன் அம்மாவிடம் பேசிக் கொள்ளாமல் இருந்திருந்தாலும், கடந்த இரண்டு வருடங்களில், சாப்பிடும் வேலைகளிலும், அவன் வீட்டில் இருக்கும் வேலைகளிலும், அவள் கவனமெல்லாம், அவன் மீதே இருந்தது. யாரிடமும் நெருங்கக் கூடாதென்று, அவனுக்கு அவனே வேலிதிடுக் கொண்டு வாழ்ந்து வந்தாலும், தன் அம்மாவின் அந்த கவனத்தை அவனது மனம் விரும்பியிருக்கிறது என்பதே, அவனுக்கு கடந்த ஒரு வாரமாக, அவள் அருகில் இல்லாத போது தான் புரிந்தது. எங்கே உடல்நலம் தேறி, சிவகுரு மீண்டும் கொடைக்கானல் எஸ்டேட் சென்றால், தன் கணவருடன், அவளும் சென்று விடுவாளோ? என்ற எண்ணம் வரும்போதெல்லாம், இப்படி குழம்பிப் போவான்.

அவனது மனம் தனித்து இயங்கி சோர்வடைந்து, ஆறுதலை, அன்பை எதிர்பார்க்கத் துவங்கியிருந்தது. வாழ்க்கையில், இப்படியான ஒரு சிக்கலில் தவித்து இருந்தான் என்றால், தன் திருத்தி அனுப்பிய டாக்குமென்ட்டை பற்றி, எந்த ஒரு பதிலும் சொல்லாமல், அவினாஷ் தாக்கர் அமைதி காத்தார். அப்படி ஒரு வாய்ப்பை, அவருக்கு தராமல் இருந்திருக்கலாம். அப்படித் தந்தப் பின், இருவருக்குமான பவர்கேம் தொடங்கியிருந்தது. பவர் கேமில், யார் மேலே? யார் கீழே? என்பதுதான் ஆட்டமே. முதல் காய் நகர்த்தலை இவன் துவங்கியிருக்க, எதிராளி இன்னும் அவர் காயை நகர்த்தி இருக்கவில்லை. தானே ஒருமுறை அவரிடம் அழைத்து பேசலாமா? என்ற எண்ணம், அவனை குழப்பத்துக்கு ஆளாக்கியது. தன் தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதும், அவினாஷ் தாக்கருக்கு அப்படி ஒரு வாய்ப்பு வழங்கியதும், முட்டாள்தனமான முடிவோ என்ற குழப்பத்தில் அமர்ந்திருந்தான்.

மருத்துவமனையில் இருந்து மூவரும் வீட்டிற்குள் நுழைந்தனர். தன் தாத்தாவிடம் சிவகுருவின் உடல்நிலை பற்றி விசாரித்தவன், அதற்காகத்தான் காத்திருந்தேன் என்று சொல்லிவிட்டு, அவனது அறைக்கு சென்று விட்டான். ஒரு மணி நேரம் கழித்து, அவனது அறையில் நுழைந்தாள் சுமா. கட்டிலில் அமர்ந்தவாறு புத்தகம் படித்துக் கொண்டு இருந்த மணி, நிமிர்ந்து அவளைப் பார்த்தான். என்ன என்பது போல் கேள்வியாய் பார்த்த மகனைப் பார்த்து, வலிந்து புன்னகையை உதடுகளில் படரவிட்டாள். மணியின் அருகே மெத்தையில் சென்று அவள் அமர, ஏதோ பேச விரும்புகிறாள் என்று உணர்ந்தவன், புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, அவள் பேசுவதற்காக காத்திருந்தான். கண்கள் நிலையில்லாமல் அங்குமிங்கும் அலைபாய, மணிக்கு அவளது மனம் புரிந்தது. அவள் கேட்க தயங்குகிறாள், நாமே சொல்லிவிடலாம் என்று மணி நினைத்துக்கொண்டிருக்கும் போது, அவன் எதிர்பாராத விதமாக, அவனது மடியில் தலைவைத்து படுத்தாள், சுமா. அவளது ஒரு கையை பற்றியவள், அதை இழுத்து தன் முகத்தின் கீழே வைத்துக் கொண்டாள். அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர், அவனது நைட் பேன்ட்டை ஈரமாக்கியது.

என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து போனான். அவளது மடியில் இப்படித் தலை வைத்து உறங்க, எவ்வளவு நாள் ஏங்கி இருக்கிறான். இப்போது, கடந்த இரண்டு நாட்களாக கூட, எங்கே அவளது அருகாமையை இழந்து விடுவோமோ? என்று ஏங்கிக் கொண்டிருந்தவனின் மடியில், படுத்துக்கொண்டு, அவன் அம்மா சத்தமில்லாமல் அழ, ஒருசாய்ந்து படுத்திருந்தவளின் கையைத் தட்டிக் கொடுத்தான். அவன், ஏங்கி தவித்த போது, அவளிடம் இருந்து அவனுக்கு கிடைக்காத அரவணைப்பை, அவள் ஏங்கித் தவித்த போது, ஏனோ அவனால் மறுக்க முடியவில்லை. ஒரு வாரத்திற்கு முன் மதுவை ஞாபகப்படுத்தியவள், இன்று ஏனோ, அவனையே, அவனுக்கு ஞாபகப்படுத்தினாள்.

*************

இரண்டு நாள் கழித்து, அலுவலகத்தில் அமர்ந்திருந்தான் மணி.

அவனது டேபிளில் இருந்த தொலைபேசி அடித்தது, எடுத்து காதுக்கு கொடுக்க

"சார்!! அவினாஷ் தாக்கர், லைன்ல இருக்கார்!!" ஏன்று செய்தி சொல்லப் பட, அந்த தொலைபேசி அழைப்பு இணைக்கப்பட்டது.

இரண்டு நாள் அவரின் அழைப்புக்காக காத்திருந்தவன், தானே அவரை அழைத்து பேசுவது என்று முடிவு செய்து, அவரை இணைப்பில் எடுக்க கூறியிருந்தான்.

"Mr.தாக்கார்!! நீங்க என்ன பாஸ்டர்ட்னு சொல்லியிருக்க கூடாது!!" வழக்கமான குசல விசாரிப்புகள் எதுவுமின்றி, நேரடியாக காரியத்தில் இறங்கினான்.

"சோ வாட்?" அவரும் தயாராகவே இருந்தார்.

"அந்த வார்த்தையை நீங்க திரும்ப எடுத்துக்கிட்டா நல்லது!!" ஆரம்பம் ஆனாது.

"முடியாது!! நான் சரியாத்தான் சொன்னேன்!!" விட்டுக்கொடுப்பதாய் இல்லை, வாங்கிய அடியின் வீரியம் அப்படி.

"Mr. தாக்கர் சார்!! நான் உங்கள, ஒரு பெரிய பிசினஸ்மேன்னு நம்பிகிட்டு இருக்கேன்!! அந்த நம்பிக்கை தப்புன்னு தோணுது!!" சீண்டினான்

"உனக்கு என்ன வேணும்!!" நேராக விஷயத்துக்கு வந்தார்.

"எனக்கு ஒன்னும் வேண்டாம் Mr. தாக்கர்!!, உங்களுக்கு தான் ஒன்னு குடுக்கலாம்னு இருக்கேன்!!" என்றவன், பேச்சில் ஒரு இடைவெளியை ஏற்படுத்தினான்.

".....…......." மறுபுறம் அவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, இப்பொழுது அவர் தனது பேச்சைக் கேட்பதற்கு தயாராக இருக்கிறார் என்று புரிந்து மணிக்கு,

"டீல் இதுதான்!! ஃப்யூச்சர் குரூப்ஸ், போர்டுல மெம்பர் ஆகுறதுக்கு உங்களுக்கு ஒரு வாய்ப்பு!! நீங்க பண்ண வேண்டியது எல்லாம் ஒன்னே ஒன்னு தான்!! அந்த வார்த்தைய திரும்ப வாங்கிக்கணும்!! அன்ட், அந்த 20% ஆஃபர்க்கும், இதுக்கும், எந்த சம்பந்தமும் இல்லை!!" என்று சொல்லிவன், காதுகளை கூர்மையாக்கினான், சில நிமிட அமைதிக்குப் பின்

"You are a blood sniffing wolf!!" என்றவர் சிரித்தார். மணியும் சிரித்தான்.

"நேர்ல மீட் பண்ணலாமா?"

"சூர்!!"

பேரம் படிந்த நிறைவு இருவரின் குரலிலும். நீயா? நானா? என்று இருக்கும் வரைதான் பவர் கேம்மின் விதிகள் பொருந்தும். அடித்து வீழ்த்தி வெற்றி பெற்ற பின், வெற்றி பெற்றவன் இறங்கி இறங்கி வந்து, வீழ்த்தியவனை கை தூக்கி விடுவது, விழுந்தவன் தனகிக்கெதிரே நிற்பதற்கான வாய்ப்பை இல்லாமல் செய்து, வெற்றியை தக்கவைத்துக் கொள்ள மட்டுமல்லாது, விழ்த்தியவனை தன்னோடு இணைத்துக் கொண்டு, தன் பலத்தையும் பெருக்கலாம். அவனது அம்மா, அவன் மடியில் படுத்து அழுதபோது, வாழ்க்கை அவனுக்குக் கற்றுத் தந்த பாடம், இன்று தாக்கரே தன்வசம் ஈர்த்துக்கொள்ள உதவியது.

***********

ஒரு மாதம் கழித்து,

அப்போதுதான் ஒரு மீட்டிங்கை முடித்துக்கொண்டு, மணி, அவனது அலுவலக அறைக்குள் நுழைந்தான்.

"சார்!! உங்கள பாக்குறதுக்கு நேத்ரானு ஒருத்தங்க வந்திருக்காங்க!! கண்டிப்பா பாக்கணுமாம், உங்க பிரண்டுனு சொல்றாங்க!!" அவனைப் பின் தொடர்ந்து உள்ளே வந்த, அவனது உதவியாளர் சொல்ல, சிறுது நேரம் யோசித்தவன்

"வரச்சொல்லுங்க!!" என்றான்.

வரச்சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டானே ஒழிய, எதற்காக வந்திருக்கிறாள் என்று அலைபாய்ந்த அவனது மனம், படபடத்தது. தேவை இல்லாத எதையும் சிந்திக்க விடாமல் மனதை கட்டுப்படுத்திவன், நேத்ரா அறைக்குள் நுழைந்ததும், அவளைப் பார்த்து சிறிதாக சிரித்தான்.

"வா!! நேத்ரா!!" மன ஓட்டத்திற்கு மாறாக, அமைதியாக காணப்பட்டது அவனது முகம்.

"என்ன சாப்பிடுற?" நேத்ரா அவனுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்ததும், மணி கேட்க, ஒன்னும் வேண்டாம் என்பது போல் தலையசைத்தாள்.

அவளிடம் தென்பட்ட தயக்கம், மணியின் பதற்றத்தை மேலும் கூட்டியது. அதைக்காட்டிக் கொள்ளாமல் இருக்கவே, தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவளுக்கு காபி ஆர்டர் செய்தான்.

"ஒரு சின்ன ஹெல்ப்!! ஆக்சுவலா பெரிய ஹெல்ப்!!" தயங்கியவாறே கூறினாள், நேத்ரா.

"எதா இருந்தாலும், தயங்காம சொல்லு!!" தைரியமூட்டினான், யாருக்கு என்று தெரியவில்லை.

"நான் வலுண்டீரா இருக்கிற NGOக்கு, கொஞ்சம் ஃபண்ட்ஸ் தேவைப்படுது, cochlear implants, இந்த பிறவியிலேயே காது கேட்காமல் போனா, குழந்தைகளுக்காக பண்ற சர்ஜரி........!!"  

"எஸ், தெரியும் எவ்வளவு வேணும்?" இடை மறித்தான் மணி. காசு தருகிறேன் அவன் சொன்னதும் கொஞ்சம் நிம்மதி அடைந்தாள், நேத்ரா.

"ஒரு சர்ஜரிக்கு 5 லட்சம் ஆகும்!! 30  குழந்தைங்க இருக்காங்க!!" அவளிடம் இருந்த தயக்கம் தணிந்தது.

தொலைபேசியில் அழைத்து யாருக்கோ பேசியவன், பின் அதை வைத்துவிட்டு

"இந்த வருசத்துக்கான CSR ஃபண்ட்ஸ் எல்லாம் ஸ்பெண்ட் பண்ணியாச்சு!!" என்று சொன்னவன், சிறிது நேரம் யோசித்து விட்டு,

"அதான், இந்த cochlear implants, தமிழ்நாடு கவர்மெண்ட் ஃப்ரீயா தான பண்ணி கொடுக்கிறாங்கல?" இலகுவாக சிந்திக்க ஆரம்பித்து இருந்தான், மணி.

"உண்மைதான், கவர்மெண்ட்ல இந்த வருஷம் கொடுத்த ஃபண்ட்ஸ் காலி ஆயிடுச்சு!!, இன்னும் நாலு மாசம் வெயிட் பண்ணனும்!!, பர்சனலா உன்னால எவ்வளவு முடியுமோ கொடு!!, நிறைய இடத்துல ட்ரை பண்ணிட்டுத்தான் இருக்கோம்!!" நேத்ரா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ட்ராவைத் திறந்து, காசோலையில் கையெழுத்திட்டு, அதைக் கிழித்து, அவளிடம் நீட்டினான்.

"தேங்க்யூ, சோ மச்!!" காசோலையில் இரண்டு கோடி என்று எழுதப்பட்டிருக்க, சிரித்துக்கொண்டே மணியை பார்த்து கூறினாள். நன்றி கூறியவளை பார்த்து சிரித்தான்

"இரு, காபிய குடிசிட்டு கிளம்பு!!" காசோலையைப் பெற்றுக்கொண்டதும் கிளம்பியவளை பார்த்து மணி கூற, மறுக்க முடியாமல் அமர்ந்தாள்.

"சாரி டா!!" அந்த அறையில் சில நிமிடங்கள் நீடித்த அமைதியை கலைத்தாள், நேத்ரா.

"பரவால்ல!! அதெல்லாம் அப்போவே மறந்துட்டேன்!!" உதடுகள் விரிய புன்னகைத்தான். காபி வந்தது

"சாரி டா, பானு திடீர்னு கல்யாணம் பண்ணிக்கப் போறேன் சொன்னவுடனே அவகிட்ட எவ்வளவு பேசிப் பார்த்தும், முடியலன்னு ஆனதுக்கு அப்புறம் தான் உன்னைத் தேடி வந்தேன்!! நீயும் அவளுக்கு மிச்சமா பேசினதால கோபத்துல தான், அப்படி பேசிட்டேன்!!"  காபியை குடித்தவாறு தொடர்ந்தாள்.

"நீங்க ரெண்டு பேரும், இவ்வளவு பெரிய முட்டாளாக இருப்பீங்கன்னு நான் நினைக்கலே!!" மணி அறிந்த, பழைய நேத்ராவாய் மாறியிருந்தாள். அதற்கும் சிரிப்பையே பதிலாகத் தந்தான். காபியை குடித்துவிட்டு, டேபிளில் வைத்தவள்,

"நான் கிளம்புறேன்!!" விரக்தியாக, சிரித்தாள்.

"நேத்ரா!!...........” என்று நிறுத்தியவன், பின் தொடர்ந்தான்.

"முட்டாள்தனமும், புத்திசாலித்தனமும், வேற!! வேற!! இல்ல!! நாம ஒன்ன பேசும் போதோ, இல்ல ஒரு முடிவு எடுக்கும்போதோ!!, நம்ம அறிவுக்கு எட்டினவர சரின்னு பட்டதத்தான் செய்கிறோம்!!. அது முட்டாள்தனமா? புத்திசாலித்தனமாங்கிறத, காலம் தான் முடிவு பண்ணும்!!” கொஞ்சம் பெரிதாக சிரித்தான், மணி.

மணியின் புன்னகை நேத்ராவிடமும் தொற்றிக் கொண்டது. சிரித்தவாறே இடதும், வலதுமாக, தலையை ஆட்டினாள்.

"எனக்குத் தெரிஞ்ச மணி!!, ஒரு குழந்த பையன்!!, ரொம்ப நல்லவன்!! அவனுக்கு இப்படி தத்துவம் எல்லாம் பேச வராது" என்றவள், மீண்டும் இடதும் வலதுமாக தலையை அசைத்தாள்.

"அவனத்தான் நானும் தெடுறேன்!! கிடைச்சா சொல்லி விடுறேன்!!" என்று மணி சொல்ல, இருவரும் சிரித்தனர். பின், அவனிடம் இருந்து விடைபெற்று கிளம்பினாள் நேத்ரா. மணிக்கு மனதின் கணம் கொஞ்சம் குறைந்தது போல் இருந்தது.

*****************

நான்கு மாதம் கழித்து,

திட்டமிட்டதைப் போலவே, கடந்த அறு மாதங்களில், தனது பணிச்சுமையை வெகுவாகக் குறைத்து இருந்தான், மணி. தங்கள் குழுமத்தின் எதிர்கால வளர்ச்சிகளின் பொருட்டு  முடிவுகளை எடுக்கும் பொறுப்பை மட்டும் தன் வசம் வைத்துக் கொண்டு, அன்றாட நடவடிக்கைகளில் இருந்து தன்னை முற்றிலுமாக விலக்கிக் கொண்டு இருந்தான். அதில் ஒரு அங்கமாக ஒரு முக்கியமான முடிவை எடுப்பதற்கு, மீர் அலியை அழைத்திருந்தான். மணியின்  அலுவலக அறைக்குள் நுழைந்தவர், வழக்கமான குசல விசாரிப்புகள் முடிந்ததும்

"சார்!! உங்கள நம்ம R&D ஹெட்டா போடலாம்னு இருக்கேன்!!" நேராக விஷயத்துக்கு வரவும், அவரது முகத்தில், மணி எதிர்பார்த்த ஏமாற்றம் தெரிந்தது

நான்கு நிறுவனங்களாக பிரிக்கப்பட்ட தங்களது குழுமத்தின் ஒவ்வொரு நிறுவனத்திற்கும், தனித்தனியாக CEOக்களை நியமிக்கும் முடிவின், கடைசி கட்ட காய் நகர்த்தலை செய்தான் மணி. ஃப்யூச்சர் பவர்ஸ்ஸின், CEOவாக ஆக்கப்டுவோம் என்று எதிர்பார்த்திருந்தார், மீர் அலி.

"CEO அவதற்கான, எல்லா தகுதியும் உங்களுக்கு இருக்கு!! நான் உங்கள முதன்முதல், எங்க காலேஜ்ல பார்த்த அந்த ப்ரொபோஸருக்கு, R&Dதான் புடிக்கும்னு எனக்கு தோணுச்சு!! இது என்னோட பர்சனல் விருப்பம்!!. இதுல ரெண்டு ஆப்பரும் இருக்கு!!, உங்களுக்கு என்ன விருப்பமோ அதை எடுத்துக்கலாம்!! You deserve it!!" என்றவன் அவரை CEO ஆக்குவதற்கான கடிதத்தையும், R&D ஹேட் ஆக்குவதற்கான கடிதத்தையும், அவரிடம் நீட்டினான். வாங்கிக் கொண்டவர், அவனைப் பார்த்து சிரித்தார்!! அவரின் முகத்தில், சிறிது நேரத்திற்கு முன் தெரிந்த ஏமாற்றம் சுத்தமாக இல்லை.

அவருக்கு இரண்டு வாய்ப்புகளை கொடுத்திருந்தாலும், மணிக்கு உண்மையிலேயே அவருக்கு ஒரே ஒரு வாய்ப்பைதான், கொடுத்திருந்தான். வாழ்க்கையில் அவன் அடைந்திருந்த பக்குவம், தொழில் விஷயத்திலும் அவனுக்கு நிறையவே கைகொடுத்தது.

தொடர்ச்சி......
[+] 3 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 18-01-2021, 08:43 PM



Users browsing this thread: 39 Guest(s)