நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#45
தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 09 - ராசு

[Image: nivv.jpg]

திருமணம் ஏற்கனவே முடிந்திருந்ததால் மணமக்கள் மேடையில் நிற்க ஆரம்பித்த உடனே பரிசு கொடுக்கிறவர்கள் மேடை ஏற ஆரம்பித்தனர்.

வரவேற்பிலேயே கீர்த்திவாசனையும் அவரது மனைவியையும் பார்த்துவிட்டதால் மற்றவர்களிடம் சற்று பேசிக்கொண்டிருந்துவிட்டு அதன் பிறகு பரிசுப் பொருளை கொடுத்துவிட்டு பிறகு சாப்பிட்டுவிட்டுப் போகலாம் என்று வனிதாமணி சொன்னார்.


அதனால் அங்கு நடந்துகொண்டிருந்த இன்னிசைக் கச்சேரியை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.


அங்கே பாடிக்கொண்டிருந்தவர்களைப் பார்த்து யுகேந்திரன் முகம் வாடியது. அவன் மனவோட்டத்தை அறிந்த கிருஷ்ணவேணி அவனது கையைத் தட்டிக்கொடுத்தாள்.



“யுகா. நான் வேணா கீர்த்திவாசன் அங்கிள்கிட்ட கேட்டு உனக்கு ஒரு வாய்ப்பு வாங்கித்தரவா?”



“கிருஷ். நீயும் என்னைக் கிண்டல் பண்றியா?”



“இல்லைடா. அங்கே பாடறவங்களை விட நீ நல்லா பாடறேன்னு எனக்குத்தோணுது. அதான்.”



“என் மனசு வருத்தப்படக்கூடாதுன்னு சொல்றே. அவர் நல்லாதான் பாடறார்.”



“வனிம்மா. நாம கிளம்பலாமா? மகேந்திரன் வேறு ஏதோ அழைப்பு வந்திருக்குன்னு போனான். நான் போய் என்னாச்சுன்னு பார்க்கிறேன். எனக்கும் முக்கியமான வேலை இருக்கு.”



“என்னங்க இப்படி சொல்றீங்க? நானே எப்பவாவது தான் வெளியில் வரேன். எல்லாரையும் பார்த்துப்பேசிட்டு கிளம்பலாம்னு இருந்தேன்.”



“சரிம்மா. நான் கிளம்பறேன். நீயும் மத்தவங்களும் இருந்துட்டு வாங்க.”



“வந்துட்டு சாப்பிடாம போனா நல்லா இருக்காது. வாங்க போய் பரிசைக் கொடுத்துட்டு சாப்பிடப் போகலாம். அதன் பிறகு நீங்க போங்க. இன்னிக்கு நீங்க காலில் வெந்நீர் கொட்டினாற் போல ஓடினால் நாளைக்கு நம்ம பசங்க கல்யாணத்திற்கு யார் வந்து நின்று பார்ப்பாங்க?”



ரவிச்சந்திரனுக்கும் அது சரியெனப்படவே ஒத்துக்கொண்டார்.

வனிதாமணி தங்களுடன் அமர்ந்திருந்த சாருமதியையும் தங்களுடன் மேடைக்கு அழைத்தார். அவளுக்கு அது சரியெனப்படவில்லை.



நீங்க போங்க அத்தை. நான் அம்மாவைக் கூப்பிட்டுக்கொண்டு வருகிறேன்.” என்று சொல்லிவிட்டு நாசூக்காக விலகிக்கொண்டாள்.



அவர்கள் குடும்பமாக மேடை ஏறும்போது எந்த வித உரிமையும் இல்லாத தான் கூட ஏறுவது கூடாது என்று அவள் ஒதுங்கிவிட்டாள்.



ஏற்கனவே தங்கை செய்வதைப் பார்த்து மனம் நொந்திருப்பவள் அவள்.



வனிதாமணி தம்பதியுடன் யுகேந்திரனும் கிருஷ்ணவேணியும் மேடை ஏறச்சென்றனர்.



அவர்கள் நால்வரும் மேடை ஏறுவதைப் பார்த்துக்கொண்டிருந்த சாருலதா எங்கிருந்தோ ஓடிவந்து அவர்களுடன் தானும் சேர்ந்துகொண்டு மேடை ஏறினாள்.



மகேந்திரன் மண்டபத்தை விட்டு வெளியேறியதும் அவளுக்கு அவர்களுடன் சேர்ந்து அமர முடியவில்லை.



அவர்கள் தங்களுக்குள் ஒரு கூட்டணி அமைத்துக்கொண்டிருப்பது போல் அவள் பக்கமே திரும்பவில்லை.



இதில் அவளது அக்கா சாருமதியும் சேர்ந்துகொண்டது வேறு அவளது எரிச்சலை அதிகப்படுத்தியது. தனது சகோதரியை நினைத்துப் பல்லைக் கடித்துக்கொண்டாள்.



இந்த நேரத்தில் சிரித்த முகமாக இருப்பது ரொம்ப முக்கியம். இல்லை என்றால் அவள் சிரமப்பட்டு செய்துகொண்டு வந்த அலங்காரம் காலை வாரி விட்டுவிடும்.



அவள் எத்தனை திட்டம் போட்டு ஒவ்வொரு காயாக நகர்த்தி அந்தக் குடும்பத்துடன் தனக்கு உள்ள உறவை ஊர் அறிய விளம்பரம் செய்து கொண்டிருக்கிறாள்.



அது தெரியாமல் அவளது மக்கு அக்கா அதைக்கெடுக்கிறாளே என்று கோபமாய் வந்தது.



மகேந்திரன் வீட்டிலிருந்தே தன்னை பெண் கேட்டு வரவேண்டும் என்று அவள் விரும்பினாள். ரவிச்சந்திரனுக்கு அந்த எண்ணம் இருக்குமோ? என்னவோ? வனிதாமணிக்கு நிச்சயமாக இருக்காது என்று அவளும் அவளது பெற்றோரும் அறிந்திருந்தனர்.



மகேந்திரன் தொழிலில் நன்றாக காலூன்றிவிட்டான். அவனுக்குத் திருமணம் என்று வந்துவிட்டால் நான் நீ என்று அவனுக்குப் பெண் கொடுக்க போட்டிக் கொண்டு குவிந்துவிடுவார்கள் பெண் வீட்டார்கள்.



இதுவரைக்கும் அப்படி வந்திருக்கவில்லை என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.



ஆனாலும் சாருலதாவை மகேந்திரன் விரும்புகிறான். அவளை இப்போதே தங்கள் வீட்டில் ஒருத்தியாக அவர்கள் நடத்தத்தொடங்கிவிட்டார்கள்.







அவள் அவர்கள் வீட்டுப்பெண் என்று மற்றவர்களுக்குத் தோன்ற வேண்டும் என்பதற்காக அவர்கள் எந்த வீட்டு விழாவுக்கு கிளம்பினாலும் அவளும் ஒட்டுப்புல் போன்று வந்து சேர்ந்துகொள்வாள்.
அவர்களுக்கும் எதுவும் சொல்ல முடியாது. மகேந்திரனும் ரவிச்சந்திரனும் என்ன நினைக்கிறார்கள் என்று வனிதாமணிக்குத் தெரியாது. ஆனால் அவரிடம் யுகேந்திரன் வந்து கத்துவான்.
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 23-03-2019, 10:26 AM



Users browsing this thread: 37 Guest(s)