23-03-2019, 10:01 AM
ஐ.பி.எல் திருவிழா இன்று தொடங்குகிறது. இதற்கான டிக்கெட்டுகள் மடமட வென விற்றுத்தீர்ந்துவிட்டன. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், பெங்களூர் அணி மோதுகிறது. இதற்காக சென்னை வந்தடைந்த கோலி தலைமையிலான பெங்களூர் அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்புக் கொடுத்தனர். சென்னை சேப்பாக்கத்தில் இரு அணிகளும் பயிற்சியில் ஈடுபட்டதைக் காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இன்று போட்டி தொடங்க உள்ள நிலையில், விராட் கோலி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``எங்கள் அணி வலுவாக உள்ளது. அனைவருக்கும் ஐ.பி.எல் கோப்பையை வெல்ல ஆசை இருக்கிறது.
நாங்கள் சிறப்பாக விளையாடியும் ஐ.பி.எல் கோப்பையை வெல்ல முடியாதது வருத்தமாக உள்ளது. நெருக்கடியான காலகட்டத்தில் தவறான முடிவுகள் எடுத்தது உள்ளிட்ட காரணங்களால் கோப்பையை வெல்ல முடியவில்லை. சென்னை அணிக்கு எதிராக சென்னையில் விளையாடுவது எப்போதும் சவாலானதுதான். அணிக்கு என்ன தேவை என்பதைச் சரியாக அறிந்தவர் தோனி'' என்றார். சென்னை அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் பேசுகையில், ``விராட் கோலி பெங்களூர் அணியின் கேப்டனாக இருப்பது அணிக்கு பலம். மேலும் பெங்களூர் அணி சுறுசுறுப்பான மிடுக்கான அணி. எனவே, இந்த ஆட்டம் கடுமையானதாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும்'' என்று தெரிவித்தார்.