23-03-2019, 09:51 AM
அதிமுக எம்.எல்.ஏ-வின் வெற்றி செல்லாது! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
கடந்த 2016ல் திருப்பரங்குன்றம் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.கே.போஸ், திமுக சார்பில் டாக்டர் சரவணன் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இந்த வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில்,
“ஏ.கே.போஸ் தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யப்பட்ட ஏ மற்றும் பி படிவங்களில் அதிமுக கட்சியின் அங்கீகார கடிதத்தில் ஜெயலலிதாவின் கைரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏ.கே.போஸ் வேட்பு மனு தாக்கல் செய்த சமயத்தில் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சுயநினைவில்லாத நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனவே, போலியான கையெழுத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முறைகேடுகள் செய்து தேர்தலில் போட்டியிட்டதால் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும்”
என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,
“அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட ஏ.கே.போஸ் தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் அவரை அங்கீகரித்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஏ மற்றும் பி படிவங்களில் கைரேகை வைக்கும்போது சுயநினைவுடன் தான் இருந்தார் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.
இந்த வழக்கில் சாட்சியம் அளித்த டாக்டர் பாலாஜி, ஜெயலலிதாவை தான் மட்டுமே சந்தித்ததாகவும், அவரை சந்திப்பதற்கு முன்பாகவே வேட்புமனு படிவத்தில் அவருடைய கைரேகை இருந்ததாகவும் மனுதாரரின் வக்கீல் அருணின் குறுக்கு விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.
எனவே, அந்த கைரேகையை அவர் ஜெயலலிதாவை நேரில் சந்திக்கும்போது அவரிடமிருந்து பெறவில்லை என்பது அவரது வாக்குமூலத்தில் இருந்தே ஊர்ஜிதமாகிறது.
ஆளுநர், மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள் என்று ஒருவரும் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை என்ற நிலையில் டாக்டர் பாலாஜி மட்டும் தனியாக சந்தித்தேன் என கூறுவதும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
அதிமுக வேட்பாளரின் வேட்புமனுவில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளது உறுதியாகியுள்ளது. எனவே, ஏ.கே.போசை அங்கீகரித்து அளிக்கப்பட்ட வேட்புமனு படிவங்களை தேர்தல் ஆணையம் ஏற்றது செல்லாது என்பதால் அவரது வெற்றியும் செல்லாது.
இதை இந்த நீதிமன்றம் பரிசீலனை செய்து ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது”
என்று தீர்ப்பு வழங்கினர்.