18-03-2019, 09:49 AM
கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். மூன்று மாத சிகிச்சைக்குப் பிறகு இந்தியா திரும்பினார். அதன்பிறகு, இரண்டுமுறை அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டார். இருப்பினும் அவருக்கு உடல்நிலை சரியாகாமல் இருந்து வந்தது. இருப்பினும் சிகிச்சை எடுத்துக்கொண்டே அரசுப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் கூட பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கலந்துகொண்டிருந்தார்.
பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின் மனோகர் பாரிக்கரின் உடல் நிலை கடந்த சில நாள்களாக மிகவும் மோசமடைந்துவிட்டதாக கூறப்பட்டது. இதனால் மீண்டும் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை முதல் அவரது உடல்நிலை மோசமாக இருந்தது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சிறிது நேரம் முன்பு உயிரிழந்தார். அவரது மறைவை அடுத்து பா.ஜ.க தலைவர்கள் கோவா விரைந்துள்ளனர்.
மனோகர் பாரிக்கரின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ``பொதுவாழ்க்கையில் மனோகர் பாரிக்கரின் சேவையை நாட்டு மக்கள் என்றும் மறக்கமாட்டார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் ராகுல் காந்தி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ``கோவா மக்களுக்குப் பிடித்தவர்களில் ஒருவராக பாரிக்கர் இருந்தார். அவர் இறப்புச் செய்தி வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.