18-03-2019, 09:46 AM
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 20 திமுக வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். எதிர்பார்த்ததுபோலவே திமுகவில் 6 வாரிசுகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி தூத்துக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதேபோல அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் வேலூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன் வழக்கம்போல மத்திய சென்னை தொகுதியிலும், மறைந்த முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகளும் தங்கம் தென்னரசுவின் சகோதரியுமான தமிழச்சி தங்கப்பாண்டியன் தென் சென்னையிலும் போட்டியிடுகிறார்கள். முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன் டாக்டர் கலாநிதி வட சென்னையில் போட்டியிடுகிறார். இவர்கள் அல்லாமல் முன்னாள் அமைச்சர்கள் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி கள்ளக்குறிச்சி தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
திமுகவில் 6 வாரிசுகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவிலும் 4 வாரிசுகள் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.தென் சென்னையில் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தென் சென்னையில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். மதுரை மாநகராட்சி முன்னாள் மேயரும் தற்போதைய மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ராஜன் செல்லப்பாவின் மகன் வி.வி.ஆர்.ராஜ் சத்யனுக்கு மதுரை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.