நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#31
அந்தப் பாசத்தில் அவன் தந்தையைவிட மிஞ்சிவிட்டான்.

அது யுகேந்திரனுக்கும் தெரியும். ஆனால் அவன் தன் சகோரனிடம் எதிர்பார்ப்பது தோழமையைத்தான்.
“ஏய் அப்படி என்ன சிந்தனையில் வர்றே கிருஷ்?”
யுகேந்திரனின் குரல் அவளை நினைவுக்கு இழுத்து வந்தது.
அவளால் இன்னமும் நம்ப முடியவில்லை.
“என்னாச்சுடா? ஏன் அப்படி பார்க்கிறே?”

“போடா. எல்லாம் உன்னால்தான்.”
“நான் என்ன பண்ணேன்?”
“நான் உன்னைத் துரத்திக்கிட்டு வந்தேன். நீ எதுக்கு என்கிட்டே மாட்டாம ஓடினே? அதனால்தான் …”

சொல்லாமல் நிறுத்தியவளை ஆர்வத்துடன் பார்த்தான்.
“அதனால் என்ன? சொல்லு. என் அண்ணன் வந்தானே. அவன் உன்னை திட்டிட்டானா?”
“அவர் என்னைத் திட்டறதில் உனக்கு அத்தனை சந்தோசம் போல.”

“பின்னே? என்னால் முடியாததை என் அண்ணனாவது செய்தானே என்ற சந்தோசம்தான்.”

“நீ ஒன்னும் சந்தோசப்பட வேண்டாம். அவர் என்னைத் திட்டலை. சாரின்னு சொல்லிட்டு போயிட்டார். அதுதான் எனக்கு குழப்பமா இருக்கு.”

“அப்படியா? அதுதான் அவனே அதை பெரிதா எடுத்துக்கலை. நீ ஏன் கவலைப்படறே? எனக்கு அவனைப் பத்தி நல்லா தெரியும். கடுகடுன்னு இருக்கிற மாதிரி காண்பிச்சிப்பான். ஆனால் மனசு கல்கண்டு மாதிரி.”

“சரி. சரி. உன் அண்ணன் புராணம் பாடினது போதும்.”

அவள் சலித்துக்கொள்வது போல் நடித்தாள்.

யுகேந்திரன் அவளிடம் பேசும்போது அதிகமாய் தனது குடும்பத்தாரைப் பற்றி மட்டுமே பேசுவான்.

அப்படிப் பேசும்போதெல்லாம் அண்ணன் பேச்சு வரும்போது அவன் முகம் ஒளிரும். அதில் அவனது பிரியம் தெரியும். அடிக்கடி அவன் தன் அண்ணனைப் பற்றி பேசியதாலோ என்னவோ அவளுக்கு மகேந்திரனை வேற்றாளாய் நினைக்கத் தோணவில்லை.

அதனால்தான் அவன் தங்கள் கல்லூரி நிகழ்ச்சிக்கு வந்தபோது அவளை அறியாமல் அவனைப் பார்த்து புன்னகைத்தது எல்லாம். ஆனால் அவன் பதிலுக்கு சிரிக்காமல் யோசனையோடு பார்த்த பிறகுதான் யுகேந்திரன் தன் அண்ணனைப் பற்றி சொன்னதெல்லாம் நினைவுக்கு வந்தது.

அவர்கள் வீட்டிற்கு கிளம்பும்போதும் அவன் ஒதுங்கிவிடுவான் என்று நினைத்துதான் வந்தாள். ஆனால் அவனோ யாருக்கும் தெரியாமல் அவளைக் கேவலமாகக் கணித்துத் திட்டிவிட்டான்.

அவனை உயர்ந்த இடத்தில் அவளது மனத்தில் வைத்திருக்க அவன் இந்த அளவிற்கு தரக்குறைவாகப் பேசிவிட்டானே என்று நொந்துபோனாள்.
தான் அவர்கள் வீட்டிற்கு வந்ததுகூடத் தவறோ என்று எண்ணிவிட்டாள்.

ஆனால் யுகேந்திரனின் அன்பும் வனிதாமணி காட்டிய பாசமும் அவளை அங்கிருந்து கிளம்ப விடவில்லை.


இப்போது எதற்காக தன்னிடம் சாரி என்று சொன்னான் என்று அவளுக்குப் புரியவில்லை.

அவள் ஓடி வந்த வேகத்திற்கு அவன் மீது மட்டும் மோதாமல் இருந்திருந்தால் அவளுக்கு நன்றாக அடிபட்டிருக்கும்.

அவன் அல்லாது யுகேந்திரன் மீது மோதியிருந்தால் நிச்சயமாக இருவரும் சேர்ந்து உருண்டிருப்பர்.

யுகேந்திரன் அந்தளவிற்கு திடகாத்திரம் இல்லாதவன். வெடவெடவென்றுதான் அவன் உடல் இருக்கும். அவன் தந்தை அண்ணனைப் போன்று நன்றாக வளர்ந்திருப்பதால் அவன் மேலும் ஒல்லியாகத் தெரிவான்.

வனிதாமணிக்குக்கூட அவனது தோற்றம்தான் கவலையளித்தது.

அவனது உடலைத் தேற்றுவதற்காக அவரும் என்னென்னவோ செய்து பார்த்துவிட்டார்.

ஆனால் தேறத்தான் இல்லை.

அவளிடமே புலம்பியிருக்கிறார்.

“அவனை நல்லா சாப்பிட பழக்கியிருக்கேன்மா. அப்படியிருந்தும் அவன் சாப்பிடற சாப்பாடு எல்லாம் எங்கேதான் போகுதோ தெரியலை. உடலில் ஒட்டவே மாட்டேங்கிறது. கொஞ்சம் கூட உடம்பில் சதை போட மாட்டேங்குது.”

என்று வருத்தம் மேலோங்க சொல்லியிருக்கிறார்.

அவனுக்கு அப்படியே நேரெதிர் மகேந்திரன். அத்தனை கம்பீரமாய் இருக்கிறான். ஜிம்முக்கு தினமும் போகிற மாதிரியான உடற்கட்டு.

அவளை அத்தனை லாவகமாய் பிடித்து நிறுத்தி விழாமல் தடுத்துவிட்டான்.

இதுவரை அவனை அருகில் இருந்து அவள் பார்க்கவில்லை. சும்மாவே என்னென்னவோ சொல்கிறான். இப்போது வந்து மோதியதே வேண்டுமென்றுதான் என்று திட்டுவான் என்று எதிர்பார்த்தவள் அவனது திட்டை எதிர்பார்த்து கண்களை மூடிக்கொண்டாள். அவனோ நிதானமாக அவளை நிற்க வைத்துவிட்டு சாரி என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

அவன் பேசிய பேச்சிற்கு அவன் மீது தனக்கு கோபம்தான் வந்திருக்க வேண்டும்.

ஆனால் வரவில்லை. அவன் தன் குடும்பத்தின் மீதுள்ள அக்கறையினால்தான் அப்படி பேசுகிறான் என்று அவளுக்குப் புரிந்தது.

தங்களைப் பணக்காரர்களாக காட்டிக்கொள்ளாமல் இருப்பதன் காரணத்தை ஒருநாள் யுகேந்திரன் அவளிடம் சொல்லியிருந்தான்.



அவனது தாத்தாவின் தம்பி இளவயதில் ஒரு பெண்ணை மணக்க ஆசைப்பட்டிருக்கிறார். அவரும் அந்தப் பெண்ணும் பழகியிருக்கிறார்கள்.

தாத்தாவின் தந்தைக்கு அதில் விருப்பமில்லை.

அந்தப் பெண் பணத்திற்காகத்தான் அவரோடு சுற்றுவதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.


அதனால் திருமணத்தையும் மறுத்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அவர் தனக்கு சொத்தும் வேண்டாம் சொந்தமும் வேண்டாம். தான் விரும்பற பெண்ணே போதும்னு வீட்டை விட்டு போய்விட்டார்.
அவர் அந்தப்பெண்ணின் மீது வைத்த நம்பிக்கை பொய்த்துப்போனது.
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 13-03-2019, 12:00 PM



Users browsing this thread: 29 Guest(s)