Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
[Image: nrm37mb_to-let_625x300_21_February_19.jpg]
இந்தாண்டுக்கான தேசிய விருதை வென்றது என்ற பெறுமையையும், பல சர்வதேச விருதுகளை வென்ற படம் என்ற கௌரவத்துடனும் திரைக்கு வந்திருக்கிறது இயக்குநர் & ஒளிப்பதிவாளர் செழியனின் "டூ லெட்".

2007ம் ஆண்டுக்கு பின் சென்னையில் ஆதிக்கம் செய்யும் ஐ டி துறையின் வருகையால் நடுத்தர, நலிந்த வர்க்கத்தினரின் அன்றாட தேவைகளின் ஒன்றான வீடு என்பது எப்படி போராடி அடையும் ஒன்றாக மாறியது என்பது தான் கதை. இந்த படத்தை ஒரு திரைப்படம் என்ற வட்டத்துக்குள் கண்டிப்பாக அடைக்க முடியாது. ஈசல் புற்றுபோல் உள்ள மொத்த சென்னையில், நிரந்தர வருமானமின்றி, பல கனவுகளை தூக்கி சுமக்கும் ஒரு குடும்பத்தை தேர்ந்தெடுத்து அதை டாக்குமெண்டரி செய்தால் எப்படி இருக்குமோ, அப்படி ஒரு எதார்த்தமான படம் தான் இது. ஏனென்றால் படத்தின் பல இடங்களில் நம்மையோ, நம் நண்பர்களையோ, அவ்வளவு ஏன்... யாரென்று தெரியாத ஒருவரையோ கூட நம்மால் ரிலேட் செய்து கொள்ள முடிகிறது. அதற்கு எழுத்து, இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என அனைத்தும் ஒரு சேர பிணைந்திருப்பது தான் காரணம்.

கற்பனையை விட எதார்த்தத்திற்கு தான் வன்முறை குணம் அதிகம். எந்த ஒரு காரணமின்றி திடீரென வீட்டை காலி செய்யுமாறு வீட்டு உரிமையாளர் சொல்லுவதில் ஆரம்பிக்கிறது டூ லெட் புராணம். சினிமாவில் இயக்குநர் ஆகவேண்டும் என்ற கனவோடு பகுதிநேர ரைட்டராக, பக்குவமான கணவனாக, குறும்புள்ள தந்தையாக, இளங்கோ எனும் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் சந்தோஷ். உடல் மொழியில் அவ்வளவு எதார்த்தம். கதை எழுதும் காட்சியில் ஒரு இயக்குநர் தன்னை எப்படி அர்ப்பணிக்கிறான் எனும் காட்சியாகட்டும், மறுகணமே கஞ்சி குடிக்கும் பொழுது வீடு பார்க்கவருபவர்கள் முன் எப்படி குறுகி நிற்கிறான் என்ற காட்சியாகட்டும் சந்தோஷின் நடிப்பு அருமை. கனவுக்கான ஓட்டமும், குடும்பத்திற்கான ஓட்டமும் ஒருசேர உள்ள ஒரு சராசரி மனிதனாக அவரது கதாபாத்திரம் எழுதப்பட்ட விதமும் பேரறுமை.

அமுதாவாக வரும் ஷீலா மிக கட்சிதமாக அவரது நடிப்பால் கதாபாத்திரத்துள் பொருந்துகிறார். வெளியில் சென்று வரும் கணவன்களுக்கு இருக்கும் போராட்டத்தை விட வீட்டிற்குள்ளே இருக்கும் மனைவி சந்திக்கும் போராட்டம் பெரிது என்பதை தன் நடிப்பால் அவர் வெளிப்படுத்தும் விதம் பாராட்ட வேண்டியது. பேச்சில் நிதானம், வாடகை வீடு கிடைக்காத போதும் சொந்த வீட்டிற்கு கனவு காணும் சராசரி பெண், சூழ்நிலைக்கு ஏற்றார் போல் உணர்சிவசப்படுதல் போன்ற பல குணங்களால் அமுதா எனும் கதாபாத்திரத்தை நாம் அன்றாடம் நம் வாழ்வில் சந்தித்து கொண்டிருக்கிறோமே என்று எண்ணும் அளவிற்கு அவரது எதார்த்த நடிப்பால் தன் கதாபாத்திரத்துக்குள் கச்சிதமாக பொருந்துகிறார் ஷீலா.

சித்தார்த்தாக வரும் தருணின் நடிப்பும் எதார்த்தம்... அழகு... ஒரு கட்டத்தில் வீடு தேடி அலையும் போது அனைத்து வீட்டிலும் டூ லெட் பலகையை நாள் முழுவதும் பார்த்து திரும்பும் சித்தார்த் அதே டூ லெட் பலகையை தன் வீட்டிலும் பார்க்கும் போது அவனது கற்பனையில் வீடு என்றாலே "டூ லெட்" பலகை இருக்கும் என அவனது ஓவியத்தில் வெளிப்படுவது கவிதை போன்றொரு காட்சி.

இந்த படத்தில் வரும் ஒவ்வோரு வீட்டு உரிமையாளரும் கிட்டதட்ட வில்லன்கள் போல் காட்டபட்டிருப்பது மட்டும் நமக்கு சற்று மிகைபடுத்தபட்டுள்ளதோ என்று எண்ண தோன்றுகிறது. எனினும் கடைசியாக வரும் சேட் கதாப்பாத்திரம் ஆறுதல் தருகிறது. சினிமாகாரனுக்கு வீட்ட தான் கொடுக்க மாட்டாங்க, ஆனா நாட்டையே கொடுப்பாங்க எனும் போது சராசரி ரசிகனாக, சினிமா காதலனாக நம்மால் கைதட்டாமல் இருக்க முடியாது.

உண்மையிலேயே படத்தில் வீடு தான் பிரச்சனையா?, அல்ல வாடகை கொடுக்க முடியாத அளவுக்கு பணம் இல்லாதது தான் பிரச்சனையா? என படம் பார்க்கும் அனைவருக்கும் கேள்விகள் வரலாம். அதை இயக்குநர் ஒரு காட்சியில் அழகாக விளக்கியிருப்பது அருமை. ஒரு நொடியில் வாடகை 5500 ல் இருந்து 6000 ஆக மாறும்போது ஒரு குடும்ப தலைவனாக இளங்கோ ஒரு நொடி யோசிப்பதும், அதை பார்த்து வீட்டு உரிமையாளர் யோசிப்பதும், மறுகணமே பயத்தில் அந்த வாடகைக்கு அவன் சம்மதிப்பது தான் எதார்த்த வாழ்க்கை என்பதை அழகாக எழுதியுள்ளார் செழியன்.

சினிமா எடுப்பதும், குடும்பம் நடத்துவதும் ஒன்றே ஒன்றின் அடிப்படையில் தான்... பட்ஜெட்..... அதை சரியான இடத்தில் அவர் பதிவு செய்கிறார்.

படம் மே 4ம் தேதி காலையுடன் முடிகிறது. ஆனால் அன்றைய காலைக்கும், மாலைக்கும் இடைப்பொழுதில் நடுக்கும் சம்பவங்களை மட்டுமே ஒரு தனி படமாக எடுக்கலாம். அது கற்பனை செய்ய முடியாத ஒரு ரணத்தை கண்டிப்பாக கொடுக்கும். அதை இயக்குநர் செழியன் எடுப்பதை விட , படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்கள் சிறிது நேரம் கற்பனை செய்து பார்த்தால் போதும். நீங்களும் ஒரு எழுத்தாளர் தான்.

டூ லெட்....... தவிர்க்க முடியாத, தவிர்க்க கூடாத, ரசிக்க கூடிய , கொண்டாட வேண்டிய ஒரு தமிழ் சினிமா..... மன்னிக்கவும், "ஒரு உலக சினிமா"
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 10-03-2019, 09:53 AM



Users browsing this thread: 3 Guest(s)