05-03-2019, 10:44 AM
யாரோ கதவைத் தட்டினார்கள். திறந்தாள். மெலிதான தோற்றம், சற்றே உயரமாயிருந்த அவனை முன்பின் பார்த்ததில்லை. "எதுவும் கதைக்காமல் பின்னாலையே வா." மெலிதான குரலில் சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் விறுவிறு எண்டு போய் இரண்டு ரூம் தள்ளி இருந்த ஒரு ரூமிட்க்குள் சென்று மறைந்து விட்டான்.
போவதா வேண்டாமா எண்டு யோசிச்சுக் கொண்டிருக்கையில் போன் அடித்தது.
"அவன் கூடப் போ. வன்னிக்குப் போகிறத்துக்கு ஹெல்ப் பண்ணுவான்." சொன்னது யார்? தெரியவில்லை.
இதுவரைக்கும் வந்தாச்சு. பேசாமல் போய்த்தான் பாப்பமே? தைரியத்தை வரவழைத்துக் கொண்டு போய்ப் பார்த்தால் அங்கு ஏற்கனவே மூன்று பேர் இருந்தனர், ஒரு பெண் உட்பட.
ஒருவிதத் தயக்கத்துடன் உள்ளே சென்றதும் முதலில் வந்தவன் அவசர அவசரமாய்க் கதவைப் பூட்டி விட்டு,
"எங்கை வந்து என்ன சொல்லிக்கொண்டு இருக்கிறாய் எண்டு தெரியுமே? யாரும் கேள்விப் பட்டால் உன்ட உடல்ல உயிர் இருக்காது." அவன் குரலில் பதற்றமிருந்தது.
உயிருக்குப் பயந்தவள் எண்டால் இதுவரை வந்திருப்பாளா என்ன? அவர்களும் யோசித்திருப்பார்களோ?
சிறிது நேர அமைதியைக் கலைத்தபடி அந்தப் பெண்தான் கேட்டாள்.
"சரி, உமக்கு உள்ளை யாரையும் தெரியுமே?"
இப்போது அவளுக்குச் சந்தேகம் வந்தது. இவர்கள் உண்மையிலேயே தொடர்பா? இல்லை..?
"உங்களை நான் எப்பிடி நம்புறது?", ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
"நம்பத் தேவையில்லை, நீ போகலாம்.." அதுவரை அமைதியாயிருந்த அந்தப் பெரியவர் சொன்னார்.
அவரைப் பார்த்தால் வயது ஒரு நாப்பதுக்கு மேலிருக்கும். தலைவரின் முகச்சாயல் இருந்தது. தலைவரை இதுவரை அவள் நேரில் பார்த்ததில்லை. என்ன ஆனாலும் சரி, சாவதுக்குமுன் எப்படியாச்சும் ஒருமுறை பாத்திட வேணும், அவரையும் தான்!
"கண்ணன் மாமாவைத் தெரியும்.. பிறகு.. அவரின்டை.." எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்..
"இயக்கத்திலை எத்தனை கண்ணன்கள் இருக்கினம். நீ ஆரைச் சொல்றே?"
"இயக்கத்திலை எத்தினை கண்ணன்கள் எண்டு எனக்குத் தெரியாது. ஆனால் என்ட கண்ணன் மாமாவை இயக்கத்திலை இருக்கிற எல்லாருக்குமே தெரியும். அவர்தான் ........." ஆக்ரோஷமாய் அவரின் பெயரை அவள் சொல்லி முடித்தபோது எல்லோர் முகங்களும் பேயறைந்த மாதிரி ஆகிவிட்டிருந்தது.
*****
தொடரும்..