05-03-2019, 10:43 AM
பாகம் ஒன்பது : மாமன்
அவளைக்கேட்டால் அவர் மனிதருள் மாணிக்கம் என்பாள். படிப்பில் புலியாயிருந்த அவரை campus நுழையவிடாது தடுத்தவர்கள் பின்னாளில் அதற்குக் கொடுத்த விலை மிகமிக அதிகம் தான். ஈழத்தில் நடந்தது ஒரு குருஷேஸ்திரம் என்றால், அதில் கிருஷ்ணர் இவராய்த் தான் இருந்திருப்பார். அவர் இருந்தவரை அர்ஜுனனைத் தோற்கவிட்டதில்லை. அர்ஜுனன் தோற்ற போது அவர் உயிரோடு இருந்திருக்கவில்லை.
அப்பேர்ப்பட்ட ஒரு மாமனிதரைப் பற்றி அவள் சொல்லப்போனால் அது மாபெரும் சமுத்திரத்தை ஒரு சிறுமி அள்ளிவிட முயற்சிப்பது போல்தான் இருக்கும். ஆனாலுமே அவள் அள்ளிய அந்த சிறு துளிகளும் சேர்ந்துதானே ஒரு சமுத்திரமாகிறது?
"உனக்கு இன்னும் வயசிருக்கு. ஒரு மூண்டுனாலு வருசத்துக்குப் பிறகு வரேக்கை சொல்லு, கூட்டிட்டுப் போறன்..". எங்கே போவதேண்டு தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தவளுக்கு திடீரென்று முன்னொருநாள் அவர் சொல்லி விட்டுப் போன வார்த்தைகள் ஞாபகத்துக்கு வந்தது.
இத்தனை நாள் எப்படி மறந்தோம் அவரை? பார்த்தது பேசியது என்னமோ ஓரிரு தடவைதான். ஆனால் அந்தச் சிறு சிறு தருணங்களிலேயே அவளை முழுதாய்க் கொள்ளையடித்துச் சென்றிருந்தார். அவளைப் பொறுத்தவரை அவளின் முதலும் கடைசியுமான ஹீரோ.. நிஜ ஹீரோ.. அவர் தான்.
காந்தியையும் நேருவையும் பற்றி கதையளப்பவர்களில் எத்தனை பேருக்கு இந்தியாவின் விடுதலைக்கு முக்கிய பங்காற்றிய சுபாஷ் சந்திரபோசைப்பற்றிக் கதைக்க தைரியம் இருக்கு? வாய்வீரத்துக்கு மதிப்புக்கொடுப்பவர் யாரும் செயல்வீரர்களைக் கண்டுகொள்வதேயில்லை. அப்பேர்ப்பட்ட ஒரு மாவீரர்.. செயல் வீரர் தான் அவர்.
அவரை ஒரு போராளியாய் சந்தித்த அந்த முதல் நாள் இன்னும் பசுமையாய் நெஞ்சிலிருக்கு. அப்போது ஒரு சிறு கைத்துப்பாக்கிதான் வைத்திருந்தார். ஆறு குண்டு போட்டு அடிக்கிறது. விவரம் தெரியாத வயது. அப்பெல்லாம் AK47 எண்டு பெரிய பெரிய துவக்கு தூக்கிக்கொண்டு பலர் போறதைப் பார்த்தவள், இவர் ஏன் இந்தச் சின்னத் துவக்கைத் தூக்கிக்கொண்டு திரியிறார் எண்டு நினைத்திருக்கிறாள்.
"ஒருதரம் சுட்டுப் பார்க்கவேணும்" எண்டு அவள் ஆசைப்பட்டபோது, "துவக்குத்தான் எங்கடை உயிர் அதை யாருக்கும் குடுக்ககூடாது" எண்டு அவர்சொன்னதைப் புரிந்து கொள்ளும் நிலையிலில்லை.
கடைசியாய் அவளது தொந்தரவு தாங்காமல், தூக்கி மடியிலிருத்தி அந்தச் சின்னக் கையை எடுத்து துவக்கின்மேல் வைத்து தன் கையால் மூடி, பிஞ்சு விரல்களின் மேல் அவர் விரல்கள் மெதுவாய் அழுத்தியபோது, அது வெடித்தா என்ன? ஓடிச்சென்று முற்றத்தில் பார்த்தாள். எதையுமே காணவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பிவந்து "நீங்க என்னை நல்லா எமாத்திப்போட்டீங்க" என்று கண்கலங்கி அறைக்குள் சென்று படுத்தவள்தான் அவர் திரும்பிப் போகும்வரை வெளியே வரவேயில்லை.
பிறகொருதரம் அவரின் அம்மாவின் ஈமைச்சடங்கில் தூரத்தில் நின்று பார்த்தது. துருவித் துருவிப் பார்த்தும் கண்ணில் ஒருசொட்டுக் கண்ணீரை காணோம். இறுகிப் போய் நின்றிருந்தார். "இயக்கத்துக்குப் போனா அழக்கூடாதாம்" பக்கத்தில் நின்ற யாரோ சொன்னார்கள். 'பந்தபாசமெல்லாம் ஒருமாயை' என்று எங்கேயோ புத்தகத்தில் வாசித்தது ஞாபகம் வர அவர்மேல் மரியாதை இன்னும் கூடிவிட்டிருந்தது.
"அக்கா.. அக்கா.."
அவள் ஓடிச்சென்று யன்னல்வழியே கேற்றைப் பார்த்தாள். புழுதி மூடிப்போய் ஒரு பிக்-அப் வாசலில் நின்றிருந்தது. அம்மாவின் தம்பிகள் எல்லாருமே வெளியூர்தான், வருவது அபூர்வம். அப்பிடியிருக்க அக்கா என்று சொல்லிக்கொண்டு உரிமையாய் அதுவும் இதிலை வந்து இறங்குவது யாராயிருக்கும்? யோசனையுடன் கதவைத் திறந்தாள்.