05-03-2019, 09:25 AM
பிகானரில் பாகிஸ்தானின் ஆளில்லா போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய விமானப்படை
ராஜஸ்தான், பிகானரில் சர்வதேச எல்லை அருகே பறந்த பாகிஸ்தானைச் சேர்ந்த ஆளில்லா விமானத்தை இந்திய விமானப்படைச் சுட்டு வீழ்த்தியது.
இது குறித்து இந்தியப் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
திங்கள் காலை 11.30 மணியளவில் விமான ஊடுருவலைக் கண்டுபிடித்தோம். உடனடியாக Su-30MKIs (போர்விமானம்) வானில் எழும்பியது இதனையடுத்து பாகிஸ்தானைச் சேர்ந்த ஆளில்லா போர்விமானம் ஏவுகணையினால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. ஆளில்லா விமானம் சர்வதேச எல்லையின் இன்னொரு புறத்தில் போய் விழுந்தது.
இந்தியா, பாகிஸ்தான் இருநாடுகளுமே ஆளில்லா விமானத்தை கண்காணிப்பு நோக்கங்களுக்காக எல்லைப்பகுதியில் பயன்படுத்தி வருகின்றன.
கடந்த செவ்வாயன்று பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் உள்ள பாலகோட்டில் இந்திய ராணுவத்தினர் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர். அதன் பிறகே இந்திய விமானப்படை உச்சபட்ச எச்சரிக்கையில் பணியாற்றி வருகிறது.
இந்நிலையில் நேற்று தரையில் உள்ள ராடார் சாதனம் பாகிஸ்தான் ஆளில்லா போர் விமானம் ஊடுருவியதைக் கண்டுபிடித்தது. பிறகு சுகாய்-30 ரக ஜெட் ஒன்று வான்வெளியில் கண்காணிப்புச் செய்து கொண்டிருந்த போது ஊடுருவல் பாகிஸ்தான் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது.
கடந்த 6 நாட்களில் 2வது முறையாக இந்திய எல்லைக்குள் ஆளில்லா விமானத்தை அனுப்ப முயன்று தோல்வி அடைந்தது பாகிஸ்தான். பிப்.27ம் தேதி கட்சில் இது போன்றதொரு முயற்சி முறியடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது