Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
திரை விமர்சனம்- தடம்

[Image: arunjpg]
எழில் சிவில் இன்ஜினீயரிங் முடித்துவிட் டுத் தனியே கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். அவருடைய காதலி தீபிகா (தான்யா ஹோப்). கவின் தன் நண்பன் சுருளியுடன் (யோகிபாபு) இணைந்து திருட்டு வேலைகளில் ஈடுபட்டுவருகிறார். எழில், கவின் இருவரின் வாழ்க்கைச் சம்பவங்களையும் அடுத்தடுத்துக் கோர்த்து ஒரு கொலை என்னும் புள்ளியில் இருவரையும் ஒன்று சேர்க்கிறது திரைக்கதை.
வழக்கமான இரட்டையர் கதையில் என்ன புதுமை இருக்க வாய்ப்பிருக்கிறது என்ற எண்ணத்துடன் வரும் ரசிகர்களை மாறுபட்ட திரைக்கதையைத் தந்து அசரடித்திருக்கிறார் இயக்குநர் மகிழ் திருமேனி. சுவாரஸ்யம் நிறைத்து  மிகத் தெளிவாகத் திரையில் கதையைச் சொல்லிச் செல்கிறார். 
எழில், கவின் இருவரது தாய் பாத்தி ரத்தை ஏற்றிருக்கிறார் சோனியா அகர்வால். வழக்கமாகத் தந்தை சூதாடியாக இருப்பார். இந்தப் படத்தில் தாய் சூதாடியாக இருக்கிறார். சீட்டாட்ட கிளப்களுக்கு மகனை அழைத்துச் செல்லும் அந்தத் தாய்க்கு மகன் என்றால் உயிர். தன் மீதான அவனது நம்பிக்கை பொய்த்துப் போன ஒரு தருணத்தில் தன்னையே மாய்த்துக்கொள்கிறார் அவர். அந்தத் தாயின் அன்புதான் இந்தப் படத்தின் ஆதார பலம். அது திரைக்கதையில் உணர்வுரீதியில் கலந்திருக்கிறது. பொதுச் சமூகம் எளிதில்  புறந்தள்ளக்கூடிய ஆபத்து கொண்ட அந்தக் கதாபாத்திரச் சித்தரிப்பில் மகிழ் திருமேனி வெற்றிபெற்றிருக்கிறார்.
த்ரில்லர்  படங்களுக்கே  உரிய  திருப்பங்களும்  கதையோட்டத்துடன்  பயணிப்பதில் இயக்குநர்  தன்  கைவண்ணத்தைக் காட்டி இருக்கிறார். குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற படங்களில் திரைக்கதையில் கொஞ்சம் சொதப்பினாலும் குழப்பங்கள் தொற்றி நிற்கும். ஆனால், அதற்கு இடம் தராமல் திரைக்கதையும் காட்சிப்படுத்து தலும் கச்சிதம்.
படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை.
ஒரே உருவத்தில் குழப்பும் இருவரும் தங்களைப் பற்றி முழுமையாக அவர்களே சொல்லாதவரை, போலீஸார் அதைப் பற்றி விசாரிக்காமல் இருப்பது விநோதம்.
சீரியஸான வழக்கை விசாரிக்கும் சூழலில் உடன் வரும் போலீஸார்  சிரிப்பு போலீ ஸாக வருவது காட்சியின் மீதான நம்பகத் தன்மையைக் குறைத்துவிடுகிறது. குறிப்பாக தடயங்கள் எதுவும் கைகொடுக்காமல் போலீஸார் திணறும்போது, கிடைக்கும் முக்கியமான தடயம் போலீஸின் சபலத் தால் அழிவதாகக் காட்டும் காட்சி படத்தில் மிகப் பெரிய ஓட்டை. இதுபோன்ற காட்சி களில் இயக்குநர் கொஞ்சம் கவனம் காட்டியிருக்கலாம்.

அருண் விஜய்க்கு இந்தப் படம் நிச்சயம் பெயர் பெற்று தரும். இரட்டையர் பாத்திரத் திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். தோற்றத்திலும் உடல்மொழியிலும் ரொம்பவே மாற்றத்தைக் காட்டியிருக்கிறார். கதைக்கேற்ப  நடை, உடை, பாவனையிலும் நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார்.  நாயகியாக வரும் தான்யா ஹோப், கொஞ்ச நேரமே வந்தாலும், கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்தியிருக்கிறார். கவினை காதலிக்கும் அப்பாவி பெண்ணாக வந்துபோகிறார் ஸ்மிருதி வெங்கட். முரட்டு இன்ஸ்பெக்டராக வரும் பெப்சி விஜயன் விரைப்பாகவே இருக்கிறார். சப் இன்ஸ்பெக்டராக வரும் வித்யா பிரதீப், நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார். நாயகிகளைக் காட்டிலும் படம் முழுவதும் அவர் வருகிறார். முன்னணி காமெடியனாக உயர்ந்துவிட்ட யோகிபாபுவை இந்தப் பாத்திரத்தில் ஏன் நடிக்க வைத்தார்கள் என்று தெரியவில்லை.
அருண் ராஜின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். ஆனால், படத்தின் பின்பாதியில் அவருடைய பின்னணி இசை அருமை.   கோபிநாத்தின் ஒளிப்பதிவு படத்
துக்கு பலம் என்றால்,  குழப்பம் இல்லாமல் தொகுத்ததில் ஸ்ரீகாந்தின் எடிட்டிங் படத்துக்குப் பக்கபலம்.  இரட்டையர் படத்தை புதுமையாகவும் விறுவிறுப்பான த்ரில்லிங்குடன் கலந்து கொடுத்ததில் ‘தடம்’ அழுத்தமாகப் பதிவாகியிருக்கிறது.
மொத்தத்தில், தமிழ் திரில்லர் பட வரிசையில் ஒரு மைல்கல்லாக நிற்கிறது தடம்!
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 03-03-2019, 09:23 AM



Users browsing this thread: 12 Guest(s)