02-03-2019, 06:25 PM
மிரண்டு போனாள் ஆதிரா.. பயத்தில் பதறித்துடித்த இருதயத்துடன்.. 'ஆ'வென்று கத்துவதற்கு அவள் வாயெடுக்கும்போதே.. டிவி திரை படாரென அணைந்துபோய் ஒற்றைப் புள்ளியாக மறைந்தது..!! அதே நொடி..
"தட்ட்.. ட்ட்டடட்ட்டட்ட்ட... டமார்.. தட்ட்.. தட்.. தட்..!!!!!" என்று பக்கத்து அறைக்குள் இருந்து பலத்த சப்தம்.
மிரட்சி அப்பிய விழிகளுடனே ஆதிரா பக்கத்து அறையை திரும்பி பார்த்தாள்.. பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த வனக்கொடியும் பதறிப்போய் வெளியே ஓடிவந்தாள்..!!
"எ..என்னம்மா சத்தம்..??"
"எ..என்னன்னு தெரியலையே..!!"
ஆதிராவும் வனக்கொடியும் குழப்பமும் திகைப்புமாய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.. பிறகு, சப்தம் வந்த அறையை நோக்கி மெல்ல நகர்ந்தார்கள்.. முன்பு ஆதிராவும் தாமிராவும் தங்கிக்கொள்கிற அறைதான் அது..!! அறைக்கதவை தள்ளி இருவரும் உள்ளே நுழைந்தார்கள்.. அறைக்குள் சில பொருட்கள் ஆங்காங்கே கலைந்து கிடந்தன.. பீங்கான் கோப்பை தரையில் உருண்டிருந்தது.. மேஜை விளக்கு தலைகுப்புற கிடந்தது.. கம்ப்யூட்டர் மவுஸ் அந்தரத்தில் ஊசலாடிக்கொண்டிருந்தது..!!
இவர்கள் உள்ளே நுழைந்ததுமே.. திறந்திருந்த ஜன்னல் கம்பிகளின் வழியாக அணில் ஒன்று வெளியே ஓடுவது தெரிந்தது..!!
"ச்சே.. இந்த அணிலு பண்ற அட்டகாசம் தாங்க முடியல.. எப்பப்பாரு.. வீட்டுக்குள்ள பூந்து எதையாவது உருட்ட வேண்டியது.. எல்லாத்தையும் வெஷத்தை வச்சு கொல்லப்போறேன் ஒருநாளு..!! ஹ்ம்ம்.. இந்த ஜன்னலை யாரு இப்படி தெறந்து வச்சான்னு தெரியலையே.. மூடித்தான கெடந்துச்சு..??"
சலிப்பாக சொல்லிக்கொண்டே வனக்கொடி ஜன்னலை நோக்கி நகர்ந்தாள்.. ஜன்னல் கதவுகளை இழுத்து தாழ் போட்டாள்..!! அதேநேரம் ஆதிராவின் பார்வை எதேச்சையாக வேறெங்கோ சென்றது.. தரையில் விரிந்து கிடந்த ஒரு புத்தகத்தின் மேல் சென்று படிந்தது..!! அறையை ஒட்டி நின்றிருக்கும் மரஅலமாரியில் அடுக்கிவைக்கப்பட்ட புத்தகங்களில் இருந்து.. ஒன்று மட்டும் கீழே நழுவி விழுந்திருந்தது..!! அந்த புத்தகத்தின்மீது 'சத்.. சத்.. சத்..' என சப்தம் எழுகிற மாதிரி.. சிவப்பு நிறத்தில் ஏதோ திரவம் மேலிருந்து துளித்துளியாய் சொட்டிக்கொண்டிருந்தது..!!
தாமிராவுக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் உண்டு..!! அதற்கென அவள் உபயோகிக்கிற பலவகை வண்ண மைகள்.. கண்ணாடி சீசாக்களில் அடைக்கப்பட்டு.. அலமாரியின் மேலே வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும்..!! அந்த சீசாக்களில் ஒன்றுதான் இப்போது மேலேயே கவிழ்ந்து.. சிவப்பு மையை மட்டும் சொட்டு சொட்டாய் கீழே சிந்திக் கொண்டிருந்தது..!!
ஆதிரா பார்வையை கூர்மையாக்கி அந்த புத்தகத்தின் மீது வீசினாள்..!! பிரபல எழுத்தாளர் ஒருவரால் எழுதப்பட்ட நாவல் அது.. அதன் அட்டையில்.. கருப்புநிற பின்னணியில் சிவப்புநிற எழுத்துக்களாக கதையின் தலைப்பு மின்னியது..!!