நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#16
ஒருத்தன் தன்னைக் காயப்படுத்தியதற்காக தான் மற்றவர்களை கஷ்டப்படுத்த வேண்டுமா?

தன்னை ஒருவாறாக தேற்றிக்கொண்டவள் முகத்தை துடைத்துக்கொண்டு எழுந்தாள்.
“டேய் சாப்பாட்டு ராமா. உண்மையைச் சொல்லு. மத்தவங்க எனக்காக காத்திருக்காங்கன்னு கூப்பிட வந்தியா? இல்லை உனக்கு பசி தாங்கலையா? நான் வரலைன்னா உனக்கு அத்தை சாப்பாடு கிடையாதுன்னு சொன்னாங்களா?
அவளது கேலிக்குரலைக் கேட்டதும்தான் அவன் இலகுவானான்.

அவன் முகத்தில் தெளிவைக் கண்டதும் அவள் மனம் நிம்மதியுற்றது.

அதற்காகதான் அவள் அப்படி பேசியதே.

எழுந்து குளியல் அறைக்குள் சென்று முகத்தை கழுவிக்கொண்டு வந்தாள்.

வந்தவள் முகத்தில் எந்த ஒப்பனையும் போடாமல் பொட்டை மட்டும் வைத்துக்கொண்டு “வா போகலாம்” என்றாள்.

இருவரும் அவளது அறையை விட்டு வெளியில் வந்தனர்.

யுகேந்திரன் தனது தோழியைப் பெருமையுடன் பார்த்தான்.

அவர்கள் இருவரின் நட்பைப் பார்த்து பொறாமைப்படும் மாணவர்கள் ஏராளம்.

பெண்களே பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு அவள் மிக அழகாய் இருந்தாள். ஆனால் அதை நினைத்து என்றுமே அவள் கர்வப்பட்டதில்லை,

இப்போதும் வெறும் பொட்டிட்டு நிற்கும்போதும் தேவதையாய் தெரியும் அவளைக் கண் கொட்டாமல் பார்த்தான்.

அவளுக்கே ஒரு மாதிரி இருந்தது.

“ஏய் என்னடா அப்படி பார்க்கிறே?”

“சைட் அடிக்கலாமா என்றுதான்.”

அவன் சொல்ல அவள் அவனது முதுகில் மொத்தினாள்.

“ஏய். எனக்கு வலிக்கலையே. வலிக்கலையே.”

என்று பழிப்பு காட்டினான்.

இருவரும் சிரித்துக் கொண்டே படியிறங்கினர்.

இது எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த மகேந்திரனின் முகம் கடுத்தது.

எங்கே தான் சொன்னவற்றை நினைத்து அவள் வருந்திக்கொண்டு இருக்கிறாளோ என்று கொஞ்சம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தான்.

அது தவறு என்று இப்போது அவர்கள் கூத்தடித்துக்கொண்டு வரும் விதத்தைப் பார்த்தாலே தெரிகிறதே?

அவள் நல்லவளாக இருந்திருந்தால் உரைத்திருக்கும். தான் சொன்னதற்கு இந்நேரம் அவள் மூட்டை கட்டிக் கிளம்பியிருக்க வேண்டும்.

அவள் பணத்திற்கு அடிபோட்டு வந்தவள்தானே? அவள் எல்லாவற்றையும் தூசி தட்டுவது போல் தட்டிவிட்டு இதோ வந்துவிட்டாளே.

“வாம்மா.”

பெரியவர்கள் இருவரும் அவளை அழைத்தனர்.

“என்னாச்சு கிருஷ்ணா? இத்தனை நேரம் என்ன பண்ணே?”

வனிதாமணி கேட்டார்.

அவள் என்ன சொல்வது என்று திகைத்தாள். அழுதுகொண்டு இருந்தேன் என்றா சொல்ல முடியும்?

அவளைத் திட்டியவனுக்கு கொண்டாட்டமாக இருக்குமே. அத்துடன் பெரியவர்கள் இருவரும் மனம் வருந்துவார்கள்.

“அம்மா. என்னம்மா நீங்கள். ஒரு பொண்ணா இருந்துக்கிட்டே இந்தக் கேள்வியைக் கேட்கறீங்களே?”

யுகேந்திரன் தோழியின் சங்கடத்தைப் போக்க இடையில் புகுந்தான். அவன் எதையாவது சொல்லி சமாளித்துவிடுவான் என்ற நம்பிக்கையில் அவனது முகத்தையேப் பார்த்தாள் கிருஷ்ணவேணி.

மகேந்திரனும் என்ன கூத்து நடக்கப்போகிறது என்றுதான் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“அப்படி என்னடா பொல்லாத கேள்வியைக் கேட்டுட்டேன்?”

செல்லக் கோபத்துடன் சின்ன மகனிடம் கேட்டார்.

“ஒரு பொண்ணுன்னா ஒரு இடத்திற்கு கிளம்புவதற்கு எத்தனை நேரம் எடுத்துக்கொள்வாள்? அவள் மேக்கப் போட்டுக்கொண்டு வரவேண்டாமா?”

வனிதாமணி அவனது காதைப் பிடித்து திருகினார்.

“அது என்னடா? மேக்கப்னா பொண்ணுங்க மட்டும்தானா? நீங்க எல்லாம் செய்யவே மாட்டீங்களா?”



“அம்மா. நீ மட்டும் இதற்கு விதிவிலக்கும்மா. நான் உன்னை சொல்லலைம்மா. எனக்கு ஏற்கனவே சிறுகுடலை பெருங்குடல் தின்ற மாதிரி பசிக்குது. இப்ப சாப்பிட விடும்மா.”
கெஞ்சலாகக் கேட்டான்.

Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 28-02-2019, 01:15 PM



Users browsing this thread: 23 Guest(s)