28-02-2019, 12:23 PM
கொஞ்சத்தூரம் போனவன் திரும்பிவந்து பின்னால் இருந்தவனிடம் எதோ சிங்களத்தில் பேசியபோது தான் அவளுக்கு திக் என்றிருந்தது. இவன் எதோ பிளான் பண்ணித்தான் என்னை இதில எத்தியிருக்கிறான். உஷாராகி பின்னாலிருந்தவனை உற்றுப் பார்த்தாள். அதற்கிடையில் அவளது மனஓட்டத்தைக் கணித்தவன் போல்,
"பயப்படாதீங்கம்மா. அவர் ஆர்மி தான், அனுராதபுரம் போறாராம். நீங்கள் தனியாப் போறிங்கள் எண்டு கொஞ்சம் பார்த்துக்கொள்ளச் சொன்னன்". நம்பிக்கையில்லாமல் அந்தப் புதியவனை மேலும் கீழுமாகப் பார்த்தாள். அவளை விட ஓரிரு வயசு கூட இருக்கலாம், ஆனால் பார்க்க சின்னப் பெடியனாக இருந்தது. பரவாயில்லை ஏதாவது பிரச்சனை எண்டாலும் சமாளிக்கலாம் என்று தோன்றியது.
"ஓயா, சிங்கள தன்னத்த?" (உங்களுக்கு சிங்களம் தெரியாதா?)
இல்லையென்று தலையாட்டினாள். அவன் புன்னகைத்துவிட்டு போர்டேருக்கு எதோ சொல்லவும் train வெளிக்கிடவும் சரியாக இருந்தது.
அதுவரை அடக்கிவைத்திருந்த உணர்வுகள் அத்தனையும் பீறிட்டுக் கிளம்பியது. அவளது தேவைகள் பூர்த்தியாகியிருந்தனவோ இல்லையோ ஆசைகள், கனவுகள் அத்தனையுமே சுக்குநூறாகி சிதைந்துவிட்டிருந்தன. அவனைப் பழிவாங்குவதாய் நினைத்துக்கொண்டு எவ்வளவு முட்டாள்தனம் பண்ணிவிட்டோம் என்று புரிந்தது. அழுதாள்.. அழுதாள்.. இரவு முழுவதும் அழுதுகொண்டேயிருந்தாள் சத்தமில்லாமல். எத்தனை மணிக்குத் தூங்கினாள் என்று தெரியாது, யாரோ தட்டுவது போலிருந்ததால் திடுக்கிட்டு எழுந்தாள். அவன்தான்,
"நங்கி, ஓயா.. " சற்று யோசித்துவிட்டு, "சாப்ட.. சாப்ட..?" கையையும் தலையையும் ஆட்டி ஆட்டி அவன் கேட்ட தோரணை பார்க்க சிரிப்பாய் இருந்தது. ஆங்கிலம் தெரியாது போலும்.
"எப்பா.." (வேண்டாம்) என்றுவிட்டு மீண்டும் படுக்கச் சென்றால், சிறிது நேரத்திலே அடுத்தே ஸ்டேஷன் வந்துவிட்டது. வண்டி அங்கு சிறிது நேரம் நிற்கும் என்று அறிவித்தார்கள். பெரும்பாலுமே வண்டி நிற்கும் போதுதான் கள்ளர் ஏறி கத்திமுனையில் களவுஎடுப்பார்கள் என்று கேள்விப்பட்டதால், தூக்கம் போய்விட்டிருந்தது. அவன் வேறை இறங்கி எதுவோ வாங்குவதற்க்காய்ப் போயிருந்தான். அப்போதுதான் சிறிது பயம் தலைதூக்கியது. அம்மா வேற வீட்டிலை அழுதுகொண்டிருப்பா. ஆனாலுமே அவர்களுக்கு இப்படி ஒருபிள்ளை இருந்து தினம்தினம் சாகடிப்பதை விட இல்லாமல் போய்விடுவதே மேல் என்றுதோன்றியது.
வண்டி புறப்படும் வேளையில் அவன் ஓடிவந்து ஏறினான். மூச்சிரைக்க,
"நங்கி, வத்துறு ஒன்னத?" (தங்கச்சி, தண்ணீர் வேண்டுமா?) இவன் விட மாட்டான் போலிருந்தது. மினறேல் வாட்டர் தான் ஆனால் மூடி திறந்திருந்தது. சந்தேகமாய்ப் பார்த்தால், அவள் மனவோட்டத்தை அறிந்து கொண்டவன் போல் சிரித்துவிட்டு, அவள் கண்முன்னே கொஞ்சம் குடித்துவிட்டு நீட்டினான்.
"ஹரித?" (சரியா..?) சிரித்துக்கொண்டே கேட்டபோது அவளால் தட்ட முடியவில்லை. வாங்கினாள்.. ஆனால் குடிக்காமல் பையில் வைத்துவிட்டாள்.
"நங்கி, கொய்த யன்னே?" (தங்கச்சி, எங்க போறீங்க?) வார்த்தைக்கு முன்னூறுதரம் தங்கச்சி போட்டுக்கொண்டிருந்தான். அவன் குரலில் பாசம் இருந்ததா தெரியவில்லை, ஆனால் உண்மை இருந்தது.