27-02-2019, 05:25 PM
பாகம் ஏழு : நண்பன்
"ரிங்..ரிங்.. ரிங்..ரிங்.. ரிங்..ரிங்.." அந்த ரூமில்தான் போன் அடித்துக்கொண்டிருந்தது. அவளோ கேளாததுபோல் யன்னலுக்கு வெளியே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
செத்துவிடலாம் போலிருந்தது. ஆனால் யாருக்கும் பிரச்சினை குடுக்காமல் சாகணும். அதுக்குத்தானே இங்கு வந்திருக்கிறாள். ஆனால் எப்படிச்சாவது எண்டு தான் தெரியவில்லை. தற்கொலை செய்யலாம் எண்டாலும், ஆசைகள் நிறைவேறாமல் செத்தால் ஆவியாய் அங்கயே அலைவார்கள் எண்டு எங்கையோ படிச்சதால அதுக்கும் விருப்பமில்லை. வாழவும் கூடாது ஆனால் தற்கொலையும் செய்யக் கூடாதெண்டால் எப்படி? யாராவது கொலை செய்தால் தான் உண்டு. ஆனால் அதுவும் பிறகு ஆவியாய் வந்து வஞ்சம் தீர்க்கப் புறப்பட்டு விட்டால் என்ன செய்வது? குழப்பமாய் இருந்தது அவளுக்கு.
சுப்பிரமணி, அது அவனது பட்டப் பெயர். அவர்களது டீச்சர் தான் வைத்தது. காரணம் மறந்துவிட்டது. அவனை அவளுக்கு சிறு வயதிலிருந்தே தெரியும். படிப்பில் கெட்டிக்காரன். வாழ்க்கையில் எப்படியாவது முன்னேறி பலர் போற்றும் ஒரு பெரிய புள்ளியாய் வந்துவிட வேண்டும் என்ற வெறி அவனிடம் சிறுவயதிலிருந்தே இருந்தது. ஆண்கள் என்றாலே கதைப்பதற்கு தயங்கும் இவளுக்கு அந்தநேரத்தில் ஒரு ஆண் நண்பன் என்று இருந்திருந்தால் அது இவனாகத்தான் இருந்திருக்கும். அவளது வாழ்க்கையின் பல முக்கிய கட்டங்களில் இவனது பிரசன்னமும் இருந்திருக்கிறது. ஆனால் இந்த முறைதான் அவளது வாழ்க்கையே புரட்டிப் போட்ட சில முக்கிய காரணிகளில் ஒருவனாய் வந்தான்.
"இன்று முதியோர் இல்லத்துக்குப் போகிறேன், உனக்கு விருப்பமெண்டால் கூட வரலாம்." என்று அவன் சொன்ன போது, வீட்டில் சும்மாய் இருந்து மூளையைக் குழப்பிக்கொண்டிருக்காமல் கொஞ்சம் போய்ட்டுதான் வருவமே என்று தோன்றியது. அவளது அப்பா பல தொண்டு நிறுவனங்களில் வேலை செய்ததாலேயோ என்னமோ, சின்ன வயதிலிருந்தே அவளுக்கு தொண்டு செய்வதில் ஆர்வமிருந்தது.
அவன் வரச்சொன்ன இடத்தை பஸ் அடைந்ததும், வெளியே பார்த்தாள். அவன் பஸ் நிறுத்துமிடத்தில் நின்றுகொண்டிருந்தான். வழமையாய் அவன் கூடவே ஒட்டிக்கொண்டிருக்கும் அந்த பைக்கை காணவில்லை. அவனது கண்ணியத்தை எண்ணி மனதுக்குள் மகிழ்ந்து கொண்டாள்.
"என்ன இடம் பக்கத்திலையா?"
"இல்லை, கொஞ்சத்தூரம் தான். நடந்தே போய்டலாம்" சரியென்று கூடவே நடக்கத் தொடங்கினாள். சிறுவயதில் ஒரு fantasyயாய்த் தொடங்கி இப்ப ஒரு சில நாட்களாய்த்தான் மனம்விட்டு பகிரக்கூடிய ஒரு நெருங்கிய நண்பனாய் ஆகிவிட்டிருந்தான்.
"அதிசயமாய் பைக்கை விட்டிட்டு வந்திருக்கிறீங்க?"
"சர்வீஸ்க்கு விட்டிருக்கு. இன்னும் வரேல்லை."
"ஒ.. மற்றவங்களை எத்திட்டுப்போனா உங்கடை லவர் ஏதாச்சும் சொல்லுவாங்கள் எண்டுதான் விட்டிடு வந்தீங்களோ எண்டு நினைச்சன்."
"யார் லிசவா.. She is very broadminded"
அவளுக்குப் புரியவில்லை, ஆனால் தலையை மட்டும் ஆட்டிவைத்தாள்.