நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#8
“வாடாம்மா சாப்பிடலாம்.”

மூவரும் சாப்பிட ஆரம்பித்தனர். சிறியவர்கள் இருவரின் கலகலப்பில் நேரம் போனதே தெரியவில்லை வனிதாமணிக்கு.
ரவிச்சந்திரன் தன்னுடைய காரில் ஏறிக்கிளம்ப மகேந்திரனின் காரில் ஏறி முன்சீட்டில் ஏறி அமர்ந்தாள் சாருலதா.
மகேந்திரன் அமைதியாக வந்தான். என்றுமே அவன் கலகலப்பாகப் பேசியதில்லை. அவன் மட்டும் யுகேந்திரன் போல் கொஞ்சம் ஜாலியானவனாக இருந்திருந்தால் எனக்கு இந்த அளவு கஷ்டம் இல்லையே.

ஏக்கப் பெருமூச்சு விட்டாள்.

ஆனால் யுகேந்திரன் ஜாலியான பேர்வழியாக இருந்தும் அவர்களுக்கு என்ன பிரயோஜனம்?

தனது தாயிடம் பிரியமானவனாக இருந்து தொலைத்ததால் அவரிடம் போய் சொல்லிவிட்டானே. அதன் பிறகுதான் அவளால் முன்போல் இங்கே வந்து செல்ல முடியல்லை. ஆராயும் நோக்கோடு தான் அவளைப் பார்க்கிறார் வனிதாமணி.

அப்படி என்ன செய்துவிட்டாள். முறைப்பையன் என்று பேசியதை தன் தாயிடம் போட்டுக்கொடுத்துவிட்டான்.

மகேந்திரனின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்க்க முயற்சி செய்தாள். ஆனால் அவன் வேறு ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தான்.

அப்படியே திரும்பிவிட்டாலும் என்ன செய்துவிடப்போகிறான்.

தன்னுடைய வேலையைப் பற்றி மட்டும்தான் பேசுவான்.

நானும் வேற வழியில்லாமல் அதைப்பற்றியேதான் பேச வேண்டியிருக்கிறது.

என்னைக்குதான் எனக்கு விடிவுகாலம் பிறக்கப்போகிறதோ?

சாப்பிட்டு முடித்த பின்னர் தன் பின்னேயே வந்த கிருஷ்ணவேணியை அன்றுதான் வீட்டுக்கு வந்திருப்பதால் ஓய்வு எடுக்கச் சொன்னார் வனிதாமணி.

“இல்லே அத்தே. இத்தனை நாட்களும் விடுதியில் ஓய்வாகத்தானே இருந்தேன். நீங்க நகருங்க. இன்னிக்கு நாங்க சமைக்கிறோம்.”

“உனக்கு சமைக்க தெரியுமா?”

அவர் ஆச்சர்யத்தோடு கேட்டார்.

“அம்மா. இப்பதானே நாங்க சமைக்கப்போறோம்னு சொன்னா. எல்லாம் என்னோட நளபாகத்தை நம்பிதான் அவள் பேசியது. நாம சமைச்சோம்னா நல்லா வக்கனையா சாப்பிடுவா.”

“பாருங்க அத்தே.”

செல்லமாய் சிணுங்கினாள்.

“பிள்ளையை ஏன்டா கிண்டல் செய்யறே?”

அவளுக்காக அவனை திட்டினார் வனிதாமணி.
“இந்த அம்மாவுக்கு நான் கூடவே இருந்தும் என்ன பிரயோஜனம்? எப்பவுமே நான் கண்ணுக்குத் தெரிய மாட்டேன். எப்பவும் மூத்த மகனுக்கு வக்காலத்து வாங்கி பேசும். இன்னிக்கு உனக்கு. என்னிக்குமே என்னைக் கண்டுக்கிட்டதில்லை.”

டேய் அம்மா உங்க ரெண்டு பேரையும் என்னிக்குமே பிரித்துப்பார்த்ததில்லை.”


“அம்மா. உன் மனசாட்சியை தொட்டு சொல்லு. நீ உன் பெரிய மகனைப் பற்றி பெரிதா நினைக்கலை. என் கூடவே இருந்தாலும் நீ அவனைப் பத்திதானே கவலைப்படுவே.”

“அப்படி ஏன் நினைக்கிறே? அவன் தன்னைப் பத்தி யோசிக்காம அடுத்தவங்களைப் பத்தி யோசிக்கிறான். அவன் என்னிக்காவது உனக்கு ஒரு அண்ணனா நடந்திருக்கிறானா? அப்பாவுக்கு அடுத்த ஸ்தானத்தில்தானே அவன் உன்னைக் கவனிச்சிக்கிறான்.”

“அதுதான்மா எனக்குப் பிடிக்கலை. அவன் என்ன என்னைவிட ஒரு ஐந்தாறு வயது மூத்தவனா இருப்பானா? ஒரு அண்ணனா தோழனா இருந்திருந்தா எப்படியிருந்திருக்கும்? எப்பப்பாரு என்னவோ வயசானவன் மாதிரியே நடந்துக்கிறது? பெரிய ரிஷிகுமாரன் மாதிரி நடந்துக்கிறான்.”

“போடா அரட்டை. என் பையன் பொறுப்பை எடுத்துக்கிட்டதுனால்தான் உங்கப்பா இந்த வயதில் கொஞ்சம் நிம்மதியா இருக்கார்.”

“பார்த்தியா கிருஷ். கொஞ்ச நேரத்தில் என் பையன்னு அம்மா அவனைத்தானே சொன்னாங்க. அப்புறம் முதல்ல என்கிட்டே சண்டைக்கு வந்தாங்க.”

“டேய் யுகா. போதும் அத்தைக்கிட்டே எதுக்கு தேவை இல்லாம வம்பு செஞ்சுக்கிட்டிருக்கே?”

“போச்சுடா. நீயும் அவங்க பக்கம் சேர்ந்துட்டியா? என் பக்கம் கொஞ்சம் பலமாக்கனும்னு உன்னை அழைச்சுட்டு வந்தேன். நீயும் கட்சி மாறிட்டியா?”

அவன் தனதறைக்குச் சென்றான்.

“அத்தை. நீங்க ஒன்னும் தப்பா நினைக்காதீங்க. அவனுக்கு அவனோட அண்ணன் தன்னோட இயல்பா பழகலைன்னு ஒரு வருத்தம் இருந்துட்டேயிருக்கு. அதான் வேணுமின்னே வம்பிழுக்கிறான்.”

“எனக்கும் தெரியும்மா.”



“இப்பக்கூட தன் அண்ணனை நினைச்சுதான் உன்னை அழைச்சுட்டு வந்திருக்கான்.”
“சொன்னான் அத்தே.”
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 25-02-2019, 06:56 PM



Users browsing this thread: 4 Guest(s)