25-02-2019, 11:50 AM
ஆதிரா கேஷுவலாக சொல்ல, வனக்கொடியின் முகம் பட்டென ஒரு இருட்டுக்கு போனது.. உடனடியாக எந்த பதிலும் சொல்லாமல் ஒருவித தடுமாற்றத்தில் உழன்றாள்..!!
"என்னம்மா.. ஒன்னும் சொல்ல மாட்டேன்றிங்க..?? வர்றீங்களா..??" ஆதிரா திரும்ப கேட்கவும்,
"ம்ம்.. வ..வர்றேன்மா..!!" திணறலாக சொன்னாள் வனக்கொடி. இப்போது ஆதிரா சிபியிடம் திரும்பி,
"இப்போ.. ஈவினிங் உங்களுக்கு நான் ஒரு வேலை வச்சிருக்கேன்..!!" என்றாள்.
"எ..என்ன..??" அவ்வளவு நேரம் அமைதியாக சாப்பிட்டுக்கொண்டிருந்த சிபி குழப்பமாக கேட்டான்.
"என்கூட மாமா வீடு வரைக்கும் வரணும்..!!" ஆதிரா சொல்ல, இப்போது சிபியின் முகம் சட்டென்று இருண்டு போனது.
"நா..நானா..?? நா..நான் வரல ஆதிரா..!!" என்றான் தளர்வான குரலில்.
"ப்ளீஸ்த்தான்.. மாமா உடம்பு சரியில்லாம இருக்காரு.. அகழி வரை வந்துட்டு அவரை பாக்கலைன்னா நல்லாருக்காது.. போய் பாத்துட்டு வரலாம்.. ப்ளீஸ்..!!"
"உன்னை போகவேணாம்னு நான் சொல்லலையே.. நான் வரலைன்னுதான் சொன்னேன்..!! நீ.. நீ மட்டும் போயிட்டு வா ஆதிரா..!!"
"இல்லத்தான்.. கல்யாணத்துக்கப்புறம் மொதமொறையா அங்க போறேன்.. தனியா போறதுக்கு ஒருமாதிரி இருக்கு.. நீங்களும் வந்தா நல்லாருக்கும்.. ப்ளீஸ்த்தான்.. வாங்க..!!"
ஆதிரா கெஞ்ச, சிபிக்கு வேறு வழியிருக்கவில்லை.. ஒருசில வினாடிகள் தயக்கத்துக்கு பிறகு, மனைவியின் விருப்பத்துக்கு இசைந்தான்..!!
"சரி ஆதிரா.. போலாம்.. சாப்பிடு..!!"
மதிய உணவின்பிறகு சிறிதுநேரம் ஓய்வெடுத்துவிட்டே ஆதிராவும் சிபியும் கிளம்பினார்கள்.. மாலை நேரத்தில் மழை சற்று ஓய்ந்திருந்தது..!! அகழியின் ஒருமூலையில் தணிகைநம்பியின் வீடு இருக்கிறதென்றால்.. அதன் இன்னொரு மூலையில் இருக்கிறது ஆதிராவின் மாமா மருதகிரியின் வீடு.. அவளுடைய அம்மா பூவள்ளியின் பிறந்தகம்..!! தணிகைநம்பியோ பூவள்ளியோ அந்த வீட்டுக்கு சென்று பதினைந்து வருடங்கள் ஆகப்போகின்றன..!! ஆதிராவுக்கு பத்து வயது இருக்கையில்.. மருதகிரியின் வீட்டில் நடந்த ஒரு சுபகாரியத்தின்போது.. மரியாதைக் குறைச்சல் என்று தணிகைநம்பி ஆரம்பித்த ஒரு பிரச்சினை.. விரைவிலேயே விரிசல் பெருசாக்கிப் போய் பேச்சு வார்த்தை இல்லாமல் போயிற்று..!! ஆனால்.. ஆதிராவோ தாமிராவோ அந்த வீட்டுக்கு செல்ல எந்த தடையும் எப்போதும் இருந்ததில்லை..!!
ஊருக்கு வெளியே இருக்கிற தடுப்பூசி மருந்து தொழிற்சாலை மருதகிரிக்கு சொந்தமானதுதான்.. அதுமட்டுமில்லாமல் ஊட்டிக்கருகே பெரிய ரப்பர் தோட்டமும் உண்டு..!! முடக்குவாதம் வந்து மருதகிரி இப்போது படுத்த படுக்கையாகிவிட.. முகிலன், நிலவன் என்கிற அவருடைய இரண்டு மகன்கள்தான் அதையெல்லாம் கவனித்துக் கொள்கிறார்கள்..!! மருதகிரியின் வீட்டுக்கு வர சிபி தயங்கியதற்கு காரணம் இருக்கிறது.. சிறுவயதில் இருந்தே சிபிக்கும் மருதகிரியின் மகன்களுக்கும் ஏழாம் பொருத்தம்.. பெற்றோர் இல்லா பிள்ளை, மாமா வீட்டை அண்டிப் பிழைப்பவன் என்று அவர்களுக்கு எப்போதுமே இவனைக்கண்டால் ஒரு இளக்காரம்..!!
மருதகிரியின் வீட்டுக்கு காரில் சென்றடைய பதினைந்து நிமிடங்கள் ஆகின..!! தணிகை நம்பியின் வீட்டைவிட இன்னுமே கம்பீரமான, செல்வசெழிப்பான மாளிகை வீடு.. பிரிட்டிஷ் கட்டிடக்கலையின் நுணுக்கத்துடன் கட்டமைக்கப்பட்ட கல் பங்களா..!! இரண்டாள் உயரத்திற்கு வீட்டை சுற்றிய மதில் சுவர்.. அதனினும் அதிக உயரத்தில் அகலமான, அலங்காரமான மர வாயில்.. அந்த மர வாயிலில் ஆங்காங்கே தொங்கிய சின்னசின்ன பொம்மைகள்.. வெள்ளெருக்கம் வேரில் செய்யப்பட்ட விதவிதமான மாந்திரீக பொம்மைகள்..!!
காரில் வந்தவர்களை அடையாளம் கண்டுகொண்ட காவலாளி கேட்டை திறந்துவிட்டான்.. வீட்டு முகப்புக்கு ஓடிய சாலையில் காரை செலுத்தினான் சிபி..!! தணிகைநம்பியின் வீட்டை போல செடிகொடிகளோ, புல்வெளிகளோ இல்லை.. விஸ்தாரமான வெற்று முற்றம்தான்..!! பச்சை கற்பூரம், கஸ்தூரி மஞ்சள், ஜவ்வாது எல்லாம் அரைத்து கலந்த பொடியை.. நீரில் கலந்து அந்த முற்றம் எங்கும் தெளித்திருக்க.. ஒரு இனிய நறுமணம் அந்த பிரதேசத்தை நிறைத்திருந்தது..!! தீயசக்திகள் எவையும் வீட்டை அணுகக்கூடாது என்பதற்காகத்தான் இதெல்லாம்..!!
ஆதிராவும் சிபியும் வீட்டுக்குள் நுழைகையில்.. உள்ளே நடுஹாலில் நடந்துகொண்டிருந்த கலசபூஜையும் அதற்காகத்தான்..!! செங்கற்களால் அணைகட்டப்பட்ட அடுப்பில் நெருப்பின் ஜூவாலை.. அடுப்பை சுற்றி சந்தனப்பொட்டு வைத்துக்கொண்ட ஐந்து வெண்கல பாத்திரங்கள்.. ஐந்திலும் ஐவகை இலைகள் மிதக்கிற தூய நீர்.. கலசம் என்று அழைக்கப்படுகிற பஞ்ச பாத்திரங்கள்..!! மேலும்.. துளசி, மஞ்சள், எலுமிச்சை, குங்குமம் என்று பூஜைக்கு தேவையான இன்னபிற இத்யாதிகள்..!!
கொசகொசவென முகமெல்லாம் தாடி மீசையுமாய், முதுகில் புரள்கிற நீளக்கூந்தலுமாய் இருந்த ஒரு ஆள்தான் பூஜை செய்துகொண்டிருந்தார்.. ஏதோ ஒரு புரியாத பாஷை மந்திரங்களை சொல்லிக்கொண்டே நெய்யள்ளி தீயில் வார்த்துக் கொண்டிருந்தார்..!! வெள்ளை வேஷ்டியும் வெற்று மார்புமாக அவர் முன்பு அமர்ந்திருந்தனர் முகிலனும், நிலவனும்.. அவர்களுக்கு அருகே அவர்களது தாய் அங்கையற்கண்ணியும், முகிலனின் மனைவி யாழினியும்..!! நிலவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை..!! முகிலனும், நிலவனும் பட்டதாரிகளானாலும் ஆவி, அமானுஷ்யங்களில் அதிக நம்பிக்கையுண்டு.. அதற்கான மாந்திரீக அணுகுமுறையிலும் நிறையவே ஈடுபாடு உண்டு..!!