screw driver ஸ்டோரீஸ்
"என்ன ஆதிரா அப்படி பாக்குற..?? இது உன் வீடு.. உரிமையா உள்ள வா..!!"

இயல்பாக சொன்னவாறே.. சிபி ஆதிராவின் தோள் மீது கைபோட்டு இதமாக அணைத்துக் கொண்டான்..!! அவன் அவ்வாறு அணைத்துக் கொண்டதுமே.. ஆதிரா ஒரு புதுவித கூச்சத்துடன் நெளிந்தாள்.. காணாமல் போன அவளுடைய நினைவுகளில் கணவனின் நெருக்கம் தொடர்பான நினைவுகளுமே அடக்கம்.. அதனாலேயே அவளிடம் அந்த கூச்சம்..!!

அவளது மனநிலையை உடனடியாய் புரிந்து கொண்ட சிபி.. தனது கையை அவளிடம் இருந்து விலக்கிக்கொண்டான்..!!

"பார்த்து வா ஆதிரா..!!" 

என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு முன்னால் நடந்தான்..!! கணவன் நடந்து செல்வதையே ஆதிரா ஒரு காதல் பார்வை பார்த்தாள்.. கழுத்தில் தொங்கிய தாலியை ஒருமுறை பெருமிதமாக பார்த்துக் கொண்டாள்.. கால் தந்த வேதனையை உதடுகடித்து பொறுத்தவாறே வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தாள்..!!

யாருடைய வாழ்விலுமே திருமணம் என்பது ஒரு முக்கியமான நிகழ்வு.. அந்த நிகழ்வே ஆதிராவின் நினைவில் இருந்து தொலைந்து போயிருந்தது..!! அம்னீஷியாவால் பாதிக்கப்பட்டவளிடம் அவளுக்கு திருமணமாகிவிட்ட செய்தியை பூவள்ளி உரைத்தபோது.. அதிர்ந்துதான் போனாள் முதலில்..!! நம்பிக்கை அற்றவளாய் மாங்கல்யத்தையே மலங்க மலங்க பார்த்தாள்..!! ஆனால்.. அது அவளுக்கு ஒருவித இன்ப அதிர்வாகத்தான் இருந்தது.. சிறு வயதில் இருந்தே சிபி மீது அவளுக்கு இருந்த காதல்தான் அதன் காரணம்..!!

"பெரியவளாகி என்ன பண்ணப் போற..??" வீட்டுக்கு வரும் உறவினர்களின் கேள்விக்கு,

"ஐ.ஏ.எஸ் படிச்சு கலக்டர் ஆகப் போறேன்..!!" என்று குட்டி தாமிரா பதில் சொன்னால்,

"அத்தானை கட்டிக்கிட்டு பொண்டாட்டியாகப் போறேன்..!!" என்பாள் எட்டு வயது ஆதிரா.

தாய்தந்தையரை இழந்து தாய்மாமாவின் வீட்டில் தஞ்சம் புகுந்திருந்த சமயத்தில்.. தாரை தாரையாய் கண்ணீர் வடித்துக்கொண்டே இருப்பான் சிறுவன் சிபி..!! அந்நிய உணர்வோடு அனைவரையும் மிரட்சியாக பார்ப்பான்.. ஆறுதலாய் அவனுடைய கண்ணீர் துடைக்க நீளும் ஆதிராவின் கரங்கள்..!!

"அழாதீங்க அத்தான்.. உங்களுக்குத்தான் நாங்கல்லாம் இருக்கோம்ல..??"

அப்போதிருந்தே அவன் மீது ஒரு பரிவு கலந்த பாசம்.. பள்ளியில் அவன் முதல் மாணவனாக திகழ, அவன் மீது ஒரு மதிப்பு..!! தாமிராவை அவர்களுடன் சேர்த்து கொண்டு.. மூவரும் ஒருவர் கையை அடுத்தவர் பற்றி வளையம் அமைத்துக்கொண்டு.. ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து..

"கிறுகிறு மாம்பழம்.. கிய்யா கிய்யா மாம்பழம்..!! கிறுகிறு மாம்பழம்.. கிய்யா கிய்யா மாம்பழம்..!!"

என்று திரும்ப திரும்ப பாடியவாறே கிறுகிறுவென சுழலுவார்கள்..!! தலை சுற்றலை தாக்கு பிடிக்கமுடியாமல் தரையில் சரிந்து.. மல்லிகைச் சிதறலாய் மூவரும் வெள்ளைச் சிரிப்பை சிந்துவார்கள்..!! ஆதிராவுக்கு அப்போது சிபி மீது ஒரு சினேக உணர்வு பிறக்கும்..!! 

அவனது பெண்மைத்தனமான வட்ட முகத்தில்.. அரும்பு மீசை வளர ஆரம்பித்த சமயத்தில்.. அவனிடம் மிளிர்ந்திட்ட அந்த வசீகரம்.. ஆதிராவின் மனதை சொக்கிப்போக வைக்கும்..!! பட்டப் படிப்புக்கென சிபி வெளியூர் பயணிக்கையில்.. அவனுக்கு அருகிலேயே இருந்திட முடியாதா என்பது போல.. இவளுக்குள் ஒரு ஏக்க உணர்வு எழும்..!! பரீட்சை விடுமுறைக்கென அவன் அகழி திரும்பியிருக்கையில்.. அவனுக்கு அருகிருக்க இவளுக்கு வாய்ப்பிருந்தும்.. இயல்பாக நடந்திட முடியாத மாதிரியாய் ஒருவித வெட்க உணர்வு..!!

இப்படி எல்லாவித உணர்வுகளும் அவளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் சேர்ந்து.. அவள் வளர வளர, அந்த உணர்வுகளும் அவளுடனே வளர்ந்து.. அவள் பருவம் எய்திய காலத்தில் ஒரு அசுர உருவம் கொண்டு அவளுக்குள் நின்றது.. அந்த உருவத்திற்கு காதல் என்றே நாம் பெயரிட வேண்டும்..!! சிபியிடம் இதுவரை வெளிப்படையாக சொல்லாவிடிலும்.. சிறுவயதில் இருந்தே அவன் மீதான காதலை அவள் வளர்த்து வந்தது என்னவோ நிஜமான நிஜம்..!! 

அந்த காதலால்தான்.. நினைவில் இல்லையென்றாலும், அவனுடனான திருமணத்தை அவளால் இனியதொரு அதிர்வாக எடுத்துக் கொள்ள முடிந்தது..!! அதே காதலால்தான்.. மருத்துவமனையில் இருந்து திரும்பிய அன்றைய இரவில்.. இருவரும் ஒருபடுக்கையை பகிர்ந்துகொள்ள நேர்ந்த சமயத்தில்.. தயக்கத்துடன் அவன் முதலில் இவளது கை பற்றிக் கொள்ள.. தானாகவே இவள் பிறகு அவனது மார்பில் தலை சாய்த்துக் கொண்டாள்..!!

ஆனால்.. தனக்கு திருமணம் நடந்த விஷயத்தை போல.. தங்கையின் விஷயத்தை அவ்வளவு எளிதாக ஆதிராவால் எடுத்துக்கொள்ள முடியவில்லை..!! காலில் தைத்த முள், நடக்க நடக்க இன்னும் ஆழமாக உள்ளிறங்குமே.. அதேமாதிரி.. அந்த விஷயம் நாளாக நாளாக அவளுடைய புத்தியில் ஆழமாக ஆணி திருகிக் கொண்டிருந்தது..!!

"தா..தாமிராக்கு என்னம்மா ஆச்சு.. சொல்லும்மா..!!" தவிப்புடன் தாயிடம் கேட்டாள் ஆதிரா.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சமயத்தில்..!!

"எ..என்னாச்சுன்னு தெரியலடா.. காணாம போயிட்டா..!! எங்க போனான்னே தெரியாம.. மாயமா மறைஞ்சு போயிட்டா..!!"

"என்னம்மா சொல்ற நீ..?? எ..எப்படி.. எப்படி திடீர்னு காணாம போவா..??"

ஆதிராவின் கேள்விக்கு பூவள்ளியால் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை.. ஆதங்கத்துடன் இவளையே ஒரு பார்வை பார்த்தாள்.. அப்படியே கண்களை சுருக்கி நெற்றியை பிசைந்தாள்.. உள்ளத்தில் எழுந்த துக்கத்தை உதடுகள் கடித்து அடக்க முயன்றாள்.. அதையும் மீறி அவளுடைய கண்களில் கண்ணீர் தளும்பியது..!!

"சொல்லும்மா.. என்ன நடந்துச்சுன்னு சொன்னாத்தான எனக்கும் தெரியும்..??" ஆதிரா பொறுமையில்லாமல் கேட்க,

"குறிஞ்சி அவளை கொண்டு போய்ட்டாடி.. போதுமா..??" பூவள்ளி வெடுக்கென்று சொன்னாள்.

குறிஞ்சி என்ற பெயரை கேட்டதுமே ஆதிராவின் முகத்தில் குப்பென்று ஒரு திகைப்பு.. அம்மாவின் முகத்தையே மிரட்சியான விழிகளுடன் பார்த்தாள்.. குரல் தெளிவில்லாமல் குழறலாக கேட்டாள்..!!
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 24-02-2019, 11:24 AM



Users browsing this thread: 3 Guest(s)