screw driver ஸ்டோரீஸ்
அத்தியாயம் 1

ஆண்டு: கி.பி 1896
இடம்: மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்திருக்கிற அகழி என்கிற மலை கிராமம்.

மழைமேகம் திரண்டிருக்க.. மாலை வானம் இருண்டிருந்தது..!! சுற்றிலும் அடர்த்தியாய் வளர்ந்திருந்த காட்டுமரங்கள்.. சூரியனின் வெளிச்சத்தை சுத்தமாய் உறிஞ்சியிருந்தன..!! மேல்வானத்தில் பளிச்சென்று ஒரு மின்னல் கீற்றோடு.. மேற்குமூலையில் திடுமென ஒரு இடி முழக்கம்..!! உறைந்திருந்த மேகங்கள் இப்போது கொஞ்சம் உருக ஆரம்பிக்க.. ஊசிக்கற்றைகளாய் தூறல் துளிகள் மரங்களை ஊடுருவின..!!

அந்த காட்டு மரங்களுக்கு உட்புறமாக.. அகலமாய் உயரமாய் இருந்த அந்த கல்மேடையை சுற்றிலும்.. அகழியின் எழுபத்து சொச்ச குடும்பத்தின் பிரதிநிதிகள் குழுமியிருந்தனர்..!! அதில் எழுபது சதவீதம் பேருக்கு மேல்சட்டை இல்லை.. பாதிப்பேர் பவ்மயமாக கைகளை கட்டியிருந்தனர்..!! பக்கவாட்டில் மூலைக்கொரு தூண்களுடனும்.. பாறையை செதுக்கி அமைத்த கூரையுடனும்.. காட்சியளித்தது அந்த கல்மேடை..!! நான்கு தூண்களில் ஒன்றில் சன்னதக்காரர் சாய்ந்திருந்தார்.. சாமியாடி முடித்த களைப்பில் கண்கள் செருகியிருந்தார்..!!

கல்மேடையின் மையத்தில், கைத்தடியை ஊன்றியவாறு புவனகிரி நின்றிருந்தார்.. அவருக்கு பின்புறமாக வேல்க்கம்பு ஏந்திய நான்கு அடியாட்கள்..!! அவருடைய பார்வை ஏதோ ஒரு சூனியத்தை வெறித்துக் கொண்டிருந்தது.. சிவந்து போயிருந்த அந்த கண்களில் ஒருவித அனல்கக்கும் வன்மம்..!! வெல்வட் துணியாலான இறுக்கமான உடை அணிந்திருந்தார்.. தடிமனாக கழுத்தில் தொங்கிய தங்கச்சங்கிலியில், நீலநிறக்கல் பதிக்கப்பட்ட பதக்கம் தகதகத்தது..!! இரண்டு விரல்களை மட்டும் மூளியாக்கி, எட்டு விரல்களுக்கு முரட்டு மோதிரங்கள்.. வலது கையில் ஒரு தங்க காப்பு.. கால்களுக்கு முனை நிமிர்ந்த தோல்செருப்பு..!!

அப்போதுதான் நீளமாக பேசி முடித்திருந்தார் புவனகிரி..!! நெஞ்சில் எரிந்து கொண்டிருந்த ஆத்திரத்தை ஜீரணிக்க.. சிறிது அவகாசம் தேவையென அமைதியாகிப் போயிருந்தார்..!! அவருடைய முகத்தையே பயமும், பக்தியுமாய் பார்த்துக் கொண்டிருந்த கூட்டம்.. அடுத்து அவர் சிந்தப்போகிற வார்த்தைகளுக்காக.. இப்போதே காது தீட்டி கவனமாய் காத்திருந்தது..!!

'டமார்' என்ற சப்தத்துடன் இப்போது மீண்டும் ஒரு இடியோசை..!! அதைத்தொடர்ந்து.. வாள் கொண்டு வானத்தை கிழித்துவிட்டது போல.. 'ச்ச்சோ'வென்று மழை மேலிருந்து கொட்ட ஆரம்பித்தது..!! நனைய ஆரம்பித்த மனிதகூட்டம்.. இம்மியளவும் நகர முனையவில்லை..!!

கி.பி 1896..!! இந்திய நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டுக் கிடந்த காலகட்டம் அது..!! ஒட்டுமொத்த பிரிட்டிஷ் இந்தியாவில்.. இருபத்தியொரு நிலப்பரப்புகள் மட்டுமே.. தனித்த அரசு எந்திரமும், நிர்வாக சுதந்திரமும் பெற்றிருந்தன..!! ஆங்கிலேயரின் நேரடி ஆதிக்கத்துக்கு உட்படாமல்.. அவர்களுடைய மறைமுக ஆட்சி என்கிற மாயப்போர்வையின் கீழ்.. இற்றுப்போன இறுமாப்புடன் இயங்கிக் கொண்டிருந்தன..!! சமஸ்தானங்கள் என்று அழைக்கப்பட்டன அத்தகைய நிலப்பரப்புகள்..!! அந்த இருபத்தியொரு சமஸ்தானங்களில்.. மிகப்பெரியதும், மிகமுக்கியமானதுமான ஒன்றுதான்.. மைசூர் சமஸ்தானம்..!!

நிலவரியை மக்களிடம் நேரடியாக வசூல் செய்த மைசூர் அரசு.. அதில் ஒருபகுதியை ஆங்கிலேய அரசுக்கு கப்பமாக கட்டிவிடும்..!! மைசூர் அரசால் பிற்காலத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட சில தமிழர் வாழ்கிற பாளையங்கள்.. நிலவரி செலுத்தாமல் முரண்டுபிடிக்கவே.. விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வரிவசூல் செய்கிற முறை அறிமுகப் படுத்தப்பட்டிருந்தது..!! அவ்வாறு வரி வசூல் செய்வதற்கென்றே.. பகுதிவாரியாக பல குழுக்கள் அமைக்கப்பட்டு.. அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிற அதிகாரிகள் அதற்கென நியமிக்கப் பட்டிருந்தனர்..!!

1876 முதல் 1878 வரை.. பெரிய அளவில் நிலவிய பஞ்சத்தினாலும்.. பசி பட்டினியாலும்.. பரவிய காலராவினாலும்.. ஐம்பது லட்சத்திற்கும் அதிகமான உயிர்கள்.. கொத்துக்கொத்தாய் செத்து மடிந்தன..!! மைசூர் சமஸ்தானம் மிகப்பெரிய பொருளாதார சீர்குலைவை சந்தித்தது..!! அந்த சீர்குலைவில் இருந்து அரசு கொஞ்சம் கொஞ்சமாய் மீண்டு கொண்டிருந்த சமயம்.. 1894-ல்.. மைசூர் மஹாராஜா ஐந்தாம் சாமராஜேந்திர உடையாரின் அகால மரணம்..!! அப்போது அவருடைய மகன் கிருஷ்ணராஜ உடையாருக்கு பத்தே வயது..!! மகன் வளர்ந்து வாலிபம் பெறும் வரைக்குமாக.. மஹாராணியே வேறுவழியன்றி அரியணையில் அமர நேர்ந்தது..!!

நாட்டில் நிலவிய பொருளாதார சீர்குலைவு ஒருபுறம்.. ஆட்சிப் பொறுப்பில் ஏற்பட்ட திடீர் குழப்பம் மறுபுறம்..!! வரி வசூல் செய்ய நியமிக்கப்பட்ட அதிகாரிகள்.. அப்பாவி மக்களிடம் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்திருந்தனர்.. சிற்சிறு கிராமங்களை தங்களுடைய முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்..!! அகழியும் அதுமாதிரியான ஒரு கிராமம்தான்.. அதனை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த அதிகாரிதான்.. இந்த புவனகிரி..!!
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 20-02-2019, 12:43 PM



Users browsing this thread: 1 Guest(s)