Romance "அவள்" ஒரு தொடர் கதை ... :
#7
உங்களோட கொஞ்சம் கதைக்க வேண்டும்" யாரைப் பார்த்துக் கேட்கிறான். திரும்பி தோழியைப் பார்த்தாள். தனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல் வேகமாய்த் தலையை ஆட்டினாள்.

"இந்த நேரத்திலையா? இருட்டிடுத்து வீட்டை கெதியாப் போகவேணும். அம்மா தேடுவா." பெண்களுக்கேயுரிய எச்சரிக்கை உணர்வு கை கொடுத்தது. வேகமாய் சைக்கிளைத் திருப்பி மிதிக்கத் தொடங்கினால் அவன் கூடவே வந்தான். கண்ணுக்கெட்டின தூரம்வரைக்கும் யாரையுமே காணவில்லை. பயம் கவ்விக்கொண்டது. சமாளித்துக்கொண்டு,


"இப்படிப் பின்னாலேயே வந்தீங்கண்டா நாளைக்கு ப்ரின்சிபல்ட சொல்லிடுவன்." முடிந்தவரை வேகமாய் சைக்கிளை மிதித்தபடி. 

"நான் சொல்றத தயவுசெய்து ஒருநிமிஷம் நிண்டு கேளுங்கோ". அவனின் தொடர் கெஞ்சல்கள் இன்னும் பீதியைக் கிளப்பியது. தோழியின் முகத்தைப் பார்த்தாள். எந்த சஞ்சலமுமில்லாமல் வந்துகொண்டிருந்தாள்.


இவளுக்கு ஏற்கனவே தெரியுமோ? இருக்காது, என்கூடத்தானே வந்து போகிறாள், பிறகு எப்படி? நாளைக்குப் போய் முதல் வேலையாய் ப்ரின்சிபல்ட சொல்லிடனும். அவா நல்லவா. சிஸ்டர் தானே, நிச்சயம் எனக்கு சப்போர்ட் பண்ணுவா. ஆனால் பாவம், அவரும் அவனுக்குத்தான் வக்காலத்து வங்கப் போகிறார் என்று அவளுக்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை. ஒருவேளை அவர்கள் எல்லோரும் சொல்லியதுபோல அவன் நல்லவனாகவே இருந்திருக்கலாம். இருந்திருக்கலாம் என்ன, இருந்தான்.. ஆனால் அவள்? 


"இங்க பாருங்க உங்க கூடக் கதைக்க எனக்கு ஒண்டுமில்லை. எதெண்டாலும் நாளைக்கு பள்ளிக்கூடத்தில கதையுங்கோ." சொல்லிவிட்டுப் பார்த்தால் ஒருவாறு மடு எல்லையை அண்மித்திருந்தனர். அங்கு ஒரு வாகனத் தடை இருக்கும் சைக்கிளைத் தூக்கித்தான் ஏத்த வேண்டும். பதட்டத்தில் அவளால் இன்று ஒழுங்காய் ஏத்த முடியவில்லை. 


"தாங்க, நான் எத்தி விடுறன்." மோட்டார்சைக்கிளை ஓரமாய் நிறுத்திவிட்டு வெகு அருகாமையில் வந்துவிட்டிருந்தான். 

எங்கிருந்து அந்த திடீர் பலம் வந்ததோ 'பளார்' என்று அறைந்து விட்டு  இரண்டு கையாலையும் அப்பிடியே சைக்கிளை அலாக்காய்த் தூக்கி மறுபுறம் வைத்து ஓட்டம் எடுத்தபோது,

"ஐ லவ் யு" அவனின் குரல் உடைந்துபோய் காற்றில் கரைந்து தேய்ந்து போனது. அவள் கைகளைப் பார்த்தாள். சிவந்துபோய் இருந்தது.


சே.. இனி இவ்வளவு தூரமும் இந்த இருட்டில திரும்பி நடக்கணுமே என்று நினைத்த போது அசதியாய் இருந்தது. இதில் வேறை, தோழி ஒருத்திக்கு கால் முடியாமல் போய் எல்லோரும் கைத்தாங்கலாய் கூட்டிக்கொண்டு வந்தனர். இவ்வளவு சிரமப்பட்டு இப்படி ஒரு பயணம் தேவையா எண்டு தனக்குத் தானே முனுமுனுத்துக்கொண்டிருந்தபோது, ரகசியமாய் ஒருவிரல் வந்து அவள் விரல்களை மெதுவாய்

 வருடிச் சென்றது. திடுக்கிட்டு  திரும்பிப் பார்த்தாள். அவளைவிட உயரமாய் இரண்டு உருவம் அருகில் வந்து கொண்டிருந்தது. அந்தக் கும்மிருட்டிலும் ஒருவனை அவளால் ஓரளவு தெளிவாய் கண்டுபிடிக்க முடிந்தது. ஆனால் அவனா? இதுதான் அவளது கேள்வி. இதுக்குப் போய் இந்த ரஞ்சன் காதல் கத்தரிக்காய் எண்டு..


"நீயே சொல்லு.. நான் போய் அவனிட்டை, நீ அவளின்டை கையைத் தொட்டியா எண்டு கேட்டால் என்ன நினைப்பான்?" ரஞ்சனது கேள்வியிலையும் நியாயம் இருந்தது. அதைவிட அந்தக் கும்மிருட்டில் அவனை அறியாமல்கூடத் தொட்டிருக்கலாம். ஆனால் அப்பிடி என்றால் ஒரு ' sorry '  சொல்லியிருப்பானே. 


"உன்னால முடியாதெண்டா சொல்லு. நானே கேட்டிடுறன்". ஏற்கனவே ஆண்கள் மீதிருந்த வெறுப்பு இப்போது ஈகோவாக மாறி சினத்தின் உச்சியிலிருந்தாள்.

சிலகணம்  தயங்கிவிட்டு, "எதுக்கும் நல்லா யோசி" என்றுவிட்டுப் போய்விட்டான்.
Like Reply


Messages In This Thread
RE: "அவள்" ஒரு தொடர் கதை ... : - by johnypowas - 09-02-2019, 08:46 PM



Users browsing this thread: 3 Guest(s)