08-02-2019, 11:26 AM
அதன் பின் கொள்ளுப்பேரனை இடுப்பில் வைத்துக்கொண்டு தன் பேரனின் கையைப்பிடித்துக்கொண்டு உள்ளே கிடந்த மர பெஞ்சில் அமர வைத்தார், பிறகு சத்யனையும் அவன் மகனையும் நிதானமாக அளவிட்டார்,
அவருடைய அனுபவம் சத்யனின் முகத்தில் எதை கண்டதோ “ ம்ஹும் வந்துட்டியா சத்தி, உன் அம்மா சாவுறதுக்கு மொத நாளு சொல்லிட்டுத்தான் மறுநாள் உசுர விட்டா, ஏ மவன் என்னிக்காச்சும் இங்கே வந்துருவான் அதுவரைக்கும் நீ உசுரோட இருந்து இந்த நிலத்தையும் வீட்டையும் அவன்கிட்ட ஓப்படைக்கனும்னு சொன்னா, அதேபோல் வந்துட்ட, இனி நீ எங்கயும் போகவேண்டாம் இங்கனயே இரு ஓனக்கும் ஓன் மவனுக்கும் நா சம்பாதிச்சு சோறு போடுறேன்டா சத்தி ” என்று பாட்டிக் கூறி முடிக்கும்முன் சத்யன் “ பாட்டி” என்று அலறி அவர் காலில் விழுந்தான்
அடுத்து அங்கே ஒரு உணர்ச்சிக் காவியமே அரங்கேறியது, சத்யன் நடந்தவற்றை பட்டும்படாமலும் சொல்ல அதிர்ச்சியில் வாய் பிளந்தபடி பாட்டிக் கேட்டுக்கொண்டிருந்தார், இன்னும் சத்யன் முழுவதையும் சொல்லியிருந்தால் அதிர்ச்சியில் உயிரைக்கூட விட்டிருப்பார் பாட்டி,
“ அவக்கெடக்க கழுத மூலி, நீ போய் குளிச்சிட்டு வா சத்தி சாப்புட்டு நல்லா ஒறங்கு பிரயாண கலைப்பு போகும்” என்று கூறிவிட்டு பாட்டி சமையல்கட்டுக்கு போய்விட
சத்யனும் மனுவும் வெந்நீரில் குளித்துவிட்டு வந்தனர் , சத்யன் தனது பழைய உடைகளை எடுத்துப் போட்டுக்கொண்டான், மாலை டவுனுக்கு போய் மகனுக்கு சில உடைகள் வாங்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு மனுவுக்கு தனது பழைய சிறிய டீசர்ட் ஒன்றை எடுத்து மாட்டிவிட்டான்
பிறகு பாட்டி செய்து வைத்திருந்த கேப்பை களியில் புளிக்குழம்பை ஊற்றி வயிறார சாப்பிட்டுவிட்டு கூடத்திலேயே படுத்துவிட்டான், மனுவை பாட்டி தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சுவதை பார்த்து ரசித்தபடியே உறங்கிப்போனான்
மாலையில் தான் சத்யன் எழுந்தான், மனு அவன் நெஞ்சில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தான் மகனின் தூக்கத்தை கலைக்காமல் தூக்கி கீழே படுக்க வைத்துவிட்டு பாட்டியைத் தேடிப்போனான்
பாட்டி தோட்டத்தில் காயவைத்த ஆலம் இலைகளை கோணிப்பையில் அள்ளிக்கொண்டு இருந்தார், சத்யனும் அவருடன் இலைகளை அள்ள உதவியபடி
“ பாட்டி இனிமே நான் இங்கதான் இருக்கப்போறேன், ஏதாவது வேலை தேடனும் அதுவரைக்கும் நம்ம நிலத்தில் உன்கூட சேர்ந்து பாடுபடப்போறேன், நீ என்னப் பாட்டி சொல்ற?” என்று கேட்டான்
இலை மூட்டையை சத்யன் தூக்கி வர அதை வாங்கித் திண்ணையில் வைத்துவிட்டு “ ராசு நான் எங்கனவே வெவசாயம் பார்க்குறவ, வர்றப்ப நீ வயக்காட்டை நீ பாக்கலையாவே? எனக்கும் வயசாகி நாடி தளர்ந்து போச்சு, அதனால நிலத்த செங்கல் சூளை போடுறவனுக்கு குத்தகைக்கு விட்டுருக்கேன், வருஷத்துக்கு பத்தாயிரம் தர்றான், மூனு வருஷமா சூளை போடுறான், இப்போ கேரளாவில் செங்கல்லுக்கு ஏக கிராக்கி அதனால பக்கத்து ரெண்டு ஏக்கரையும் வாங்கி நிறைய கல்லு சூளைப் போட்டு லோடு ஏத்துறான், நல்ல லாபம் இருக்கு, இந்த வருஷத்துல இருந்து தான் இன்னும் ரெண்டாயிரம் சேர்த்து கேட்கனும், அதோட உனக்கு எங்கலே வெவசாயத்தைப் பத்தி தெரியும், அந்த மாதிரி நாங்க உன்னைய வளக்கலையே” என்று பாட்டி அவனுக்கு நீண்டதொரு விளக்கமான பதிலைச் சொல்ல ..
சத்யன் மவுனமாக அமர்ந்திருந்தான் , பாட்டி சொல்வது உண்மைதான் சத்யனுக்கு விவசாயம் பற்றிய அரிச்சுவடிக்கூட தெரியாது , அடுத்து என்ன என்ற குழப்பத்துடன் பாட்டியைப் பார்த்தான் சத்யன்