08-02-2019, 11:25 AM
அந்த பெண் மனுவை வாங்கி சோறூட்டி தண்ணீர் கொடுத்து வாயை தொடைத்து தன் மடியில் போட்டு தட்டிக்கொடுக்க, மனு சுகமாக உறங்கிப்போனான், சத்யன் முழங்காலை மடித்து அதில் முகத்தை வைத்துக்கொண்டு உறங்க முயன்றான், மனம் இருந்த நிலையில் கண்கள் மூடினாலும் உறக்கம் வரவில்லை
கண்மூடியிருந்தவனை அந்தப்பெண் தோளில் தட்டி “ தம்பி இவங்க திருச்சியில் இறங்குறாங்க, நீங்க உட்கார்ந்துக்ககங்க” என்று சொல்ல, சத்யன் கண்விழித்து எழுந்து காலியான சீட்டில் அமர்ந்துகொண்டான்
“ எங்க இறங்கனும் தம்பி” என்று அநதப் பெண் கேட்டாள்
“ மதுரையில் இறங்கனும், அங்கிருந்து செங்கோட்டை பஸ் ஏறி கடையநல்லூர் போகனும்” என்றான் சத்யன்
மனுவை ஜாக்கிரதையாக அந்தப்பெண் அணைத்து தூங்கவைக்க
அதைப்பார்த்ததும் சத்யனுக்கு விட்ட இடத்தில் இருந்து மறுபடியும் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது,
ரயில் மதுரையை நெருங்கியதும் சத்யன் இறங்கவேண்டும் என்று கூறி மகனை வாங்கிக்கொண்டான், மனுவின் மீது போர்த்தியிருந்த சால்வையை உருவி எடுத்து அந்த பெண்ணிடம் கொடுக்க,
அந்த பெண் வாங்க மறுத்தாள் “ இல்ல தம்பி பயங்கரமா குளிருது, குழந்தை குளிர் தாங்காது, சால்வையை நீங்க எடுத்துட்டுப் போங்க, இன்னும் ரொம்ப தூரம் வேற பிரயாணம் பண்ணனும், என் தம்பி புள்ளையா இருந்தா குடுக்கமாட்டேனா, குழந்தையோட அத்தை குடுத்ததா நெனைச்சு கிட்டு எடுத்துட்டுப் போங்க ” என்று அந்த பெண் பிடிவாதமாக கூறி வாங்க மறுத்தாள்
சத்யன் நன்றியுடன் அந்தப் பெண்ணை கும்பிட்டுவிட்டு அங்கிருந்து நகர, அந்தப் பெண் கூடவே எழுந்து வந்து ரயில் நின்று அவன் இறங்கும் வரை நின்றிருந்து வழியனுப்பினாள்,
ரயிலைவிட்டு இறங்கி “ தைரியமா இருங்க தம்பி” என்று கண்கலங்க சத்யனிடம் கூறிவிட்டு குழந்தையை வாங்கி அன்போடு முத்தமிட்டு பிறகு சத்யனிடம் கொடுத்துவிட்டு ரயிலில் ஏறிக்கொண்டாள்
சத்யன் அந்த பெண்ணின் அன்பில் மனம் கொஞ்சம் சமாதானம் ஆக, மனுவை அங்கிருந்த பெஞ்சில் உட்கார வைத்துவிட்டு, பக்கத்தில் இருந்த குழாயில் தண்ணீர் பிடித்து முகத்தை கழுவி முகத்தை கைலியில் துடைத்துக்கொண்டு வந்து மகனை தூக்கிக்கொண்டான்
ரயில்நிலையத்தில் இருந்து வெளியே வந்து ஒரு ஆட்டோவில் ஏறி மாட்டுத்தாவணி பேருந்துநிலையம் வந்து செங்கோட்டை செல்லும் பஸ்ஸில் ஏறியமர்நதான், குழந்தை விழித்து அவன் கழுத்தை கட்டிக்கொண்டது, சிறிதுநேரம் சத்யனின் தோளில் சுகமாய் சாய்ந்திருந்த மனு பிறகு தலையைத் திருப்பி “ நாம ஊருக்கு போறமா டாடி” என்றான்
மகனின் தாடையைப் பிடித்து கொஞ்சிய சத்யன் “ டாடின்னு கூப்பிடக்கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல, அப்பான்னு கூப்பிடனும், நாம நம்ம பாட்டியப் பாக்க ஊருக்குப் போறோம்” என்று சத்யன் சொன்னதும் தலையசைத்து விட்டு மறுபடியும் சத்யன் தோளில்ப் படுத்துக்கொண்டான் மனுநீதி
பஸ் ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்றபோது ஒரு கப் பாலும் பிஸ்கட்ம் வாங்கி மகனுக்கு ஊட்டினான், சத்யனுக்கு எதுவும் சாப்பிடப் பிடிக்காமல் சீட்டில் சாய்ந்துகொண்டான், இரவெல்லாம் விழித்தது கண்களை அசத்த சிறிதுநேரம் தூங்கியிருப்பான், மனு அவன் தோளைத் தொட்டு அசக்கி எழுப்பினான்
அவசரமாய் கண்விழித்த சத்யனுக்கு மனு ஜன்னல் வழியாக கைநீட்டி மேற்குத்தொடர்ச்சி மலைகளின் அழகை காட்டினான், அந்த அதிகாலைப்பொழுதில் மலைராணி தன் மெல்லிய முந்தானையால் தலையில் முக்காடிட்டது போல் இருந்தது , மலைகளும் அதன்மேல் படர்ந்திருந்த மேகக்கூட்டமும், வெகு ரம்யமான காட்சியாக இருந்தது, சத்யன் கல்லூரியில் படிக்கும் காலத்தில் பஸ் பயணத்தின் போது அந்த மலைத்தொடரில் இருந்து பார்வையை எடுக்கமாட்டான்
காற்றாலை மின்சாரத்திற்கான ஃபேன்கள் மெதுவாக சுற்ற, மனு அதைப்பார்த்து கைத்தட்டினான், சத்யனுக்கு தான் பழைய வாழ்க்கைக்கு திரும்பிவிட்டது போல மனதில் உணர்ந்தான், இயற்கையின் அழகு அவன் மனதை இலகுவாக்கியிருந்தது
காலை ஏழு நாற்பதுக்கு பஸ் கடையநல்லூரை சென்றடைந்தது, சத்யன் தன் மகனுடன் பஸ்ஸிலிருந்து இறங்கினான், அவன் மனதில் புதிதா ஒரு குழப்பம் தன்னை இந்த நிலையில் பார்க்கும் ஊர் மக்களின் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது என்று குழப்பத்தோடு தனது வயல் நோக்கி செல்லும் மண்சாலையில் மகனுடன் நடந்தான்
சைக்கிள், டிவிஎஸ் 50, மாட்டுவண்டி, என ஏகப்பட்ட வாகணங்கள் அவனை கடந்து சென்றாலும் யாருக்கும் அவனை அடையாளம் தெரியவில்லை, அப்பாடா யாருடைய கேள்விக்கும் பதில் சொல்லாமல் வீட்டுக்கு போய்விடலாம் என்ற எண்ணத்தோடு வேகமாக நடந்தான்
சாலையின் இருமருங்கிலும் இருந்த செங்காட்டு பூமி நடவுக்கு தயாராக இருந்தது, தூரத்தில் பாட்டியின் ஓட்டுவீடு தெரிய, சத்யன் நடையில் வேகத்தை கூட்டினான், வீட்டை அடைந்ததும் மனுவை கீழே இறக்கிவிட்டு கையில் பிடித்துக்கொண்டு திறந்திருந்த கதவை மேலும் திறந்துகொண்டு உள்ளே போனான்
பாட்டி கூடத்தில் அமர்ந்து பதப்படுத்தப்பட்ட ஆலமரத்து இலையை ஒன்றோடொன்று இணைத்து சாப்பிடும் அளவுக்கு (தைஇலை) பெரிய இலையாக ஈர்க்கு வைத்து தைத்து அடுக்கி அது மடங்காமல் இருக்க ஒரு பெரிய வட்டக் கல்லை அதன்மேல் படிய வைத்துக்கொண்டு இருந்தார்
யாரோ உள்ளே நுழைந்த அரவம் கேட்டு தனது மூக்குக்கண்ணாடியை தூக்கிப்பிடித்துக் கொண்டு “ யாரு வந்துருக்கது” என்றபடி சத்யனையும் அவன் மகனையும் உற்றுப் பார்த்தார், சத்யன் எதுவுமே பேசவில்லை, ஆனால் ஆயிரம் வார்த்தைகளை சொல்வதுபோல் உதடுகள் துடிக்க இவ்வளவு நேரம் அடக்கிவைத்த கண்ணீர் மடை திறந்தது
முதலில் பாட்டிக்கு நிதானம் வரவில்லை, பிறகு கையை தரையில் ஊன்றி எழுந்து தன்னால் முடிந்தவரைக்கும் வேகமாக நடந்து அவர்களை நெருங்கி சத்யனின் கன்னத்தை சுருங்கிப்போன தன் கைகளால் வருடி, கையை உயர்த்தி சத்யனின் கலைந்துபோன தலைமுடியை கோதினார் உணர்ச்சி வேகத்தில் அவருக்கும் பேச்சு வரவில்லை, ஆனால் கண்ணீர் மட்டும் தாராளமாக வந்தது
சத்யன் தான் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு “ எப்படியிருக்கப் பாட்டி”என்றான்
பேரனின் குரல் கேட்டதும் பாட்டிக்கும் உணர்வு வந்தது, “ உன்னைய பாக்கத்தான் உசுர கையிலப் புடிச்சுக்கிட்டு இருக்கேன் ராசா” என்றார்
அடுத்து என்னப் பேசுவது என்று புரியவில்லை சத்யனுக்கு மகனைத் தூக்கி பாட்டியிடம் கொடுத்து “ இவன் உன் கொள்ளுப்பேரன் பாட்டி” என்று அவர் கையில் கொடுத்தான்
ஒரு சுருக்கமான புன்னைகையோடு மனுவை வாங்கியப் பாட்டி அவனை ஆசைத்தீர கொஞ்சினார், அவர் இதுவரை சத்யனின் மகனை பார்த்ததேயில்லை என்பதால் அவர் பாசம் அளவிடமுடியாத அளவுக்கு இருந்தது