08-02-2019, 11:20 AM
என் மனைவியாக மான்சி
தோட்டத்தில் பனிமூடிய ரோஜாக்கள் இளங்காலைப் பொழுதில் உடல் சிலிர்த்து தங்கள் மீது இருந்த பனித்துளிகளை புல்தரையில் தெளித்ததுக் கொண்டிருக்க,, பொழுது விடிந்துவிட்டதற்கான அறிகுறியாக பலவண்ணப் பறவைகளின் ஒலி ஜன்னல் வழியாக கேட்க,, அதிகாலைச் சூரியனின் செங்கதிர் ஒன்று ஒரே நேர்கோடாக ஜன்னல் வழியாக வந்து கட்டிலில் படுத்திருந்த சத்யனின் முகத்தில் சுள்ளென்று விழுந்தது,
ஆனாலும் கண்விழிக்க மனமின்றி பக்கத்தில் கிடந்த மகனை அணைத்துக்கொண்டு படுத்திருந்தான், அவன் மனமும் உடலும் விழித்துவிட்டது, ஆனால் கண்களைத் திறக்க முடியவில்லை, இரவு வெகுநேரம் விழித்திருந்தது எரிச்சலாக இருந்தது, கண்ணைமூடிக்கொண்டு பக்கத்தில் இருந்த மகனை தடவிப்பார்த்தான், மகனின் முகத்தை விரல் தொட்டதும் அந்த முகத்தில் சிரமமாக விழித்தான்,
இது சத்யனுக்கு வழக்கமான ஒன்று, அவன் மகன் மனுநீதி பிறந்து மூன்றாவது மாதம் முதலே சத்யனுடன் இருப்பதால், சத்யனின் விடியல் மனுவின் முகத்தில் தான் இருக்கும், இது இந்த மூன்று வருடங்களாக பழகிவிட்ட ஒன்று, மகனுக்காக இந்த மூன்றுவருடமாக சத்யன் எந்த வெளிநாடுகளோ, வெளியூரோ, அதிகமாக போனதில்லை,, அவன் உலகமே அவன் மகன் மனுநீதி தான்
சத்யன் பிறப்பிலேயே யாருமற்றவன் என்று சொல்லமுடியாது, தனது பனிரெண்டாவது வயதுவரை அப்பா அம்மா தாத்தா பாட்டி என்று ஒரு அன்யோன்யமான குடும்பத்தில் தான் இருந்தான், அப்பாவுக்கு ஆர்மியில ஆயுதக் கிடங்கில் காப்பாளராக வேலை, கிடங்கில் தவறுதலாக வெடித்த குண்டு ஒன்று அவருடைய உயிரை குடித்துவிட, முற்றிலும் உருவம் கலைந்துபோன பார்சலாக சொந்தஊர் வந்தார் சத்யனின் அப்பா,
சத்யனின் தாத்தா பூர்வீகமாக இருந்த ஒன்றையணா சொத்துக்கு கௌரவத்திற்காக லட்சக்கணக்கான ரூபாயைசெலவு செய்து பங்காளிகள் தகராறில் ஒளித்து விட்டாலும், சத்யன் அப்பாவுக்கு அரசாங்கம் தானமாக கொடுத்த இரண்டு ஏக்கர் நிலத்தில் சிறியதாக ஒரு ஓட்டுவீட்டைக் கட்டிக்கொண்டு பேரனுடன் வாழ்ந்தவர், பூர்வீக சொத்துக்காக போட்ட வழக்கு தோற்றுவிட்டதாக தீர்பானதும் நொந்து படுத்தவர் மறுபடியும் எழவேயில்லை, எடுத்துத்தான் சென்றனர்,
குடும்பமே சிதறிவிட்டது முன்னோர்கள் செய்த பாவம் என்று ஊர் பேசினாலும், வைராக்கியத்துடன் சத்யனின் தாயும் பாட்டியும் அவனை வளர்த்து ஆளாக்கினார், அந்த இரண்டு ஏக்கர் நிலத்தில் தாங்களே அதிகமாக உழைத்து சத்யனை படிக்கவைத்து ஒரு ஆண்மகனாக உருவாக்கினார்கள் , சத்யன் எம்பிஏ முடித்ததும் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது,
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூருக்குபக்கத்தில் இருந்த குக்கிராமத்தில் இருந்து அம்மாவையும் பாட்டியையும் பிரிந்து சென்னைக்கு வந்தான் சத்யன், மண்ணில் ஈரமும் நெஞ்சில் வைராக்கியமும் நிறைந்த தென்முனையை விட்டு, இயந்திரங்களை போல் வாழ்ந்தாலும், தங்களின் உணர்ச்சிக்கு வடிகால்களை ஆன்லைனில் தேடும் சென்னை நகரத்து வாழ்க்கை முதலில் சத்யனுக்கு பிடிக்கவில்லை,
ஆனால் வேலை செய்த நிறுவனத்தின் தலைவர்க்கு இவனது நேர்மையும் உழைப்பும் பிடித்துவிட இவன்மேல் தனிக்கவனம் செலுத்தினார், ஒருக்கட்டத்தில் அவரது பிஸினஸ் மூளை கணக்குப்போட்டது, இப்படியொருவன்தான் தனது சொத்துக்களை பாதுகாக்க ஏற்றவன் என்று,, கணக்குப்போட்ட மறுநாளே இவனது உழைப்புக்கு பரிசாக தனது மகளையே தருவதாக சொன்னபோது , சத்யன் ஒரே தலையசைவில் மறுத்துவிட்டு அங்கிருந்து வெளியேறி ஊருக்கு வந்துவிட்டான்
அவன் வந்த மறுநாள் தண்ணீர் இல்லாத சிற்றாற்றின் கரையோரம் அமர்ந்து அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தான் சத்யன், அப்போது பக்கத்து வீட்டுப்பையன் ஓடிவந்து “ மாமா உங்க வீட்டுல யாரோ வந்திருக்காங்க, ஆமா பெரியப் பணக்காரங்க போல , பெரிய கார்ல வந்திருக்காக, அதுல ஒரு சினிமா ஆக்டரும வந்திருக்கு, ஆமா மாமூ பொம்பளை ஆக்டரு வந்திருக்கு, ஊருசனம் மொத்தம் உங்கூட்டுல தான் இருக்குறாக , உன்னை கூட்டியாரச் சொல்லி அம்மத்தா சைக்கிள் குடுத்தனுப்புச்சு ” என்று மூச்சு வாங்க வாங்க கையை ஆட்டி, நீட்டி, விரித்து பேசி காரையும் அதில் வந்திருப்போரையும் கண்முன்னே கொண்டு வந்தான்
யாராயிருக்கும்,, ஒருவேளை யாராவது அரசியல்வாதியாக இருக்கும், ஏன்னா அவங்கதான் எலெக்ஷன் டைம்ல செத்துப்போன தியாகிகளின் வீட்டுக்கு வந்து காலில் விழுந்து ஓட்டு கேட்பாங்க, ஆனாலும் சினிமா ஆக்டர் ஏன் கூட வரனும்,, என்ற குழப்பத்துடன் அந்த பையன் எடுத்துவந்த சைக்கிளை இவன் மிதிக்க அந்த பையன் பின்னால் தொற்றிக்கொண்டு வந்தவர்களை பற்றி விட்ட இடத்தில் மறுபடியும் கூற ஆரம்பித்தான்
சத்யன் தனது வீட்டை நெருங்கும் போதே காரை அடையாளம் கண்டுகொண்டான், இது தன் முதலாளியின் கார் என்று புரிந்தது, வீட்டுக்குள் நுழைந்த சத்யனை அவன் அம்மா அவசரமாக பின்கட்டுக்கு தள்ளிக்கொண்டு போனாள்
“ ஏலேய் சத்தி உனக்கென்னலே பைத்தியமா புடிச்சிருக்கு, வழிய வர்ற சீதேவியை வேனாம்னு உதறிட்டு வந்திருக்கவே, இந்த குப்பக் காட்டுல கெடந்து நாங்க படுற கஷ்டம் போதும்லே, நீயாச்சும் நல்லாருக்கனும்னு தா உன்னைய அம்புட்டு படிக்க வச்சு பட்டணத்துக்கு அனுப்புனோம், இப்புடி எல்லாத்தையும் உதறிட்டு வந்துட்டியேலே, இப்பப்பாரு அம்புட்டு பெரிய கோடிஸ்வரன் நம்ம வீடு தேடி வந்திருக்காரு, இதப்பாருலே லட்சுமி நம்ம வீடுதேடி வந்துருக்கு அதை எட்டி உதைக்காத, போய் முகத்தை கழுவிட்டு நல்ல துணியா மாட்டிகிட்டு வா , நா அவுககிட்ட பேசிகிட்டு இருக்கேன்” என்று சொல்லிவிட்டு அம்மா போய்விட சத்யன் திக்பிரமை பிடித்து அப்படியே நின்றான்
இத்தனை வருடமாக உழைத்த உழைப்பு என்னையே அடமானமாக வைக்க துணிகிறதோ என்ற எண்ணம் சத்யனுக்கு வந்தது, ஆனால் தன் தாய் அப்படிப்பட்டவள் அல்ல தன் மகனாவது நல்லாருக்கட்டும் என்ற நல்ல எண்ணமே இப்படி பேச வைக்கிறது என்று தன் மனதை சமாதானம் செய்துகொண்டு முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு உடை மாற்றாமல் அதே உடையில் போய் கூடத்தில் இருந்தவர்களை பார்த்து சம்பிரதாயமாக புன்னகைத்து வணக்கம் சொன்னான்
முதலாளியின் மகள் சொர்ணமித்ராவை இதற்கு முன்பு இரண்டு முறை கம்பெனியில் பார்த்திருக்கிறான், ஆர்வமின்றி தான்,, இப்போதும் அவளை ஆர்வமில்லாமல் தான் பார்த்தான், ஆனால் அவள் இவனையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்