06-02-2019, 09:50 AM
சின்னத்தம்பி யானை, கார்களுக்கு நடுவே சேதம் ஏற்படுத்தாமல் செல்லும் புகைப்படங்கள், சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை வனப்பகுதியில் சுற்றித்திரிந்த சின்னத்தம்பி யானை விளைநிலங்களை சேதப்படுத்துவதாகக் கூறி, கடந்த மாதம் டாப்ஸ்லிப் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால், இடமாற்றம் செய்த சில நாள்களிலேயே, சின்னத்தம்பி தன் வாழ்விடத்தைத் தேடி வெளியில் வந்துவிட்டது. தொடர்ந்து தன்னுடைய வாழ்விடத்தைத் தேடி, சின்னத்தம்பி அலைந்து வருகிறது. இதனிடையே, சின்னத்தம்பியை கும்கியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. ஆனைக்கட்டி பழங்குடிகள், தடாகம் பகுதி இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் இணைந்து சின்னத்தம்பி பாதுகாப்புக் குழு உருவாக்கப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது. மேலும், சின்னத்தம்பி யானையைக் கும்கியாக மாற்றக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, 'சின்னத்தம்பியை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை' என்று தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க, சின்னத்தம்பி தன்னைப் பிடிக்க வந்த கும்கி கலீமுடன் விளையாடிவருகிறான். சின்னத்தம்பியைப் பார்க்க, பல்வேறு இடங்களில் இருந்து மனிதர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். கோவையில் இருப்பதைவிடச் சற்று பயத்துடன் காணப்பட்டாலும், சின்னத்தம்பி அமைதியாக, ஆரவாரமின்றி இருக்கிறான். இந்நிலையில், அங்கு இரண்டு கார்களுக்கு நடுவே எந்த சேதமும் இல்லாமல் சின்னத்தம்பி நடந்து செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
![[Image: IMG-20190205-WA0027_00294.jpg]](https://image.vikatan.com/news/2019/02/06/images/IMG-20190205-WA0027_00294.jpg)
![[Image: IMG-20190205-WA0134_00285.jpg]](https://image.vikatan.com/news/2019/02/06/images/IMG-20190205-WA0134_00285.jpg)