23-01-2019, 09:16 AM
அதன்பிறகுதான் எனக்குக் காடு வளர்க்கும் எண்ணம் தோன்றியது. 1 ஏக்கர் நிலத்தில் முழுக்க முழுக்க மரங்களை மட்டுமே வளர்க்கத் தொடங்கினேன். மா, பலா, நுணா, முள் சீத்தா, சப்போட்டா, கொய்யா, அத்தி, நாவல், கொடுக்காப்புளி, மலைவேம்பு, இலுப்பைன்னு ஏகப்பட்ட மரங்களை வளர்த்தேன். அவை வளர சிரமப்பட்டன. நம்மாழ்வார் கற்றுக் கொடுத்த வித்தைகளை களமிறக்கினேன். அதன்பிறகு, அனைத்து மரங்களும் செழித்து வளர்ந்தன. மரங்களைச் சுற்றிப் பல்வேறு செடிகொடிகளும் வளர்த்தொடங்கின. அவற்றை அப்புறப்படுத்தாமல் காடு போல் மாற்றினேன். `நந்தவனம் காடு'ன்னு இதற்குப் பெயரும் வைத்தேன்.
இயற்கையான காடு போல் இந்த ஓர் ஏக்கர் நிலமும் மாறியதால், இங்கே பல்வேறு சிறுசிறு உயிர்களும் வாழ ஆரம்பித்திருக்கின்றன. கரூர் மாவட்டத்திலேயே அரிதாகிப்போன வகைவகையான பட்டாம்பூச்சிகளும் இந்தக் காட்டைச் சுற்ற ஆரம்பித்திருக்கின்றன. இங்கே நான் வளர்த்திருக்கிற மரங்களில் பழங்களைப் பறிப்பதில்லை. அதனால், நிறைய பறவைகளும் இங்கே தங்க ஆரம்பித்திருக்கின்றன. இந்தப் பக்கமாக நுழைந்து அந்தப் பக்கமாக வந்தால், நிஜமாக எனக்குக் காட்டுக்குள் போய்ட்டு வந்த உணர்வு ஏற்படுது. மனசு சரியில்லன்னா, இந்தக் காட்டுக்குள் காலாற நடந்து வந்தா, உடனே மனசு லேசாயிடும்