22-01-2019, 11:46 AM
தனியாகப் போராடும் குட்டிப் பென்குயின்கள்
இப்போது இந்தக் குட்டிகள் தனியாக ஆபத்துகளை எதிர்நோக்கும் நேரம். பெற்றோரைப் போல் இவையும் கூட்டமாகப் பிணைந்து குளிரிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளத்தொடங்கும். சூரியன் ஓரளவு மேலே வந்துவிட்டபோதும் பனிக்காற்று வீசத்தொடங்கினால் மைனஸ் 20-களில் இருக்கும் வெப்பநிலை. இதுபோன்ற சமயங்களில் சில குட்டிகளுக்கு மட்டுமே பெற்றோர் கூட இருக்கும். பிறந்து சில மாதங்களே ஆன மற்ற பென்குயின்கள் முதல்முதலாக இந்த ஆபத்துகளை எதிர்கொள்ளும். இவ்வளவு கஷ்டங்களுக்குப் பிறகு இறுதியாக கோடைக்காலம் வந்தடையும். இந்தப் பென்குயின்கள் இருக்கும் உறைந்த கடல் பகுதிகள் உருக ஆரம்பிக்கும். இதற்குள் வேகமாக வளர்ந்துவிடும் குட்டிகள் யார் துணையுமின்றி வாழும் நிலையை அடைந்திருக்கும். இந்தக் காலத்தில் பென்குயின்கள் அனைத்தும் பழைய இறக்கைகளை உதிர்த்து புதிய இறக்கையைப் பெறத்தொடங்கும். குட்டிப் பென்குயின்கள் தனது குழந்தை இறக்கைகளை உதிர்த்து புதிய இறக்கையைப் பெறத்தொடங்கும். இது குட்டிகள் பருவமடைந்ததைக் குறிக்கும். பறவைகளிடம் காணப்படும் இந்தக் குணத்தை 'Moulting' என்று அழைப்பர். இறுதியாக இந்த அதிசயப் பறவையின் அழகிய, அபூர்வ சுழற்சி முடிவுக்கு வரும். இந்தச் சுழற்சி முடியும்போது மூன்றில் இரண்டு இளம்பென்குயின்கள் பிரச்னைகளைக் கடந்து உயிர்பிழைத்திருக்கும். அப்படி உயிர்பிழைத்த புதிய பென்குயின்கள் முதல்முறையாக உணவைத் தேடி கடலுக்குச் செல்லும். இதன்மூலம் வெற்றிகரமாக அடுத்த தலைமுறையை உலகில் கொண்டுவந்து சேர்த்திருக்கும் பெற்றோர் பென்குயின்கள்.பருவமடையும் எம்பெரர் பென்குயின்கள்
ஆனால் இப்போது இந்த அற்புதப் பறவைகளின் எதிர்காலம் கேள்விக்குறிக்குள்ளாகியுள்ளது. வருடா வருடம் அன்டார்டிக் கடல் பகுதியின் வெப்பநிலை ஏறிக்கொண்டே வருகிறது. இதனால் இந்தப் பென்குயின்கள் பெரிதும் நம்பியிருக்கும் உறைந்த கடல் பகுதிகள் போதிய காலம் உறைந்திருக்காமல் போகலாம். இதனால் இத்தனை வருடங்கள் நடைபெற்ற இயற்கையின் இந்த அரிய வாழ்க்கை சுழற்சி பாதிப்புக்குள்ளாகும். சுழற்சி முடியும்போது உயிர்பிழைக்கும் எம்பெரர் பென்குயின்களின் எண்ணிக்கை பெருமளவில் குறையலாம். இதை இந்த எம்பெரர் பென்குயின்களின் வாழ்க்கைமுறையை அழகாகப் படம்பிடித்துக் காட்டிய `Dynasties' என்னும் சமீபத்திய பிபிசி எர்த் தொடரில் தெரிவித்தார் பிரபல இயற்கை ஆர்வலர் டேவிட் அட்டன்ப்ரோ. இந்தப் பாதிப்புக்குக் காரணம் மனிதர்களாகிய நாம்தான். நம்மால் மாறும் இந்தக் காலநிலை மாற்றங்களை நாம் ஓரளவு சமாளித்துவிட முடியும் என்பதற்காக இயற்கையும், மற்ற உயிரினங்களும் அவற்றைச் சமாளித்துவிடும் என்று நினைப்பது மிகவும் தவறு.