22-01-2019, 11:46 AM
அன்டார்டிகாவில் சூழ்நிலை எவ்வளவு கொடியதென்றால் ஆசையுடன் திரும்பி வந்த சில தாய் பென்குயின்களின் குட்டிகள் இறந்திருக்கும். ஆனால் அவற்றுள் குழந்தை வளர்க்கும் உணர்வு மட்டும் ஆழமாகப் பதிந்திருக்கும். இதனால் தந்தையிடமிருந்து தாய்க்கு குட்டிப் பென்குயின்கள் மாற்றப்படும் காட்சியைப் பார்த்து அதனால் பொறுமையாக இருக்கமுடியாது. இந்தப் பரிமாற்றத்திற்கு நடுவிலேயே பென்குயின்களை திருட முயற்சிக்கும் இவை. இதனால் இவற்றுள் பெரும் மோதல் உண்டாகும். இதில் ஏற்படும் நெரிசலில் சில குட்டிகள் இறக்கவும் செய்யும். மேலும் சில குட்டிப் பென்குயின்கள் சுமார் மூன்று மாதங்களுக்கும் மேலாகப் போராடிய பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு இன்னொரு பென்குயின் ஜோடியுடன் வளரும். இந்தக் குட்டியைப் பெற்றெடுத்த இரண்டு பென்குயின்களின் காதலுக்கும், கடின உழைப்புக்கும் அர்த்தமில்லாமல் போய்விடும். இப்படிக் கடத்தப்படும் பென்குயின்கள் நன்றாக வளருமா என்றால் அதுவும் இல்லை, இப்படியான தத்துப் பென்குயின்கள் உயிர்பிழைக்கும் வாய்ப்புகள் குறைவுதானாம்.
பிறந்த குட்டிக்குச் சேகரித்து வைத்திருக்கும் உணவைத் தரும் தந்தை
இதுவரை அனைத்தும் சரியாக நடக்கப்பெற்ற பெற்றோர்களில் இப்போது தந்தை கடலுக்குச் சென்று உணவு சேகரித்து வரவேண்டிய நேரம். அதுவும் மாதக்கணக்கில் இருந்த தன் பசியைப் போக்கிக் கொள்ளவேண்டிய நேரம். இந்தக் காலத்தில்தான் சேகரித்து வைத்திருக்கும் உணவைக் கொடுத்து குட்டிகளை வளர்க்கும் தாய் பென்குயின்கள். தாய்-சேய் உறவும் வளரும். ஆனால் இத்துடன் பென்குயின்களின் கஷ்டகாலம் இன்னும் முடியவில்லை. பனிப்புயல்களைத் தாய் பென்குயின்கள் சந்திக்கும் நேரம் இது. இப்போது குட்டிகளையும் பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும். சில நேரங்களில் அடிக்கும் புயலில் பென்குயின்கள் சிறிய பள்ளங்களில் விழுந்துவிடுவதுண்டு. அப்படி நடந்தால் கால்களில் குட்டியுடன் அவை ஏறி மேலே வரவேண்டும். ஏறுவது மிகவும் கடினமென ஆகிவிடும்போது தன்னை தற்காத்துக்கொள்ள சில தாய் பென்குயின்கள் வேறு வழியில்லாமல் தங்கள் குட்டிகளை விட்டுவிட்டு மேலே ஏறிவிடும். சில பென்குயின்கள் சிரமப்பட்டு குட்டிகளுடன் மேலே ஏறும். இப்படிக் குட்டிகள் வளர்ந்துகொண்டிருக்கச் சூரியன் ஒவ்வொரு நாளும் படிப்படியாக மேலே வரத் தொடங்கும். இதனுடன் வெப்பநிலையும் உயரத்தொடங்கும். இந்த வாரங்களில் பலமுறை மாறி மாறி தாயும், தந்தையும் குட்டிப் பென்குயின்களுக்காக உணவு சேகரித்துவரும். குட்டிகள் வளரத்தொடங்கி சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு அதிகரிக்கும் பசியால் தாய், தந்தை என இரண்டுமே உணவு தேடிச் செல்லவேண்டிய நிலை ஏற்படும். ஆனால் இவ்வளவு நாள் பாதுகாப்பில் இருந்த குட்டிப் பென்குயின்கள் அவ்வளவு எளிதில் தாய், தந்தையைவிட்டுப் பிரிந்துவராது. இப்படி அதிகம் அடம்பிடிக்கும் குட்டிகளை கட்டாயப்படுத்தி தங்களிடமிருந்து பிரித்து தள்ளிவிட்டு உணவைத் தேடி இவை செல்லும்.