22-01-2019, 10:00 AM
இனி படமே தயாரிக்காது என கருதப்பட்ட AVM நிறுவனம் மீண்டும் படம் தயாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் இதயம் என்றால் அது AVM நிறுவனம் தான். ஜெமினி, சிவாஜி, அயன், வேட்டைக்காரன் என பல வெற்றி படங்களை கொடுத்து வந்த AVM நிறுவனம், தமிழ் சினிமாவில் உள்ள போட்டியால் படம் தயாரிப்பதை நிறுத்தி விட்டது. ஏ.வி,எம். மின் சக ஸ்டுடியோக்களான ஜெமினி, விஜயா போன்ற ஸ்டுடீயோக்கள் மூடப்பட்ட போதிலும் அரங்கு வாடகை, பாடல் ரெக்கார்டிங் போன்ற பணிகளை செய்து AVM நிறுவனம் தாக்குப்பிடித்து வந்தது.
பின்னர் AVM நிறுவனம் படங்களை இனி தயாரிக்காது என பல தகவல்கள் வெளியானது. ஆனால், அவை அனைத்திற்கும் பதிலடி கொடுக்கும் வகையில் AVM நிறுவனம் தற்போது படம் தயாரிக்க போவதாக அறிவித்துள்ளது. அதுவும் சாதாரண சிறிய நடிகர் இல்லை, தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் சூர்யாவை வைத்து இந்நிறுவனம் படம் தயாரிக்கப்போவதாக முன்னணி பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்க உள்ளார். இப்படத்திற்கு யானை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. AVM நிறுவனத்திற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த ’அயன்’ படத்தின் கதாநாயகனாக நடித்தவர் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.