21-01-2019, 09:30 AM
இத்தனைக்கும் இந்த நிறுவனத்தின் வருவாய், கடந்த 2017-18ம் நிதியாண்டில் 21,650 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டில் ஈட்டிய 15,560 கோடி ரூபாயுடன் ஒப்பிடும்போது சுமார் 40 சதவிகிதம் அதிகமாகும். ஆனாலும், 2017-18ம் நிதியாண்டில் இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக அறிவித்த பல்வேறு சலுகைகள், விலை குறைப்புகள், அதிகமான குடோன்கள் அமைத்தல் மற்றும் இபே (இந்தியப் பிரிவு) உள்ளிட்ட சில சிறிய இ-காமர்ஸ் நிறுவனங்களைக் கையகப்படுத்தியது உள்ளிட்டவற்றுக்காக 23,700 கோடி ரூபாய் அளவுக்குச் செலவிட்டதால், இழப்பையே சந்தித்துள்ளது.
அதே கதைதான் அமேசானுக்கும். வருவாய் அதிகரித்தபோதிலும், நஷ்டம் அதைவிட அதிகம். உதாரணத்துக்கு, அமேசானின் துணை நிறுவனமான க்ளவுடெயில் (Cloudtail) நிறுவனம், 2017-18ம் நிதியாண்டு காலகட்டத்தில் 7,149 கோடி ரூபாய் அளவுக்கு, அதாவது முந்தைய நிதியாண்டைவிட 27 சதவிகித அளவுக்கு அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளபோதிலும், இழப்பு நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகவும், செலவினங்கள் 26 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்திருந்ததைச் சுட்டிக்காட்டலாம்.
ரிலையன்ஸ் வருகையால் போட்டியைச் சமாளிக்க மேலும் விலைக் குறைப்பில் ஈடுபட்டால் தங்களின் எதிர்காலம் என்னவாகும் என்ற கலக்கம் அந்த இரு நிறுவனங்களுக்கும் ஏற்பட்டுள்ளது. அதேசமயம் போட்டி அதிகரிக்கும்போது, அதனால் கிடைக்கும் விலைக் குறைப்பு மற்றும் சலுகைகளால் பயனடையப்போவது வாடிக்கையாளர்கள்தான். அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களால் இந்தியாவில் டிஜிட்டல் காலனியாதிக்கம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ரிலையன்ஸின் வருகையால் விலகியுள்ளது என்றும், கடைசியில் வெற்றி நுகர்வோர்களுக்குத்தான் என்றும் கூறுகிறார் முதலீட்டு நிபுணரும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரியுமான மோகன்தாஸ் பாய்.