21-01-2019, 09:29 AM
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், ஆர்ப்பாட்டமான அறிவிப்புகள் மற்றும் அதிரடி சலுகைகளுடன் செல்போன் சேவைத் துறையில் களமிறங்கியது ரிலையன்ஸ் ஜியோ. மிகக் குறைந்த கட்டணத்தில் அவுட் கோயிங் முற்றிலும் இலவசம், மின்னல் வேக இணையதள இணைப்பு என்ற சேவைகளைப் பார்த்து, அதுவரை பிற செல்போன் நிறுவனங்களின் சேவைகளைப் பயன்படுத்தியவர்களும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு மாற, வேறு வழியில்லாமல் மற்ற செல்போன் நிறுவனங்களும் கட்டணக் குறைப்பில் ஈடுபட்டன. இருப்பினும் இந்தக் கட்டணக் குறைப்பு போட்டியில் தாக்குப்பிடிக்க முடியாமல் ஏர்செல் உள்ளிட்ட சில நிறுவனங்கள் இந்தத் தொழிலிருந்தே வெளியேறின. ஐடியா செல்லுலார் நிறுவனம், வோடஃபோன் இந்தியா நிறுவனத்துடன் இணைய நேரிட்டது. இதன் மூலம், இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமாக வோடஃபோன் ஐடியா உருவெடுத்தது. இதர சிறு நிறுவனங்கள் காணாமலேயே போய்விட்டன.
இ-காமர்ஸ் சந்தையில் நுழையும்போதும் ரிலையன்ஸ் இதே உத்தியைக் கடைப்பிடித்தால், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் நிறுவனங்களும் அதே சலுகைகளையோ அல்லது விலைக்குறைப்பையோ செய்யும் நிலை ஏற்படும். ஏற்கெனவே, வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கும், அவர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் பணத்தை அள்ளி இறைப்பதால், இந்த நிறுவனங்களின் நஷ்டம் அதிகரித்து வருகிறது.
ஏற்கெனவே இருக்கும் கடும் போட்டியின் காரணமாக 2017-18-ம் நிதியாண்டில், ஃப்ளிப்கார்ட் நிறுவனத்துக்கு 2,064 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு முந்தைய நிதியாண்டில் ஏற்பட்ட 244 கோடி ரூபாய் நஷ்டத்துடன் ஒப்பிடுகையில், இது 750 சதவிகிதம் அதிகமாகும்.