கார் ஹாஸ்பிடலை சென்று அடையும் வரை குமார் என்னுடன் எதுவும் பேச முயற்சிக்கவில்ல்லை. நானும் அவனை கண்டுக் கொள்ளவில்லை. மனம் முழுவதும், என் கணவர் எப்படி இருக்கிறார் என்ற பயமும், குமாரும், லாவண்யாவும் சொல்வது எந்த அளவு உண்மை, என்னிடம் எதையாவது மறைக்கிறார்களோ என்ற தேவையில்லாத குழப்பங்கள் என்னை கொல்ல, கொஞ்சம் பதட்டத்துடனே இருந்தேன்.
பத்து நிமிடங்களில் ஹாஸ்பிடலை அடைந்து விட்டோம் என்றாலும், அதுவே ஒரு யுகத்தை கடந்த்து போல இருந்தது எனக்கு. காரை விட்டு இறங்கி நான் வேகமாக ஹாஸ்பிடலுக்குள் ஓட முயன்ற போது, என் கையை பற்றி நிறுத்திய குமார், கொஞ்சம் பொறுமை, நீங்க இவ்ளோ பதட்டமாகிற அளவுக்கு ஒண்ணும் இல்லை. டென்சனில்லாம வாங்க, நான் ரூமுக்கு கூட்டிட்டு போறேன் என்று விட்டு, என் கயை விட்டு விட்டு முன்னால் நடக்க துவங்கினான்.
அந்த சூழ்நிலையிலும், இவன் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி என் கயை வேண்டுமென்றே பிடித்திருப்பானோ என்ற சந்தேகம் எனக்குள் எழ, அவனோ எந்த சஞ்சலமும் இல்லாமல், எனக்கு முன்னால் நடந்து சென்றுக் கொண்டிருந்தான். என் இந்த சந்தேக புத்தி தான் எல்லாவற்றிக்கும் காரணம் என்று என்னை நானே திட்டிக் கொண்டு, நான் வேகமாக குமாரின் பின்னால் வேகமாக நடந்தேன்.
ஹாஸ்பிடலின் முதல் தளத்திற்கு செல்லும் படிக்கட்டுக்களில் குமார் ஏற, நானும் பின்னால் சென்றேன். ஒரு அறைக்கு முன்னால் நின்று குமார் கதவை மெல்ல அதிக ஓசையெழுப்பாமல் திறக்க உள்ளே என் கணவர், படுக்கையில் கண்மூடி படுத்திருந்தார். நான் பதட்டமாகி அவசரமாக உள்ளே நுழைய முயல, மீண்டும் என்னை தொட்டு நிறுத்திய குமார், டேப்லெட்ஸ் குடுத்திருக்காங்க, கொஞ்சம் தூங்கட்டும். டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். கீழே டாக்டர் கிட்டே லாவண்யா வெய்ட் பண்ணிட்டிருப்பா. பார்த்துட்டு வந்திடலாமா என்றான்.
நான் சில நொடிகள் என் கணவரை பார்த்து விட்டு, சரி என்று சொல்ல, இருவரும் மீண்டும் தரைத் தளத்திற்கு வந்தோம். குமார் முன்னால் நடக்க, நான் எந்த சிந்தனைகளும் இல்லாமல், அமைதியாக அவன் பின்னால் சென்றேன். ஒரு அறையின் முன் போடப்பட்டிருந்த பெஞ்சில் லாவண்யா அமர்ந்திருக்க, நாங்கள் வந்ததை கூட கவனிக்காமல், தலையை தொங்க போட்டு கண்மூடி உட்கார்ந்திருந்தவளின் முன் குமார் சென்று அவளை தொட்டு அசைக்க, திடுகிட்டு நிமிர்ந்தவள் என்னை பார்த்து விட்டு எழுந்து ஓடி வந்தாள்.
நான் எதுவும் கேட்கும் முன்பே அவளே, இப்ப தான் டாக்டரை பார்த்து பேசிட்டு வரேன் மேடம். பயப்பட ஒண்ணுமில்லை. ரொம்ப சின்ன ப்ராப்ளம் தான்னு சொன்னாரு. வெளியே கொஞ்சம் மரங்கள் இருக்கே, அங்கே போய் உட்கார்ந்து பேசுவமா என்றாள்.
எதுவுமே சொல்ல தோன்றாமல், சொல்ல முடியாமல் நான் அமைதியாக சரி என்று தலையசைக்க, மூன்று பேரும் ஹாஸ்பிடலின் காம்பவுண்டுக்குள் பூங்கா போல அமைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் சென்று ஆட்கள் இல்லாத பகுதியில் ஒரு மரத்தின் நிழலில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்தோம்.
டாக்டர் இப்ப வேற ஒரு பேசண்ட்டுக்கு ஆபரேஷன் இருக்குன்னு ஈவனிங் உங்களை பார்க்க அப்பாயிண்ட்மெண்ட் குடுத்திருக்கார். இப்போதைக்கு டாக்டர் என் கிட்டே சொன்னதை அப்படியே சொல்றேன் மேடம். உங்க ஹஸ்பண்ட் ஒரே நாள்லே கொஞ்சம் அதிகமா ட்ரிங்க்ஸ் திரும்ப திரும்ப யூஸ் பண்ணிருக்கார். தொடர்ச்சியா ட்ரிங்க்ஸ் சாப்பிட்டுட்டு வெயில்லே பைக்லேயே ஒரு நாள் முழுக்க எங்கெங்கேயோ சுத்தியிருக்கார். பழக்கமில்லாததும், அதிகமா யூஸ் பண்ணினதும் அவருக்கு ஒத்துக்கலை. அவர் மயக்கத்திலே கீழே விழுந்திருந்தாலும் அதனாலே எந்த அடியும் படலை. ஒரு ரெண்டு நாள் ரெஸ்ட்லே இருந்துட்டு டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்ன்னு சொல்லிட்டார். நத்திங் டூ வொரி மேடம் என்றாள் லாவண்யா சுருக்கமாக.
ஏன் இவள் என்னை மேடம் என்று அழைக்கிறாள் என்று புரியா விட்டாலும், அப்போதைக்கு நான் அவளிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை.
மாலை டாக்டரை சந்தித்து பேசிய போது அவரும் லாவண்யா சொன்னதையே சொன்னார். கூடவே குடிக்கிற பழக்கத்தை பொருத்த வரை அதை ஆரம்பிக்காத வரை இருக்கிற மன உறுதி, அதை ஒரு முறை தொட்டுட்டா காணாம போயிடும். ஒரு முறை பயன்படுத்தி பயம் விட்டு போயிட்டா அப்புறம் எப்பெல்லாம் சந்தர்ப்பமோ தேவையோ ஏற்படுதோ அப்பெல்லாம் தயங்காம குடிக்கலாம்ங்கற எண்ணத்தை கொண்டு வந்திரும். அதனாலே கொஞ்ச நாட்களாவது அவரை தனிமைலே விடாம, அவருக்கு குடியோட தேவை ஏற்படாத மாதிரி அவரை கொஞ்சம் பிஸியா வைச்சிக்க முயற்சி பண்ணுங்க என்றார்.
ஒரே நாள்லே நிறைய குடிச்சதாலே அவர் ஜூரண பாதைகள் லேசா பாதிக்கப்பட்டிருக்கு. அதுக்கு மெடிசன்ஸ் குடுத்திருக்கோம். உங்களாலே பார்த்துக்க முடியும்ன்னா இன்னைக்கே அவரை டிஸ்சார்ஜ் பண்ணி அழைச்சிட்டு போகலாம். இன்னும் ஒரு நாள் இருந்துட்டு நாளை அழைச்சுட்டு போறது இன்னும் பெட்டரா இருக்கும் என்று டாக்டர் சொல்ல, அன்று ஹாஸ்பிடலேயே இருப்பது என்று தீர்மானித்தேன்.
என் கணவர் இடையில் கண் விழித்து, என்னிடம் எதையோ சொல்லி அழ முயல புன்னகையோடு அவரை தடுத்து, கண்களாலேயே அவரை அமைதியாக இருக்கும் படியும், நான் பார்த்துக் கொள்கிறேன் என்றும் தைரியமூட்டினேன்.
குமாரும் லாவண்யாவும் என்னிடம் அதிகம் பேசிக் கொள்ளாமலே நிறைய உதவியாக இருந்தனர்.
இரவு இருவரும் என்னிடம் சொல்லி விட்டு வீட்டுக்கு கிளம்ப வந்த போது, லாவண்யா என் கைகளை பற்றிக் கொண்டு, ஸாரி என்றாள். நான் எதற்கு என்றேன். என்னாலே தான் இத்தனை ப்ரசனை என்றாள். உளறாதடி, நீ இதுக்கு எப்படி பொறுப்பாக முடியும் என்று சொல்லிக் கொண்டே நான் குமாரை ஜாடையாக பார்த்து முறைத்தேன்.
லாவண்யா தான் காரை வாசலுக்கு எடுத்து வருவதாக என்னையும் குமாரையும் தனிமையில் விட்டு விட்டு பார்க்கிங் செல்ல, குமார் தலை குனிந்தவனாக, படபடவென்று, ஸாரி... ஸாரி மேடம். ஸாரி ஃபார் எவ்ரி திங்க். ரொம்ப சில்லியா, சீஃப்பா நடந்துக்கிட்டேன். என்னாலே தான் எல்லா ப்ரசனையும். எப்படியோ ஒரு சின்ன இடைஞ்சலோட எல்லாம் நல்லபடியா முடிஞ்சது. இனி என்னாலே உங்க வாழ்க்கைலே எந்த ப்ராப்ளமும் வராது. இனி நான் உங்க கண்ணிலே கூட பட மாட்டேன். நீங்க என்னை நினைச்சு பயப்படவோ, குழம்பவோ வேண்டியதில்லை என்று தரையைப் பார்த்துக் கொண்டு சொல்லி முடிக்க, லாவண்யா காரை எங்கள் அருகில் கொண்டு வந்து நிறுத்தினாள்.
ட்ரைவிங் சீட்டை விட்டு இறங்கிய லாவண்யா குமாரை ட்ரைவ் பண்ண சொல்ல, குமார் ட்ரைவர் இருக்கையில் அமர்ந்ததும், நான் லாவண்யா இருந்த பக்கம் போகாமல், ட்ரைவிங்க் சீட் பக்கமே குனிந்து குமாரை பார்த்து புன்னகைத்து, லாவண்யாவை நல்லபடியா பார்த்துக்கங்க என்று அனைத்துக்கும் பதில் போல சொல்ல, குமாரும் புரிந்துக் கொண்டவனாக, எனக்கு புன்னகையோடு கண்டிப்பா மேடம் என்றான். நான் மேடம் எல்லாம் வேண்டாம், அமுதான்னே கூப்பிடுங்க, சீக்கிரம் ஒரு குழந்தையை பெத்துக்கங்க என்றேன். இருவரும் சிரிக்க, குமாரும் லாவண்யாவும் கையசைத்து விடை பெற்றனர்.