Posts: 12,840
Threads: 146
Likes Received: 1,097 in 962 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
140
இப்போது தமிழகத்தில் நிலவும் குளிருக்கே நம்மில் பலரும் நடுங்கி இரவில் கூடுதல் போர்வைகள் தேடியும், ஃபேன் வேகத்தைக் குறைத்தும் வருகிறோம். ஆனால் வருடத்தின் பாதிக்கும் மேல் கடும் குளிரில் (சில நேரங்களில் -60 டிகிரி செல்சியஸைத் தொடும் வெப்பம்) எப்படி உயிர்பிழைக்கிறதென்று தெரியுமா?
உலகம் சுற்றியும் விலங்குகள் அனைத்திடமும் (நம்மையும் சேர்த்து) இருக்கும் மிக முக்கிய உந்துதல் அடுத்த தலைமுறையை வெற்றிகரமாக இந்த உலகத்திற்குக் கொண்டுவந்து சேர்த்து தன் இனத்தை உயிர்வாழவைப்பதே! இதற்காக ஒவ்வொரு விலங்கும், ஒவ்வொரு விதமான சவால்களை எதிர்கொள்கிறது. அப்படியான ஒரு சர்வைவல் கதைதான் இதுவும்.
அன்டார்டிகாவின் இலையுதிர் காலம் அது, வெயில் காலம் முடிவுற்று குளிர்காலம் நெருங்கும் நேரம். முதலில் சுற்றியிருக்கும் கடல்கள் உறையத்தொடங்கும். இந்தக் காலத்தில்தான் உறைந்திருக்கும் கடல் பகுதிக்கு ஆயிரக்கணக்கில் வருகின்றன இந்த எம்பெரர் பென்குயின்கள். காரணம் இனப்பெருக்கக் காலத்தில் இந்த உறைந்த கடல்தான் இந்தப் பென்குயின்கள் எந்த வித அச்சுறுத்தலும் இல்லாத மிக பாதுகாப்பான இடம். அடுத்த கோடைக்காலம் வர சுமார் 9 மாதங்கள் ஆகும். அதுவரை இந்த உறைந்த கடல் உருகாமல் இருக்கும். அடுத்த தலைமுறையைச் சரியாகப் பெற்று வளர்க்க இந்தப் பென்குயின்களுக்கு இந்த 9 மாதங்களில் ஒவ்வொரு நாளும் மிகவும்முக்கியம். ஆனால், இதை வெற்றிகரமாகச் செய்து முடிக்க உலகின் மிகக் கடுமையான, இரக்கமற்ற குளிர்காலத்தை இவை சமாளித்தாக வேண்டும்.
உறைந்த கடலுக்கு வந்து சேரும் எம்பெரர் பென்குயின்கள்
Posts: 12,840
Threads: 146
Likes Received: 1,097 in 962 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
140
முதல் கட்டமாக இவற்றுக்குள் துணைத் தேடும் பணி ஆரம்பமாகும். இந்த 9 மாதங்கள் முக்கியம்தான் என்றாலும் ஆயிரத்தில் ஒரு நல்ல துணையைத் தேர்ந்தெடுப்பதும் அவற்றுக்கு மிகவும் முக்கியம். இப்படி ஒரு வழியாகச் சரியான துணையைத் தேர்ந்தெடுத்து ஜோடி சேர்ந்தபின் ``உனக்காக நான், எனக்காக நீ" என்னும் நம்பிக்கையைத் தங்களுக்குள் விதைக்கும் வகையில் தலைகளை ஒன்றாக மேலும் கீழும் வளைத்து நடமாடியும், உடல்களை உரசிக்கொண்டும் சடங்கு ஒன்றை நிகழ்த்தும் இவை. நம்மூர் திருமணத்திற்குச் சமம் இது. இதற்குப் பின் நடக்கும் தொனி தொடங்கி அனைத்துச் செயல்களையும் ஒன்றின் நிழல் போல மற்றொன்று செய்யும். இப்படிச் செய்வதால் அவற்றுள் இருக்கும் உறவு பலப்படுமாம். உறவு பலப்படுவது மிகமுக்கியமும் கூட. ஏனென்றால் உலகில் எந்த உயிரினங்களுக்குள்ளும் இல்லாத உறவு வலிமை இந்தப் பென்குயின்களுக்குள் இருப்பது வரும் குளிர்காலத்தைத் தாக்குப்பிடிக்க மிகவும் அத்தியாவசியமான ஒன்று.
ஜோடியாக ஒரே போன்று செயல்களைச் செய்யும் பென்குயின்கள்
எம்பெரர் பென்குயின்களை நாம் நிச்சயம் பார்த்திருப்போம். மிகவும் அழகான உடல்வாகைக் கொண்டிருக்கும் அவை. இந்த உடல்வாகு பல விஷயங்களில் அவற்றுக்குப் பயனுள்ளதாகவே அமைகிறது. ஆனால் உறவுகொள்ளும் விஷயத்தில் மட்டும் அப்படிச் சொல்லமுடியாது. வழுக்கும் பனியில் உறவுகொள்ள மிகவும் கஷ்டப்படும் இந்தப் பென்குயின்கள். ஒன்றின் மேல் ஏறி உறவின் பாதியில் பலமுறை வழுக்கி உருண்டு விழும் இவை. இந்தப் பிரச்னை போதாதென்று துணை கிடைக்காத `சிங்கிள்' பென்குயின்கள் வேறு அங்குச் சுற்றிக்கொண்டிருக்கும். இவை உறவுகொள்ளும் பென்குயின்களைத் தள்ளிவிட்டு சண்டையிட்டுத் துணையைப் பறிக்கப்பார்க்கும். ஆனால் பெரும்பாலான நேரங்களில் ஜோடிகளிற்குள் இருக்கும் பந்தம் சீக்கிரம் வலிமையாக வளர்ந்துவிடுவதால் மூன்றாம் பென்குயின் ஒன்று வந்து இவற்றின் உறவை எளிதில் குலைத்துவிட முடியாது. இப்படிக் கடைசிவரை துணை கிடைக்காமல் விரக்தியடையும் `சிங்கிள்' பென்குயின்கள் 'போங்கடா நீங்களும் உங்க காதலும்' என்னும் நோக்கில் உறையாமல் இருக்கும் கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றுவிடும். அடுத்து வரும் 9 மாதங்களை அவை அங்கேயேதான் கழிக்கும்
Posts: 12,840
Threads: 146
Likes Received: 1,097 in 962 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
140
முட்டை உருவாவதற்கு ஜோடி பென்குயின்கள் சில வாரங்கள் காத்திருக்கும். இதற்கிடையில் அடுத்த இரண்டு மாதங்களுக்குச் சேர்த்து இறுதியாக ஒருமுறை மறையும் சூரியன். இப்படி சூரியன் மறைய முட்டைகளை இடத் தொடங்கும் இந்தப் பென்குயின்கள். இந்தக் காலத்தில் பென்குயின்களின் கால்களுக்கு மேல் ஒரு வீக்கம் தெரியும். அப்படித் தெரிந்தால் முட்டையை அங்கு இருக்கும் சிறப்பு அடைகாக்கும் பையில் அவை அடைகாக்கிறது என்று அர்த்தம். இந்த விஷயத்தில் இவற்றுள் பாலினப் பாகுபாடே கிடையாது. ஆண், பெண் என இருபாலினத்து பென்குயின்களாலும் முட்டைகளை அடைகாக்க முடியும். இதற்கும் ஒரு காரணம் உண்டு, அது என்ன என்பது சற்றுநேரத்தில் உங்களுக்கே புரியும். மற்ற பறவைகளைப் போல் பென்குயின்களுக்கு அடைகாப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. சில விநாடிகளுக்கு மேல் வெளியே இருந்தால் முட்டைகள் உறைந்துவிடும் குளிர் அங்கு நிலவும். இதனால் எப்போதும் கால்களுக்கு மேல் முட்டைகளை வைத்து அடைகாத்துக்கொண்டே சிரமப்பட்டுத்தான் நகரும் இவை. அடைகாப்பது எந்த அளவுக்குக் கடினமானது என்றால் முட்டையிடுவதற்கு முன் சில பென்குயின்கள் ஐஸ் கட்டிகளைக் கால்களுக்கு மேல் வைத்து முன்பே அடைகாத்துப் பயிற்சிகள் மேற்கொள்ளும்.
இந்த முட்டைகளையிடுவதற்கு பெண் பென்குயின்களின் உடலில் இருக்கும் பாதி சக்தி போய்விடும். இதனால் மொத்த எடையில் கால் சதவிகிதத்திற்கும் மேல் இழந்துவிடும் இவை. அதனால் முட்டையிட்ட பின் கடலுக்கு உணவு தேடிச் செல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெண் பென்குயின்கள். இதனால் முட்டைகளை ஆண் துணைகளிடம் மாற்றிவிட்டு சுமார் 20 கிலோமீட்டர் பயணமாகக் கடலுக்கு நடக்கத்தொடங்கும் பெண் பென்குயின்கள். முட்டைகள் உறையாமல் இருக்க இவற்றுக்குள் நடக்கும் இந்த முட்டைப் பரிமாற்றம் மிக வேகமாக நடந்தாக வேண்டும். இது சரியாக நடந்த பின் வரப்போகும் கடுமையான குளிர்காலத்தை முட்டைகளுடன் ஆண் பென்குயின்கள் மட்டும் தனியாகச் சமாளிக்கும்.
முட்டையை தந்தையிடம் ஒப்படைக்கும் தாய் பென்குயின்
இப்போது உறைய வைக்கும் காற்று அன்டார்டிகாவின் நடுவில் இருந்து வீச வெப்பநிலை படிப்படியாக வீழத்தொடங்கும். தங்களையும் தங்கள் முட்டைகளையும் கடும்குளிரிலிருந்து பாதுகாக்க அனைத்துப் பென்குயின்களும் சேர்ந்து உலகத்தின் பெரும்பாலான உயிரினங்களிடம் இல்லாத சிறந்த டீம் ஒர்க் ஒன்றில் ஈடுபடும். தங்கள் உடல்களைக் கொண்டு ஒன்றன் மீது ஒன்று பிணைந்து ஒரு பெரிய வட்டத்தை உண்டாக்கும் இவை. இதன்முலம் கிட்டத்தட்ட நாலாயிரம் பென்குயின்கள் சேர்ந்து ஒரு பெரிய குளிர்காப்பகத்தை உருவாக்கும். கிட்டத்தட்ட அனைத்துப் பென்குயின்களும் சேர்ந்து தங்களை தாங்களே குளிரிலிருந்து காத்துக்கொள்ளும். ஆனால் இதில் கடைசி வரிசையில் இருக்கும் பென்குயின்கள் அதிக குளிரைச் சந்திக்கும். அதனால் கூட்டத்தில் நல்ல இதமான இடத்திற்குப் போகவேண்டும் என அவை இடமாறும். இப்படி அனைத்துப் பென்குயின்களும் இடம் மாறி மாறி மொத்த வட்டமும் கிலோ மீட்டர் கணக்கில் நகர்ந்துகொண்டே போகும்
Posts: 12,840
Threads: 146
Likes Received: 1,097 in 962 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
140
தங்கள் உடல்களைக் கொண்டே பெரிய குளிர்க்காப்பகத்தை உருவாக்கும் பென்குயின்கள்
இதில் நடுவில் பனிப்புயல்கள் வேறு தாக்கும். அப்போது வெப்பநிலை மைனஸ் அறுபது செல்சியஸைத் தொடும். அப்போது வெளியிருக்கும் பென்குயின்களால் குளிரைத் துளியும் தாங்க முடியாது. இதனால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்படும். சில பென்குயின்கள் தடுமாறி கீழே விழும். பென்குயின் கால்களுக்கு நடுவில் முட்டைகள் வேறு இருக்கும். அந்த முட்டையுடன் மீண்டு எழுந்து நகரவேண்டும் இவை. இந்தக் கலவரத்திலேயே முட்டைகளுடன் சேர்த்து பல உயிர்களும் பலியாகும் சோகம் நிகழும். எப்படியோ பனிப்புயல் கடந்துவிட்டது என பென்குயின்கள் நிம்மதி பெருமூச்சு விடும் முன் புயலினால் பாதுகாப்பான பகுதியிலிருந்து தொலைதூரம் அடித்துவரப்பட்டதை உணர்ந்து மீண்டும் அந்த இடத்தை நோக்கி முட்டைகளுடன் கூட்டமாக நகரத்தொடங்கும். அங்குச் சென்று மீண்டும் பிணைந்துகொண்டு அடுத்த புயலுக்குத் தயாராக நிற்கும் இவை.
இந்த இரண்டு மாத போராட்டத்திற்குப் பிறகு இறுதியாகச் சூரிய ஒளி பிறக்கும். இந்த ஒளியுடன் அடுத்த தலைமுறையின் பென்குயின்களும் முட்டையிலிருந்து பொரித்து வெளிவரத்தொடங்கும். பிறக்கும்போது பெரிய பென்குயின்களிடம் இருப்பது போன்ற இறக்கைகள் இருக்காது. இதனால் குட்டிகள் கறுப்பு வெள்ளை நிறத்தில் வேறு ஒரு தோற்றத்தில் இருக்கும். வளரும் வரை கால்களுக்கு மேல் உள்ள அடைகாக்கும் பையிலேயே இவை பாதுகாப்பாக இருக்கும். இந்தக் குட்டிப் பென்குயின்களுக்கெனவே ஒரு சிறிய உணவை தன்னுள் சேர்த்துவைத்திருக்கும் ஆண் பென்குயின்கள். இது நம் பாலூட்டிகளின் பாலுக்குச் சமமானது. ஆனால் இதை வைத்து சில நாள்களுக்கு மட்டும்தான் தாக்குப்பிடிக்கமுடியும். கடலுக்குச் சென்ற தாய் பென்குயின்கள் உணவுடன் விரைவில் திரும்பினால் மட்டுமே இவை உயிர்வாழமுடியும். இப்படிச் சென்ற தாய் பென்குயின்கள் அனைத்தும் திரும்பும் என்றும் கூறமுடியாது. கடலில் ஆபத்துகள் அதிகம், வேட்டையாடும் விலங்குகளும் அதிகம். இருப்பினும் காத்திருக்கும் குட்டி பென்குயின்களுக்காகப் பெரும்பாலான தாய் பென்குயின்கள் வயிற்றில் அதிக உணவுடன் திரும்பும். வந்ததும் வெற்றிகரமாகப் பாதுகாத்த குட்டி பென்குயின்களை தாயிடம் தந்தை ஒப்படைக்கலாம்
Posts: 12,840
Threads: 146
Likes Received: 1,097 in 962 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
140
அன்டார்டிகாவில் சூழ்நிலை எவ்வளவு கொடியதென்றால் ஆசையுடன் திரும்பி வந்த சில தாய் பென்குயின்களின் குட்டிகள் இறந்திருக்கும். ஆனால் அவற்றுள் குழந்தை வளர்க்கும் உணர்வு மட்டும் ஆழமாகப் பதிந்திருக்கும். இதனால் தந்தையிடமிருந்து தாய்க்கு குட்டிப் பென்குயின்கள் மாற்றப்படும் காட்சியைப் பார்த்து அதனால் பொறுமையாக இருக்கமுடியாது. இந்தப் பரிமாற்றத்திற்கு நடுவிலேயே பென்குயின்களை திருட முயற்சிக்கும் இவை. இதனால் இவற்றுள் பெரும் மோதல் உண்டாகும். இதில் ஏற்படும் நெரிசலில் சில குட்டிகள் இறக்கவும் செய்யும். மேலும் சில குட்டிப் பென்குயின்கள் சுமார் மூன்று மாதங்களுக்கும் மேலாகப் போராடிய பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு இன்னொரு பென்குயின் ஜோடியுடன் வளரும். இந்தக் குட்டியைப் பெற்றெடுத்த இரண்டு பென்குயின்களின் காதலுக்கும், கடின உழைப்புக்கும் அர்த்தமில்லாமல் போய்விடும். இப்படிக் கடத்தப்படும் பென்குயின்கள் நன்றாக வளருமா என்றால் அதுவும் இல்லை, இப்படியான தத்துப் பென்குயின்கள் உயிர்பிழைக்கும் வாய்ப்புகள் குறைவுதானாம்.
பிறந்த குட்டிக்குச் சேகரித்து வைத்திருக்கும் உணவைத் தரும் தந்தை
இதுவரை அனைத்தும் சரியாக நடக்கப்பெற்ற பெற்றோர்களில் இப்போது தந்தை கடலுக்குச் சென்று உணவு சேகரித்து வரவேண்டிய நேரம். அதுவும் மாதக்கணக்கில் இருந்த தன் பசியைப் போக்கிக் கொள்ளவேண்டிய நேரம். இந்தக் காலத்தில்தான் சேகரித்து வைத்திருக்கும் உணவைக் கொடுத்து குட்டிகளை வளர்க்கும் தாய் பென்குயின்கள். தாய்-சேய் உறவும் வளரும். ஆனால் இத்துடன் பென்குயின்களின் கஷ்டகாலம் இன்னும் முடியவில்லை. பனிப்புயல்களைத் தாய் பென்குயின்கள் சந்திக்கும் நேரம் இது. இப்போது குட்டிகளையும் பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும். சில நேரங்களில் அடிக்கும் புயலில் பென்குயின்கள் சிறிய பள்ளங்களில் விழுந்துவிடுவதுண்டு. அப்படி நடந்தால் கால்களில் குட்டியுடன் அவை ஏறி மேலே வரவேண்டும். ஏறுவது மிகவும் கடினமென ஆகிவிடும்போது தன்னை தற்காத்துக்கொள்ள சில தாய் பென்குயின்கள் வேறு வழியில்லாமல் தங்கள் குட்டிகளை விட்டுவிட்டு மேலே ஏறிவிடும். சில பென்குயின்கள் சிரமப்பட்டு குட்டிகளுடன் மேலே ஏறும். இப்படிக் குட்டிகள் வளர்ந்துகொண்டிருக்கச் சூரியன் ஒவ்வொரு நாளும் படிப்படியாக மேலே வரத் தொடங்கும். இதனுடன் வெப்பநிலையும் உயரத்தொடங்கும். இந்த வாரங்களில் பலமுறை மாறி மாறி தாயும், தந்தையும் குட்டிப் பென்குயின்களுக்காக உணவு சேகரித்துவரும். குட்டிகள் வளரத்தொடங்கி சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு அதிகரிக்கும் பசியால் தாய், தந்தை என இரண்டுமே உணவு தேடிச் செல்லவேண்டிய நிலை ஏற்படும். ஆனால் இவ்வளவு நாள் பாதுகாப்பில் இருந்த குட்டிப் பென்குயின்கள் அவ்வளவு எளிதில் தாய், தந்தையைவிட்டுப் பிரிந்துவராது. இப்படி அதிகம் அடம்பிடிக்கும் குட்டிகளை கட்டாயப்படுத்தி தங்களிடமிருந்து பிரித்து தள்ளிவிட்டு உணவைத் தேடி இவை செல்லும்.
Posts: 12,840
Threads: 146
Likes Received: 1,097 in 962 posts
Likes Given: 0
Joined: Dec 2018
Reputation:
140
தனியாகப் போராடும் குட்டிப் பென்குயின்கள்
இப்போது இந்தக் குட்டிகள் தனியாக ஆபத்துகளை எதிர்நோக்கும் நேரம். பெற்றோரைப் போல் இவையும் கூட்டமாகப் பிணைந்து குளிரிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளத்தொடங்கும். சூரியன் ஓரளவு மேலே வந்துவிட்டபோதும் பனிக்காற்று வீசத்தொடங்கினால் மைனஸ் 20-களில் இருக்கும் வெப்பநிலை. இதுபோன்ற சமயங்களில் சில குட்டிகளுக்கு மட்டுமே பெற்றோர் கூட இருக்கும். பிறந்து சில மாதங்களே ஆன மற்ற பென்குயின்கள் முதல்முதலாக இந்த ஆபத்துகளை எதிர்கொள்ளும். இவ்வளவு கஷ்டங்களுக்குப் பிறகு இறுதியாக கோடைக்காலம் வந்தடையும். இந்தப் பென்குயின்கள் இருக்கும் உறைந்த கடல் பகுதிகள் உருக ஆரம்பிக்கும். இதற்குள் வேகமாக வளர்ந்துவிடும் குட்டிகள் யார் துணையுமின்றி வாழும் நிலையை அடைந்திருக்கும். இந்தக் காலத்தில் பென்குயின்கள் அனைத்தும் பழைய இறக்கைகளை உதிர்த்து புதிய இறக்கையைப் பெறத்தொடங்கும். குட்டிப் பென்குயின்கள் தனது குழந்தை இறக்கைகளை உதிர்த்து புதிய இறக்கையைப் பெறத்தொடங்கும். இது குட்டிகள் பருவமடைந்ததைக் குறிக்கும். பறவைகளிடம் காணப்படும் இந்தக் குணத்தை 'Moulting' என்று அழைப்பர். இறுதியாக இந்த அதிசயப் பறவையின் அழகிய, அபூர்வ சுழற்சி முடிவுக்கு வரும். இந்தச் சுழற்சி முடியும்போது மூன்றில் இரண்டு இளம்பென்குயின்கள் பிரச்னைகளைக் கடந்து உயிர்பிழைத்திருக்கும். அப்படி உயிர்பிழைத்த புதிய பென்குயின்கள் முதல்முறையாக உணவைத் தேடி கடலுக்குச் செல்லும். இதன்மூலம் வெற்றிகரமாக அடுத்த தலைமுறையை உலகில் கொண்டுவந்து சேர்த்திருக்கும் பெற்றோர் பென்குயின்கள்.
![[Image: Penguins_6_12380.jpg]](https://image.vikatan.com/news/2019/01/22/images/Penguins_6_12380.jpg)
பருவமடையும் எம்பெரர் பென்குயின்கள்
ஆனால் இப்போது இந்த அற்புதப் பறவைகளின் எதிர்காலம் கேள்விக்குறிக்குள்ளாகியுள்ளது. வருடா வருடம் அன்டார்டிக் கடல் பகுதியின் வெப்பநிலை ஏறிக்கொண்டே வருகிறது. இதனால் இந்தப் பென்குயின்கள் பெரிதும் நம்பியிருக்கும் உறைந்த கடல் பகுதிகள் போதிய காலம் உறைந்திருக்காமல் போகலாம். இதனால் இத்தனை வருடங்கள் நடைபெற்ற இயற்கையின் இந்த அரிய வாழ்க்கை சுழற்சி பாதிப்புக்குள்ளாகும். சுழற்சி முடியும்போது உயிர்பிழைக்கும் எம்பெரர் பென்குயின்களின் எண்ணிக்கை பெருமளவில் குறையலாம். இதை இந்த எம்பெரர் பென்குயின்களின் வாழ்க்கைமுறையை அழகாகப் படம்பிடித்துக் காட்டிய `Dynasties' என்னும் சமீபத்திய பிபிசி எர்த் தொடரில் தெரிவித்தார் பிரபல இயற்கை ஆர்வலர் டேவிட் அட்டன்ப்ரோ. இந்தப் பாதிப்புக்குக் காரணம் மனிதர்களாகிய நாம்தான். நம்மால் மாறும் இந்தக் காலநிலை மாற்றங்களை நாம் ஓரளவு சமாளித்துவிட முடியும் என்பதற்காக இயற்கையும், மற்ற உயிரினங்களும் அவற்றைச் சமாளித்துவிடும் என்று நினைப்பது மிகவும் தவறு.
|