அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
பாகம் - 60 

மணி அவன் மேற்கொண்ட தொடரும் முயற்சிகளில் வெற்றி பெற்றுக்கொண்டு இருந்தாலும், தான் எதையும் இழக்கவில்லை என்பதும், தன்னை குழுமத்தின் சேர்மனாக நியமித்த பின், தன் மாமனார் முகத்தில் தெரிந்த பெருமிதமும், கொஞ்சம் நிம்மதியைக் கொடுத்தது சிவகுருவுக்கு. இருந்தும், எப்படி, சிறுவன் என, தான் உதாசீனப்படுத்திய ஒருவனால், இவ்வளவையும் செய்ய முடிந்தது என்று சிந்திக்கலானான்.

"எத்தனையோ பேர், பெரிய தொழில் முதலைனு சொல்லிக்கிட்டு திருஞ்சவன எல்லாம், ஒரு சின்ன இடைவெளி கிடச்சா போதும், அவன் எவ்வளவு பெரிய கொம்பனா இருந்தாலும் அசாலட்ட அடிச்சு சாச்சிருவேன், ஆனா இந்தப் பொடியன்....!! சின்னயப் பையன், இரண்டு வருஷத்துக்கு முன்னால அகோவுண்டஸ் பேலன்ஸ் ஷீட் எடுத்துக்கொடுத்துப் பார்க்க சொன்ன, திருதிருனு முழிச்சிருப்பான்!!. ஆனா இன்னைக்கு இவ்வளவு பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தை கட்டியெழுப்பிய, எனக்கே சவால்விடுறான்!!. ஒருவேளை நான் அவன தப்பா எடைபோட்டுடேனோ? எங்க தப்புவிட்டோம்? ” என்று மூளையை கசக்கியவனுக்கு பெரிதாக ஒன்றும் விளங்கவில்லை.

இப்போவும் ஒண்ணும் கேட்டுப்போகவில்லை. அவன், என்னை தொழில் முறையில் ஜெயிக்கணும்னு மட்டும்தான் நினைசிக்கிருக்கான். சிவகாமிக்கும் எனக்கும் உள்ள தொடர்பை அவன் சொல்லணும்னு நினைச்சிருந்தால், எப்போவோ சொல்லிருக்கலாம். எனக்கு, எப்படி என்னோட பெயரை காப்பாற்றிக் கொள்ளுனும்னு கட்டாயம் இருக்கோ, அதே மாதிரி அவனுக்கும், அவன் பேரை காப்பாற்றனும்னு கட்டாயம் இருக்கு. அதனால் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. இருக்கும், கண்டிப்பா சின்னதா ஒரு கேப் இருக்கும், அத மட்டும் கண்டு பிடிச்சிட்டா போதும், மொத்தமா இவனை அடிச்சு சாச்சிறலாம். பதட்டப் படாத, எதுவுமே உன் கைய விட்டுப் போகல!!. என்று தனக்கு தானே தெம்பு சொல்லிக்கொண்ட சிவகுரு, தன் கனவு மெய்ப்பட்டதை, சேர்மேன் இருக்கையில் அமர்ந்தததை எண்ணி, அதை ரசிக்கலானான்.

**************

அன்று மாலையே சிவகுருவின் நிம்மதி தொலைந்தது. ஃப்யூச்சர் குரூப்ஸின் சேர்மன் ஆக்கப்பட்டதன் பொருட்டு, அதற்கான பத்திரிக்கை அறிவிப்பின் கடிதத்தோடு, மணியை எம்டியாக அறிவிக்கும் கடிதமும் சேர்ந்தே வந்திருந்தது சிவகுருக்கு. சிவகுருவை சேர்மன் ஆகும், அறிவிப்பில், ஏற்கனவே தனது மாமனார் கையெழுத்திட்டு இருக்க, மணியை M.Dயாக அறிவிக்கும் அறிவிப்பின் கீழ், சிவகுருவின் பெயர் பொறிக்கப்பட்டு, கையெழுத்துக்காக காத்திருந்தது. அவன் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, உள்ளே நுழைந்தனர் இருவரும்.

Checkmate. 

இப்பொழுது புரிந்தது சிவகுருவுக்கு. மணியை M.Dயாக அறிவிக்கும் அறிவிப்பில் கையெழுத்திடுவதைத் தவிர, தனக்கு வேறு வழி இல்லை என்பதை உணர்ந்த சிவகுரு, அதில் கையெழுத்துவிட்டு நிமிர்ந்து தன் மாமனாரை பார்த்து புன்னகைத்தான்.

ஒன்றும் கைவிட்டுப் போகவில்லை. எல்லாம் beginners luck. என்ன மணிக்கு அந்த கால அளவு கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. ஒரு சின்ன இடைவெளி கிடைத்தால், மொத்தமாக எல்லாத்தையும் தன் கட்டுக்குள் கொண்டுவந்து விடலாம். அந்தச் சின்ன இடைவெளிக்கு காத்திருக்கும் வரை தன்னை பலவீனமாக்கி கொள்ளக் கூடாது முடிவு செய்த சிவகுரு, அடுத்த வாரமே பெரிய அளவில் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்தான். குடும்பத்தினரும், தொழில் வட்டத்தில் முக்கியமானவர்களையும், தங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் முக்கிய புள்ளிகளையும் அந்த விருந்துக்கு அழைத்து, மணியை "ஆகா, ஓகோ" என்று புகழ்ந்து தள்ளினார். சிவகுரு.

சேர்மன் ஆனதற்காக கொடுக்கப்படும் பார்டி என்று நினைத்து வந்தவர்களுக்கு, அப்படி அல்ல, இது மணியின் வெற்றியை கொண்டாடும் விருந்து என்ற பிம்பத்தை எளிதாக கட்டியமைத்தார். சிவகுருவின் குடும்பத்துப் பெரியவர்கள் பூரித்துப் போனார்கள். விருந்தில் கலந்துகொண்ட பெரும்புள்ளிகளோ, "புலிக்குப் பிறந்தது பூனையாகுமா " என்று சிவகுருவை வாயாரப் புகழ்ந்தார்கள். சிவகுருவின் மனைவி சுமாவோ, ஒருபடி மேலே சென்று, அறைக்கு வந்ததும் கணவனை ஆரத்தழுவிக் கொண்டாள். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு பிறகு, ஆத்தமார்த்தமான அணைப்பு. ஆரத்தழுவிக் கொண்டுவளின் காதுகளில், கிசுகிசுத்து, அவளை சிலிர்க்கச் செய்து தானும் சிலிர்த்துக் கொண்டான் சிவகுரு. நிம்மதியாக தன்னைக் காட்டிக்கொண்டு படுத்திருக்கும், தன் மனைவியை, அணைத்துக் கொண்டு, அவனும் உறங்கிப் போனான். மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் இருக்க, மணி எப்பொழுதும் போல் உணர்வற்று இருந்தான். அன்று இரவு அந்த வீட்டில், அனைவரும் நிம்மதியாக உறங்க, மணி மட்டும் விழித்திருந்தான், எப்பொழுதும் போல, ஆனால் குழப்பத்துடன். 

*************

இரண்டு மாதம் கழித்து,

மாமா!! நம்ம கம்பெனிகளை BSE(Bombay Stock Exchange) லிஸ்ட் பண்ணலாம்னு ஒரு ஐடியா, நீங்க என்ன சொல்றீங்க?” தான் தேடியலைந்த ,அந்த சின்ன இடைவெளியை ஒருவழியாக கண்டுபிடித்துவிட்டான் சிவகுரு. 

"இதத்தான், தம்பி கொஞ்ச நாளைக்கு முன்னால சொன்னப்ப, வேண்டாம்னு சொன்ன, ஞாபகம் இருக்கா சிவா? அதுவும் இல்லாம ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் கம்பெனிகளை லிஸ்ட் பண்ணினா, போர்ட் மெம்பர்ஸ் போடணும், அதிலும் நம்ம நிர்வாகத்துக்கு சம்பந்தம் இல்லாத இன்டிபெண்டன்ட் மெம்பர்ஸ் இருக்கணும்!!"

மணி மின்சாரத் தயாரிப்பில் ஈடுபடலாம் என்று சொன்னபோது, முதலீடு எங்கிருந்து வரும்? என்று சிவகுரு கேட்க, நான்கைந்து நாட்களுக்கு பின், இதை யோசனையை மணி தெரிவித்திருந்தான். ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் கம்பெனிகளை லிஸ்ட் செய்தால், நிர்வாகத்தின் முழு கட்டுப்பாடும் தங்களிடம் இருக்காது என்ற காரணத்தைச் சொல்லி நிராகரித்த சிவகுரு, அதை யோசனையோடு இன்று வர, அதே கேள்வி கேட்டார் மணியின் தாத்தா.

"தம்பி சொன்னதுதான் கரெக்ட்டு!!. நிர்வாகக் கட்டுப்பாடு நம்மகிட்ட இருக்கணும்னு நினைச்சே, நாம்மல நாம்லே, அண்டர் வேல்யூ பண்ணிக்கிறோம் தோணுச்சு!! நாம அடுத்த கட்டத்திற்கு போகணும்னா, இது தான் ஒரே வழினு எனக்குத் தோணுது!! நம்முடைய எல்லா பிஸினஸும் இப்போ பிராஃபிட்ல தான் இருக்கு!! சோலார் இண்டஸ்ட்ரீஸ் கூட இந்த குவாட்டர்ல பிரேக்-ஈவென் ஆக்கிடுச்சு!! இதுதான் சரியான டைம்னு தோணுது!! இப்ப மட்டும் நம்ம லிஸ்ட் பண்ணினா, காஷ் ஃப்லோ இருக்கும்!! அதை யூஸ் பண்ணி, தம்பி சொன்ன மாதிரி மின்சார தயாரிப்புல இறங்கலாம்!!” மணியை வைத்தே தன் காய்களை சரியாக நகர்த்தினான் சிவகுரு.

"ஐடியா நல்லாத்தான் இருக்கு, ஆனா......” பெரியவர் தயங்கினார்.

"நாம ரெண்டு பேருமே பழைய காலத்து ஆளுங்க மாமா!! தம்பி, இந்த ஜெனரேஷன்!! அவனுக்கு கரெக்டா தெரிஞ்சிருக்கு!!” தன் மாமனாரின் தயக்கத்தை கண்டவுடன் அதற்கான மொத்த கிரெடிட்-டையும் மணியின் பக்க சாய்த்து, அவரை தன் பக்கம் சாய்த்தான் சிவகுரு

தன் மொத்த திட்டத்தையும் பெரியவரிடம் பகிர்ந்தது, அவரது கேள்விகளுக்கெல்லாம் பதில் அளித்து, திட்டத்திற்கு சம்மதம் வாங்கிவிட்டே அனைவருக்கும் தெரிவித்தான்

**************

இரண்டு மாதம் கழித்து ஒருநாள் மாலை,

பங்குசந்தையில் அங்கமாகும் முன், குலதெய்வம் கோயிலுக்கும், மணியின் பெரியப்பாவின் சம்பாதிக்கும், மொத்த குடும்பம் வணங்கச்சென்றது. காலையில் குலதெய்வம் கோயிலுக்கு சென்றவர்கள், மாலையில் மணியின் பெரியப்பாவின் சமாதிக்கும் சென்று கும்பிட்டார்கள். அனைவரும் கிளம்பும் நேரத்தில், தான் கொஞ்ச நேரம் தனியாக தன் பெரியப்பாவின் சமாதியில் இருந்துவிட்டு வருவதாக சொன்னான் மணி. மறுத்துப் பேச வலியில்லாமல் அனைவரையும் சமாளித்து அனுப்பினான். ஏனோ அவனுக்கு, அங்கு, தனியாக இருக்க வேண்டும் என்று தோன்றியது.

உன் பெரியப்பாவின் சமாதியை வெறித்துக் கொண்டிருந்தான்.

சிவகுரு என்ற தனிப்பட்ட மனிதனின் மேல் எந்த மரியாதையும் இல்லாவிட்டாலும், கடந்த ஒன்றரை வருடங்களில், தங்கள் குழுமத்தின் M.D சிவகுருவின் மிகப்பெரிய பிரம்மிப்பு உண்டாகியிருந்தது மணிக்கு. குழப்பமில்லாத, மிகவும் சீரான, Well-oiled machine போல தங்களது குழுமத்தின் நிர்வாக கட்டமைப்பைப் பார்த்து வந்த பிரமிப்பு அது. அவர்கள் குழுமத்தில் பெரும்பாலான அதிகாரங்கள் M.Dயின் வசமே இருந்தது. சிவகுருவின் பெரும் பலமே இதுதான், சிவகுருவின் அந்த பலத்தை எடுத்துக்கொள்ள முடிவு செய்தான் மணி. சீராக நடந்து கொண்டிருக்கும் தொழில்களில், தனது உழைப்பு பெரிதாக தேவைப்படாது என்பது புரிந்தது மணிக்கு. பெருங் கவனம் தேவைப்படும் ஒரே தொழில் சோலார் industries மட்டும்தான். அதைப் பற்றிய புரிதல் அவனுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது ஒரு காரணம் என்றால், அதை நிர்வகிப்பது மீர் அலி என்பது மற்றொரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையில்தான் அடுத்தகட்ட நகர்வாக, M.D ஆவது என்று முடிவு செய்து வேலைகளில் இறங்கி அதை செய்து முடித்திருந்தான்.

பங்குசந்தையில் அங்கமாகும் முன் கம்பெனிகள் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்துவது என்ற பெயரில் மொத்தத்தையும் மாற்றி அமைக்க ஆரம்பித்த சிவகுரு. அடுத்த இரண்டு மாதங்களிலேயே மூன்று பிரிவுகளாக கம்பெனி பிரிக்கப்பட்டது. இண்டஸ்ட்ரீஸ், கன்ஸ்டிரக்ஷன், ஹோல்டிங்ஸ். மிகவும் சிறிய நிறுவனங்கள் விற்கப்பட்டன. அப்படி செய்யப்பட்ட மாற்றங்களின் அங்கமாக, நிர்வாகத்தில் M. Dயின் அதிகாரங்களை குறைத்த சிவகுரு, அதை சரிக்கட்டும் விதமாக மணியை, தன் மாமனார், மனைவியை, தன்னோடு சேர்த்து, போர்ட் மெமபர்களில் ஒருவனாக ஆக்கினான்.

இந்த முறை கொஞ்சம் பெரிதாகவே எதிர்வினையை எதிர்நோக்கி இருந்தான். ஆனால் தான் நினைத்ததற்கு மாறாக, சிவகுருவோ கொண்டாட்டத்தில் இருக்க, முதல் முறையாக சற்று குழம்பினான். உணர்வற்று இருந்தாலும், உள்ளம் பரபரப்பாய் இருந்தது. எல்லாம் சரியாக திட்டமிட்டுதான் செய்தான். மணி தான் எதிர்பார்த்த வினை வராமல் போக கொஞ்சம் பதட்டப்பட்டான். அதை சரியாக பயன் படுத்துக்கொண்டார் சிவகுரு

"இன்னும் கொஞ்ச நாள் போகட்டும், எனக்கு இருபத்தி மூணு வயசு கூட ஆகல!! நான் கொஞ்சம் தெளிவாகிக்கிறேன்" என்று கேட்ட மணியை 

"உங்கப்பாவும், நானும், இதே வயசுல தான் தொழில் பண்ண ஆரம்பிச்சோம். நீ எங்கள விட திறமைசாலி, அதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்லை!! இந்த ரெண்டு வருஷத்திலேயே உன்ன நீ நிரூபிச்சுட்ட!! எப்படிப் பார்த்தாலும் நம்ம கம்பெனியோட எதிர்காலம் நீ தான்!! இப்போதான் நீ தன்னிச்சையாக செயல்படணும்!! தள்ளி நின்னாலும் உனக்கு ஒரு வழிகாட்ட, நான் இருக்கேன்!! மேஜர் ஸ்டேக் ஹோல்டர் நம்ம தான், 20% லிஸ்ட் பண்றதால தொழிலை இன்னும் விருத்தி செய்யலாம்!! நீ சொன்னதுதான், இந்த வயசுலேயே போர்ட் மெம்பரானு திகைக்க கூடாது!! நீ என் பேரன் டா ராஜா!!" என்று மணியின் தாத்தாவைக் கொண்டே அவனின் வாயை அடைத்தான், சிவகுரு

தயாரிப்பு துறையில் இருந்த அத்தனை கம்பெனிகளையும் ஃப்யூச்சர் இண்டஸ்ட்ரீஸ் என்ற ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து, அந்த நிறுவனத்தை லிஸ்டட் கம்பனியாக மாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது. முதலில் வெறும் 20 சதவிகிதத்தை மட்டுமே ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் கொடுப்பது என்று திட்டமிட்டிருந்தான்.

மொத்தமாக அடித்து வீழ்த்தி அசிங்கப்படுத்துவதைக் காட்டிலும், எப்படி மொத்த குடும்பத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, தன்னை தனி மரமாகவே ஆட்டி வைத்தாரோ, அதையே அவருக்கு தானும் செய்ய வேண்டும் என்று நினைத்து, கிட்டத்தட்ட அதை அடைந்தும்விட்டான் மணி, அவன் செய்து முடிக்காமல் விட்டது, அம்மா சுமாவை தன் வசம் இழுப்பது மட்டுமே. ஆனால் சிவகுருவின் சமீபத்திய செயல்பாடுகள், தன்னை பழைய நிலைக்கே கொண்டு வந்து விட்டதை நம்ப முடியவில்லை, மணியால். இந்த முறையும் தோல்வி அடைந்தால், அது கொடுக்கும் வலியை தாங்கிக் கொள்ளும் சக்தி அவனிடம் இல்லை என்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்தது

சிவகாமிக்கும் சிவகுருவுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தியிருந்தால், இரண்டு வருடங்களுக்கு முன்பே சிவகுருவை மிக எளிதாக தன்னால் விழத்தியிருக்க முடியும். ஆனால் இப்பொழுது அதை சொல்லி நம்ப வைப்பது கடினம் என்பதை காட்டிலும், சிவகுரு மட்டும் சாமர்த்தியமாக காய் நகர்த்தினால், தன் நிலை முன்னிலும் கேவலமாக மாறிவிடும், என்பதை நினைக்கையில் ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது மணிக்கு. சிவகுருவினால் கண்டிப்பாக அப்படி செய்யமுடியும் என்பகையும் மணி உணர்ந்திருந்தான். அவனுக்கு இருந்த ஒரே வாய்ப்பு, சிவகுருவை அடித்து வீழ்த்துவதுதான், அதற்கான வாய்ப்பு சரியான வாய்ப்பு இருந்தபோது அதை தவறவிட்டிருந்தவன், வேறு ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா என்று எண்ணி எண்ணி, ஒன்றும் புலப்படாமல் போக, வீரத்தியின் உச்சத்துக்கு சென்றான்.

எதிரில் தெரிந்த அவனது பெரியப்பாவின் சமாதியை, வெறுப்புடன் பார்த்தான்.

"இவ்வளவு சொத்து சுகம் இருந்தும், இப்படி கிறுக்குத் தனமா சாமியாரா போயி, யாருக்கும் பிரயோஜனம் இப்படி செத்துப்போகாம, பொறுப்பா இருந்திருந்தா, இன்னைக்கு எனக்கு இப்படி ஒரு நிலை வருமா?” கடந்த முறை பரிதாபப்பட்ட தன் பெரியப்பாவின் மேல் இந்த முறை வெருப்பை கக்கினான். தனக்கு மிகவும் அருகில் தெரியும் தோல்வியின் மொத்த பழியையும் தன் பெரியப்பாவின் மேல் போட்டான். "என்ன சாமி, ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல!!" என்ற சத்தம் அவன் பெரியப்பாவை அவனிடம் இருந்து காப்பாற்றியது.

*****************

"என்ன சாமி, ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல!!" என்ற சத்தம், அவன் பெரியப்பாவை அவனிடம் இருந்து காப்பாற்ற, சத்தம் வந்த திசையை நோக்கினான்.

அதே பிச்சைக்கார சாமியார். மணியைப் பார்த்து சினேகமாக சிரித்தார், சிரித்தவரைப் பார்த்து முறைத்தான். யாரிடமும் பேசும் மனநிலையில் இல்லை, அவன்.

"என்ன சாமி ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல!!” முறைத்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து மீண்டும் கேட்டவரை, நம்பமுடியாமல் பார்த்தவன், "முடியல" என்பதைப் போல் தலையசைத்தான். இந்த முறை சரியான அளவில் வேட்டி சட்டை அணிந்திருந்தார். சிகை அலங்காரம் போன முறை போல் அப்படியே இருந்தது.

"ஊதக் காத்து உசுர் வர, புடிச்சு ஆட்டுது!!, எப்படித்தான் வெறும் சட்டை துணையோடு இருக்கீங்களோ?" என்றவாறு தோளில் கிடந்த துண்டை எடுத்து, தன் மேல் உடலைப் போர்த்திக் கொண்டு, அவன் அருகில் அமர்ந்தார்.

சற்றுமுன் அவர் மேல் இருந்த வெறுப்பு, இப்பொழுது இல்லை, அவனிடம். இவ்வளவுக்கும் அவர் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. மனிதரை கட்டிப்போடும் வித்தை தெரிந்தவர் போல என்று நினைத்தவன், கடந்த முறைபோல தன்னை தெம்பூட்ட எதேனும் சொல்வாரா என்ற எதிர்பார்ப்பில், அவரையே பார்த்துக்கொண்டு இருந்தான். அவரோ, இவனைக் கண்டு கொள்ளாமல், போர்த்திய துண்டை இழுத்து பிடித்துக் கொண்டு, சமாதியை பார்த்துக் கொண்டிருந்தார். கொஞ்சநேரம் காத்திருந்தவன், போனதடவ ஏதோ உலறினார் என்பதற்காக பிச்சைக்காரரை, சாமியாராக கருதும் தன் என்னைத்தை நொந்துகொண்டு, எழுந்தவன், ஒரு இரண்டாயிரம் ரூபாய் நோட்டை எடுத்து அவரிடம் நீட்டினான், கடந்த கால நியாபாகத்தில். இவன் ரூபாய் நோட்டை நீட்டியதும் பல் இளித்தவர் 

"சாமி!! 50, 100, 500னு இருக்குமானு பாருங்களேன்!!, போனதட, நீங்க குடுத்த 2000 ரூபாயை மாத்தூறதுக்குள்ள போதும், போதும்னு ஆகிருச்சு!!" இளித்த, இளிப்பை குறைக்காமல் கேட்டார், ஏதோ கொடுத்து வைத்ததைப் போல. மீண்டும் அவர் செய்கையை நம்பமுடியாமல், தலையைாட்டியவன், வேலேட்டில் இருந்து, அவர் கேட்டது போல நோட்டுக்களை எடுத்துக்கொடுத்தான். வாங்கிக் கொண்டவர், அதை எண்ணி, மடித்து, தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு.

"சாமி, நம்ம சந்தோஷத்துக்கு வேணா ஆயிரம் பேர் என்ன லட்சம் பேர் கூட, காரணமா இருக்கலாம்!! நம்ம கஷ்டத்துக்கும், வலிக்கு, எப்பவவுமே, நம மட்டும்தான் காரணமா இருப்போம்!! என்றவர் போர்த்தி இருந்த துண்டை எடுத்து, தன் இரு காதுகளையும் மறைத்தவாறு, தலையில் கட்டிக் கொண்டார்.

"காது, கால், வழியாத்தான் குளிர் மனுஷனுக்குள்ள இறங்குமாம், துண்ட இப்படி காதை சுத்தி கட்டுனா, உடம்புக்கு குளிர் தெரியாதாம்" என்று அவனுக்கு சம்பந்தமே இல்லாமல் குளிரில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவது எப்படி என்று பாடம் எடுத்தவர், கால்களை சம்மணமிட்டு, தனது வேட்டிக்குள் மறைத்து வைத்துக் கொண்டு, செய்முறை விளக்கமும் கௌததார்

"புத்திகெட்டவன்தான், தான் கஷ்டத்துக்கு அடுத்தவங்கிட்ட காரணம் தேடுவான். நம்ம வலிக்கு அடுத்தன் செயல்ல காரணம் தேடினா அந்த வழியில் இருந்து மீளவே முடியாது!! என்ன நாஞ் சொல்றது!!” என்றவர் அவனது பெரியப்பாவின் சமாதியைப் பார்த்தார்

"வலிக்குமேனு பயந்தவன் வாழ் வீச முடியுமா?" மணியைப் பார்த்து திரும்பியவர் கேட்க, அவனுக்கு அவர் சொல்வது புரிந்தும் புரியாமலும் இருக்க, என்ன சொல்வதெண்டறு தெரியாமல் முழித்தான்.

"சாமிக்கு புரியலனு நினைக்கேன்!!” என்று யோசித்தவர்.

"சரி சாமி!! உங்களுக்கு புரியிற மாதிரியே சொல்லறேன்!!” என்றவர், பின் முகத்தை மாற்றி 

"சண்டையில கிழியாத சட்டை எங்கே இருக்கு?" வடிவேலு போலவே சொல்லிக் காட்டியவர், கலகலவென்று சிரித்தார். அவர் வலியைப் பற்றி சொன்னது மணிக்கு புரிந்ததோ, புரியாவில்லையோ, அது அவனுக்குத்தான் வெளிச்சம். ஆனால், அவன் மனதில் இறுக்கம் கொஞ்சம் தளர்ந்திருந்தது. அங்கிருந்து சமாதியின் வாயிலை நோக்கி நடந்தான்.

தொடர்ச்சி..
[+] 2 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 26-12-2020, 08:13 PM



Users browsing this thread: 2 Guest(s)