அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
"நாளை மறுநாள், ஹாஸ்பிடல் போகணும்!!" பதில் பேசாமல் வெற்றுப் பார்வை பார்த்தவனை, அப்படியே விட்டுவிட்டு போக மனமில்லாமல், மெத்தையில் அமர்ந்த தாத்தா, மணியின் தலையை பற்றி தன் மடியில் வைத்துக் கொண்டு, கட்டுப்போட்டு இருந்த அவனது வலது கையை, எடுத்து தன் கைகளுக்குள் வைத்து தடவியவாறு அவனிடம் பேச்சுக் கொடுத்தார்.

"....................." வெற்றுப் பார்வையையே பதிலாக தந்தான்.

"கவலை படாத கண்ணு!!, ரெண்டு மாசத்துல மறுபடியும் விளையாட ஆரம்பிச்சுடலாம்!!" பேரனின் உணர்வற்ற நிலைக்கு, இனி டென்னிஸ் விளையாட முடியாது என்ற பயம், கவலை காரணமாக இருக்குமோ என்று நினைத்துக் கொண்டு, அவராகவே பேச ஆரம்பித்தார்.

"இங்க வேண்டாம் ராஜா!!.... உனக்கு சரியானதும், நாம பேசாம கிளம்பி அமெரிக்கா போயிரலாம், ஏற்கனவே நல்ல டென்னிஸ் கோச்சிங் கிளப் பத்தி விசாரிச்சிக்கிட்டு தான் இருக்கேன்..... அடிபட்டத நினைச்சி மனசு விட்றாத.... எல்லாமே சின்ன, சின்ன, அடிதான், நீயே பார்த்தே இல்ல, அஞ்சு நாளிலேயே டிஸ்சார்ஜ் பன்னிக்கலாம்ணு சொன்னாங்க.... இந்த மாதிரி நேரத்துல தான் தங்கம், நாம ரொம்ப தைரியமா இருக்கணும், தாத்தா இருக்கேன்........ எதுக்கும் கவலைப்படாத, டேண்ணிஸ்ல இந்த உலகமே திரும்பிப் பார்க்கிற அளவுக்கு, நீ பெரிய ஆளா வருவ. ரெண்டே மாசத்துல இங்கிருந்து கிளம்பலாம், அமெரிக்கா ........ உனக்கு வேண்டாம்னா, நீ போன வருஷம் போனியே அந்த ஸ்பெயின் கோச்சுக்கிட்ட கூடப் போகலாம்" தன் பேரனுக்கு தெம்பு சொல்வதாய் நினைத்து, அவருக்கு, அவரே தெம்பு சொல்லிக் கொண்டிருந்தார் அந்த முதியவர்.

தாத்தாவின் பேச்சு அவன் காதில் வெறும் சத்தமாக மட்டும்தான் ஒலித்தது, சொற்களாக அல்ல.

*************

"தாத்தா, என்ன நம்ம குரூப் போட சேர்மன் ஆக்குங்க!!" மறுநாள் காலை, எப்பொழுதும் போல் தன் பேரன் தேவையில்லாததை சிந்திக்கக் கூடாது என்ற எண்ணத்தில், அவனிடம் நம்பிக்கையை விதைக்கும் விதமாக தன்னுடைய ஆரம்பகால தொழில் முயற்சிகளை, சவால்களை, அவர் சொல்லிக் கொண்டிருக்க, திடீர் என்று கேட்டான் மணி.

சட்டென்று அமைதியாகி விட்டார், விபத்திற்குப் பிறகு முதல் முறையாக, தன் சுயத்தை தேவையைத் தாண்டி அவன் பேச, முதலில் அவன் கேட்டதன் அர்த்தம் உணர்ந்தவர் அதிர்ச்சியானார், பின் சுதாரித்துக் கொண்டு

"இப்பவே, நீதான் அது எல்லாத்துக்கும் அதிபதி .....டா!!...ராஜா!!" சிரித்தவாறே, அவனது முதுகை வாஞ்சையாக தடவினார்.

"இல்ல!! எனக்கு நம்ம குரூப்போட சேர்மன் ஆகணும், ஆக்க முடியுமா? முடியாத?" சிவகுருவுக்கு மேலான பதவியில் அமர்ந்தே ஆக வேண்டுமென்று, அவனுக்குத் திடீரென்று ஒரு சிந்தனை தோன்ற, மீண்டும் கேட்டான் மணி.

"அதுக்கு என்ன ராஜா, எப்படி இருந்தாலும், ஒரு நாள், நீ நம்ம குரூப்போட சேர்மன் ஆகத்தான் வேணும்!! ஆனா அதுக்கு முன்னால, ஏதாவது பிசினஸ் ஸ்கூல்ல ஜாயின் பண்ணி மாஸ்டர்ஸ் பண்ணு!! திரும்பி வந்த உடனே அந்த சேர்மன் சீட் உனக்குத்தான்!!" பேரனுக்கு தாத்தாவாக இருந்தாலும், அவன் அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பேசினார்.

"என் தாத்தா? இப்பவே என்ன சேர்மன் ஆக்கினா, என்னால அதுக்கேத்த மாதிரி செயல்பட முடியாது என்று நினைக்கிறீங்களா? எனக்கு அதுக்கான அறிவு, திறமை இல்லன்னு நினைக்கிறீங்களா? இல்லை, எனக்கு அந்த தகுதி இல்லையா?" தனது விரக்தியை, அவன் வெளிப்படுத்த, அவன் சும்மா கேட்கவில்லை, நிஜமாகவே கேட்கிறான் என்பதை உணர்ந்த தாத்தா, சிறிது நேரம் தீவிரமாகச் சிந்தித்தார்.

"முதல்ல, இந்த மாதிரி முட்டாள் தனமா நினைக்கிறது நிறுத்து" முதல் முறையாக தன் பேரனை கடிந்துகொண்ட தாத்தா, கொஞ்சம் தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு

"நீ என்னோட புள்ள, என்னோட வளர்ப்பு!! உனக்கு எல்லா தகுதியும், திறமையும் இருக்கு!!. ஆனா பிஸினஸ்ங்கிறது, வெறுமனே காசு சம்பாதிக்கிறதுக்கு இல்ல!!, நம்மள நம்பி, நேரடியாகவும் மறைமுகமாகவும் குறைந்தபட்சம், ஒரு, லட்சம் பேராவது இருக்காங்க!!. அத்தனை பேரோட வாழ்க்கைக்கும் ஆதாரமா, நம்ம பண்ணுற தொழில்கள் இருக்கு!!. இது எல்லாம், நான் ஏற்கனவே உனக்கு சொன்னது தான்!! இன்ஜினியரிங் வேண்டாம், டிராப் பண்ணிக்க, நீ காலேஜ் சேரும் போதே, நான் சொன்ன மாதிரி, USலையோ, UKலையோ, போய், ஏதாவது பிசினஸ் ஸ்கூலில் சேர்ந்து, ரெண்டு, மூணு, டிப்ளமோ பண்ணிட்டு வா!! தொழில் பண்ணுவதற்கு உத்வேகம் இருக்கிற, அதே அளவுக்கு, அது சார்ந்த புரிதலும் இருக்கணும்!! நான் சொல்றதை செய், நீ திரும்ப வந்ததும், நீ கேட்டதை நான் செய்கிறேன்!!" மணி என் கன்னத்தை தடவிவர், அவனைப்பார்த்து புன்னகைத்தார். மறுப்பையும், அவனை பெரிதாக காயப்படுத்தாதவாறு தெரிவித்தவர், அதே நேரம் அவனது ஆசையை அடைவதற்கான, வழியையும் தெளிவாக காட்டினார். அதன்பின் எதுவும் பேசவில்லை மணி.

***************

மனி தன் தாத்தாவிடம் "என்ன நம்ம குரூப் போட சேர்மன் ஆக்குங்க!!" என்று கேட்ட, அதே நாள், மாலை, டெல்லியில்.

"என்னதான் ஆச்சு?" என்று கேட்ட, ரஞ்சித்தை நிமிர்ந்து பார்த்தாள் மது.

கோயம்புத்தூரில் இருந்து திரும்பி வந்த மதுவை முதல் முறை கண்டதுமே, ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று உணர்ந்து கொண்டவன், அவளாகவே சொல்லட்டும் என்று பொறுமை காத்தான். அந்தப் பொறுமை, சிறிது நேரத்திற்கு முன், அவள் கல்லூரிக்கு அருகில் உள்ள பிரபல மருத்துவமனையில், இரவு டூட்டி டாக்டராக, சேர்ந்தது தெரிந்தும், பறந்து போனது அவனது பொறுமை. பொறுக்க மாட்டாமல் கேட்டு விட்டான், அவன் கேட்டதுமே கண்ணீர் வடிக்க ஆரம்பித்தாள் மது.

"வேணாம், வேணாம், நீ எதுவும் சொல்ல வேண்டாம்!! இட்ஸ் ஓகே!! இட்ஸ் ஓகே!! டேக் யுவர் டைம்!!" பதறியவனைப் பார்த்ததும், கண்ணீரை துடைத்தவள்.

"செத்துட்டான்!!" மீண்டும் அழுதாள்.

"வாட்?" அதிர்ச்சியில், தன் காதில் விழுந்ததை, நம்ப முடியாமல், திரும்ப கேட்டவனிடம்

"நான் கோயம்புத்தூர் போன அன்னைக்கு, நடந்த ஒரு ஆக்ஸிடெண்ட்ல, அவன் செத்துட்டான்!!" அன்று அவனுக்கு உண்மையிலேயே நிகழ்ந்த விபத்தை அறியாமல், அழுகையின் ஊடே, தனக்கு தானே சொல்லிக்கொண்டதை, ரஞ்சித்துக்கும் சொன்னவள், அவனிடம் "ஸாரி!!” என்று சொல்லிவிட்டு, விடுதியை நோக்கி நடந்தாள், அழுதவாறே.

அதிர்ந்து போய், அழுது கொண்டு செல்லும் மதுவையே பார்த்துக்கொண்டிருந்தான் ரஞ்சித். அவள் சொன்னதை கிரகித்துக் கொண்டவன், நம்புவதா? வேண்டாமா? என்று குழம்பிப் போனான். அவள் சொன்னதில் சந்தேகம் இருந்தாலும், அவள் சொன்ன விதத்தில் அது உண்மையாய் இருக்குமோ? என்று நினைக்க, அவளுக்கு கண்ணீரை வரவழைத்த அதே வலி அவனுக்குள்ளும், இரண்டாம் முறையாக.

அறைக்கு வந்தவள், வாய்விட்டு அழுதாள். அவன் கட்டிய தாலியை கோர்த்து மாட்டி இருந்த தங்கச் சங்கிலியை, கழட்டி வீசிஎறிந்தவள், அடக்க மாட்டாமல் அழுதாள். ஆவேசம் கொண்டவளாக கண்ணீரை துடைத்துவிட்டு, முகம் கழுவி, கிளம்பி, தான் புதிதாக சேர்ந்திருக்கும் வேலைக்கு சென்றாள். அவளைப் பொறுத்தவரை, அவளுக்கு அம்மாவும் இல்லை, அவனும் இல்லை. இருவரும் இறந்து விட்டதாகவே, தன் நெஞ்சில் நிலைநிறுத்திக் கொண்டாள்.

*************

"தாத்தா, எனக்குப் பெரியப்பாவோட சமாதிக்கு போகனும்!!" காலையில், திடீரென்று என்னை சேர்மன் ஆக்குங்கள் என்று கேட்பதைப் போலவே, மாலையும் தன் பேரன் சொல்ல,

"நானே, உன்ன கூட்டிட்டு போகணும் தான் இருந்தேன், போகலாம்!!" தன் பேரன் வாய் விட்டு காலையில் பேசியதில், கொஞ்சம் நிம்மதி அடைந்தவர், அவன் வெளியே செல்ல பிரியப்படுகிறேன் என்றதும், உண்மையில் கொஞ்சம் மகிழ்ந்து தான் போனார்.

"இல்ல, தாத்தா எனக்கு தனியா போகனும்!!" என்ற மணியை, சில நொடி கேள்வியாக பார்த்தவர், பின் அதற்கும் சம்மதித்து, அனுப்பி வைத்தார். அனுப்பி வைக்கும் முன், டிரைவரை தனியாக அழைத்து, எப்பொழுதும் மணியின் மீது ஒரு கண்ணுடன் இருக்கும் படியும், வண்டி ஓட்டும் போது கூடுதல் கவனத்துடன் ஓட்டும்படிம், அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்.

**************

தன் பெரியப்பாவின் சமாதியை நோக்கி கொண்டு இருந்தவள்,

"அண்ணா, பசிக்குது ஏதாவது வாங்கிட்டு வரீங்களா?" டிரைவரிடம் கேட்டான் மணி. அவரோ அவனை தனியாக விட்டுச் செல்ல தயங்க,

"ப்ளீஸ்!!" அவரின் தயக்கம் உணர்ந்து, அவன் கெஞ்ச, பெரும் செல்வந்த குடும்பத்தின் வாரிசு, அவர்களிடம் டிரைவராக வேலை பார்க்கும், தன்னிடம் பசிக்குது என்று கெஞ்ச, மிகவும் சங்கடமாக உணர்ந்தார், அந்த ஓட்டுநர்.

"இல்ல தம்பி, தாத்தா உங்களைத் தனியாக விட்டு எங்கேயும் போகக்கூடாதுன்னு சொல்லிருக்காங்க !!" சங்கடத்திலும், தயக்கமாக சொன்னார்.

"இருங்க, நான் தாத்தா கிட்ட பர்மிஷன் கேட்கிறேன்!!" அவன் அலைபேசியை எடுக்க,

"வேண்டாம் தம்பி!! வேண்டாம்!! என்ன வேணும் சொல்லுங்க வாங்கிட்டு வரேன்!!"

"ஏதாவது சூடா வாங்கிட்டு வாங்க!!"

"சரி தம்பி!!" என்றவர், அங்கிருந்து கிளம்பினார்.

மீண்டும் மணி, தன் பார்வையை, தன் பெரியப்பாவின் சமாதியின் மேல் பதித்தான். ஏனோ, அந்த சமாதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த, தன் பெரியப்பாவுக்கும், தனக்கும் பெரிய வித்தியாசமில்லை என்று தோன்றியது அவனுக்கு. தன்னைப் போலவே, அவரும் ஒரு சபிக்கப்பட்ட ஜீவனாகவே தோன்றினார். பெரும் செல்வந்தனாக, ராஜாவைப் போல ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்க வேண்டியவர், எதுவுமே வேண்டாம் என்று, சாமியாராய் வாழ்ந்து, ஜீவசமாதியாகிப் போனார். இன்று, ஊர் அவரை ஒரு சித்தர் என்று வணங்கினாலும், தான் வாழும்வரை, ஒரு பரதேசிகவே வாழ்ந்தவர். தன் வாழ்க்கையும் அப்படித்தான் ஆகப்போகிறதோ, இதையறிந்து தான் அவர் பெயரை தனக்கும் வைத்தார்களோ? என்று அவன் சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது, அந்த சிந்தனையை கலைக்கும் விதமாக அந்த சத்தம் கேட்டது.

"என்ன சாமி, ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல!!" தன் அளவை காட்டிலும், ஒரு சைஸ் அதிகம் இருந்த சட்டையும், பேண்டும், அனிந்த ஒருவர், இவன் அருகில் அமர்ந்தவாறு கேட்டார்.

வயது எப்படியும் அம்பதுக்கு மேல் இருக்கலாம். கண்டிப்பாக வீடு இல்லாமல் சுற்றித் திரியும் ஒருவர். சாமியாராகவோ, அல்லது பிச்சைக்காராகவோ அல்லது இரண்டுமாகவோ இருக்கலாம். எண்ணை வைத்து, வடித்து வாரப்பட்ட தலை, வருடக்கணக்கில் மழிக்கப்படாத, நெஞ்சின் பாதி வரை வளர்ந்திருக்கும் தாடி.

"என்ன சாமி சந்தோஷமா இருக்கீங்க போல", வைத்த கண் வாங்காமல் நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்த மணியைப் பார்த்து, மீண்டும் கேட்டார், அவர்.

பதில் சொல்லாமல் சிரித்தான் அவன். அவரின் கோலம் கண்டு சிரித்தானா? அல்லது தன்நிலை உணர்ந்து சரிதானா? என்பதை அவன் மட்டுமே அறிவான்.

"கண்ணாடி போடலைன்னா, கண்ணே அவிஞ்சுரும் போல, என்னா வெயிலு!! என்னா வெயிலு!!" என்றவாறு தனது சட்டைப் பையிலிருந்து, ஒரு கண்ணாடியை எடுத்து அணிந்தார் அவர். அரசாங்க மருத்துவமனையில் கண் சிகிச்சை பெற்றால் கொடுக்கபடும், முகத்தை மொத்தமாக மறைக்கும், கருப்பு கண்ணாடி.

"என்ன சாமி!! வரம் வாங்கிட்டு வந்திருக்கீங்க போல!!", அவன் அருகில் அமர்ந்தவாறு, அவனை விடுவதாய் இல்லை அவர்.

அவர் அமர்ந்ததும் எழுந்தவன், தனது சட்டைப் பையில் இருந்து, சில இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை எடுத்து, அவரை நோக்கி நீட்டினான். வாங்கியவர் வாங்கிய பணத்தை எண்ணிப் பார்த்துவிட்டு, ஒரே, ஒரு இரண்டாயிரம் ரூபாயை மட்டும் வைத்துக் கொண்டு, மீதியை அவனிடமே திருப்பித் தந்தார். வேண்டாம் என்பதை போல வாங்க மறுத்த அவனிடம்

"இம்புட்டு காசு வேண்டாம் சாமி!! போலீஸ் பிடிச்ச, திருட்டு பயனு சொல்லுவாங்க!!" அவர் சொல்ல, லேசாக சிரித்தான். அவர் கொடுத்த நோட்டுகளை எடுத்து மீண்டும் தனது சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டான்.

"சாமி!! வலி கத்துக் கொடுக்கிறத போல, வாழ்க்கையை வேற எதுவுமே கத்து கொடுக்காது!! வலிங்கிறது, வாழ்க்கையில ஒரு மனுசனுக்கு கிடைக்கிற பெரியவரம்!! உங்களுக்கு, இந்த சின்ன வயசுலயே கிடைச்சிருக்கு!!" காலை ஆட்டிக் கொண்டிருந்தவர், அதை நிறுத்தி, பின் சம்மணமிட்டு அமர்ந்தவர், மணியை ஊடுருவிப் பார்த்தார்.

"வலிங்கிறது, இரண்டு பக்கமும் கூரான கத்தி மாதிரி!! பிடிய கைகொள்ளுறதுதான் இதுல வித்தையே!! பிடி எதிரியோட கையில இருந்தா வலி உனக்கு, அதே பிடி உன் கையில இருந்தா?...................” கேள்வியுடன் நிறுத்தியவர், பின் அவனைப் பார்த்து சிரித்தார்.

"அந்தப் பிடியை தேடிப் பிடி!!, அப்புறம் நீ தான் ராஜா!!" தன் தொடையில் தட்டியவர், பின் தாடியைத் தடவினார்.

"ஆத்திரக்காரன் கையில இருக்கிற ஆயுதம், எப்பவவுமே அவனுக்கு வலியைத்தான் கொடுக்கும்!! இதே, கோபக்காரன் கையில இருக்குற ஆயுதம், எதிரியின் குலத்தையே அழிக்கும்!!” தாடிக்குள் விரல் விட்டு, சிக்கெடுத்தார்.

"உன்னோட பிடில இருந்தா, அதுக்கு பேர் கோபம்!! அதோட பிடிப்புள்ள, நீ இருந்தா, அதுக்கு பேரு ஆத்திரம்!! அறிவுள்ளவன் அத்திரப்படமாட்டான், அவனுக்கு கோபம் தான் வரும்!!" என்றவர் சுற்றிலும் துடைத்து விட்டு அப்படியே மல்லாந்து படுத்து கண்களை மூடிக்கொண்டார்.

முதலில் அவரை உதாசீனப்படுத்தி, அங்கிருந்து செல்லத்தான் எழுந்தான் மணி. அவர் பேசப்பேச, ஏதோ அவர் பேச்சுக்கு கட்டுப்பட்டவன் போல், நின்ற இடத்திலேயே நின்று விட்டான். அவர் படுத்த பின்பும், ஏதாவது பேசுவாரா என்று எதிர்பார்த்து காத்து நின்றவன், இனி அவர் பேச போவதில்லை என்று உணர்ந்து, அங்கிருந்து அப்படியே மெதுவாக ரோட்டை நோக்கி நடந்தான்.

இன்று காலை தாத்தாவின் மறுப்பு, எனோ அவனுக்கு பெரிதாக வலித்தது. ஆக்சிடென்ட், ஆனதிலிருந்து அவன் மீது எல்லாரும் அனுதாபம் காட்ட, எங்கிருந்தோ வந்த ஒரு பிச்சைக்காரனோ, சாமியாரோ, அதை வரம் என்று சொல்ல, அது அவனுள் ஏதோ ஒன்றை விதைத்தது. அதுவரை குற்ற உணர்ச்சியிலும், கழிவிரக்கத்திலும் உழண்டு கொண்டிருந்தவனின் எண்ணம், ஏதோ ஒன்றை தீவிரமாக ஆராய்ந்தது.

******************

வீட்டுக்கு வந்த மண்ணின் முகம் கொஞ்சம் தெளிவாய் இருக்க, பெரியவர்கள் மூவரும் கொஞ்சம் நிம்மதியாக மூச்சு விட்டனர். ஆனால், அது அன்று இரவு வரை மட்டுமே நீடித்தது. இரவு அனைவரும் சாப்பிட்டு முடித்தபின், அமர்ந்து பேசிக் கொண்டிருக்க அதுவரை அமைதியாக இருந்த மணி,

"தாத்தா நான் கோயம்புத்தூர் போறேன்" தன் விரித்து வைத்த உள்ளங்கையை பார்த்தபடி
சொன்னான்.

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், அவர் அமைதியாக இருக்க, நிமிர்ந்து அவரை பார்த்தவன்

"என்ன நான் பாத்துக்குறேன் தாத்தா!! நீங்க பயப்படாதீங்க!!" சொன்னவன் பார்வையிலும் வார்த்தையிலும் இருந்து, அவர் தெரிந்துகொண்டது, ஒன்றே ஒன்றுதான், அவன் அனுமதி கேட்கவில்லை, செய்தி சொல்கிறான் என்பது தான் அது.

"காட்டுக்கு ராஜானாலும்...... 
சிங்கம்!! காட்டுல தான் இருக்கணும்!! 
சிங்கமாவே இருந்தாலும்,...... 
சர்க்கஸ்னு வந்துட்டா!!
சலாம் போட்டுத் தான் ஆகணும்!!
இல்லனா......... சாட்டையில தான், வாங்கணும்!!”

தன் பெரியப்பாவின் சமாதியின் வாயிலை அவன் நெருங்க, படுத்திருந்த அந்த பிச்சைக்கார சாமியார், பெருங்குரல் எடுத்து, ராகமிட்டு பாடியது, அங்கிருந்து கிளம்பியது முதல், இப்பொழுது வரை, அவன் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது, உயிருள்ளவரை ஒலித்துக் கொண்டிருக்கும்.

*********************
[+] 6 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 14-12-2020, 03:30 PM



Users browsing this thread: 2 Guest(s)